லண்டனில் மிருதங்க இசையின் தனிப் பெரும் ஆசானாகத் திகழ்ந்த ஸ்ரீ கந்தையா ஆனந்த நடேசன் அவர்கள் கொரோனாவின் ஆரம்பத்தாக்குதலில் மறைந்த செய்தி துரதிஷ்டமானதாகும். குறிப்பாக அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்று இன்றும் அக்கலையை ஆர்வத்தோடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் குமுறல்கள் மனதை உருக்கும் செய்தியாகும். இவ்விதம் அவரிடம் மிருதங்ககலையைப் பயின்ற இளம் கலைஞர்கள் அவரது 2ஆவது வருட நினைவை கலை வடிவங்களாக்கி பல்வேறு தடங்கல்களின் பின்னர் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
கடந்த வாரம் லண்டன் ‘ஹரோ ஆட் சென்ரறில்’ ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்களிடம் மிருதங்கக்கலை பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து கலை நிகழ்வை நடாத்தியமை தமது குருவின் மீதுள்ள அன்பை நினைவிருத்தி விளம்பி நின்றது. ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்கள் மிருதங்கக்கலை மாத்திரமன்றி கஞ்சிரா, கடம், முகர்சிங், தபேலா, தவில் போன்ற தாள வாத்தியங்களிலும் தேர்ச்சி பெற்றவராவார். இத்தகைய கலைகளை தமது மாணவச்செல்வங்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார் என்பதை இவருக்கான அஞ்சலியின்போது கலை ரசிகர்களால் அவதானிக்க முடிந்தது.
ஸ்ரீ ஆனந்த நடேசன் அவர்களின் அன்பு மகள் சௌமியா அவர்களின் முன்னெடுப்பில் நடாத்தப்பட்ட இசைக்குழுவில் மகள் சௌமியாவின் பாடலுக்கு, அவரின் தந்தையின் மாணவர்கள் தத்தமது கலைவடிவங்களினூடாக அஞ்சலித்து அசத்தியிருந்தமை நெஞ்சை உருக்கியதொன்றாக அமைந்திருந்தது. ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்களால் மிருதங்க அரங்கேற்றம் கண்டுகொண்ட இளம்கலைஞர்கள் இணைந்து இசைக்கருவிகளை நேர்த்தியாகவும், இணக்கமுடனும் வாசித்து செவிக்கினிய இசையை அமைத்திருந்தமை மிகப் பாராட்டுக்குரிய விடயமாகும். இந்தவேளையில் எமது மகன் அகஸ்ரி யோகரட்னத்தின்; மிருதங்க அரங்கேற்றத்தை அவனின் பதினாறாவது வயதில் ஸ்ரீ ஆனந்தநடேசனின் அவர்களின் பதினாறாவது அரங்கேற்றத்தில் அமைந்து மிகச் சிறப்பாக லண்டனில் இடம்பெற்றதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
அருண் மகேஷ்வரன், ராம் சுப்ரமணியம், கிருஷன் பாஸ்கரன், நிருஷன், அகஸ்ரி யோகரட்ணம், மேவின் மகேந்திரன், பிரவீன் பிரதாபன், விருசிகன் ராஜாஜி மற்றும் பல இசைக் கலைஞர்கள் இணைந்து தத்தமது கலைவடிவங்களினுடாக அன்றைய நிகழ்வைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதற்கமைய இசைக்குழு உணர்ச்சி ததும்ப அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டுவது இங்கு பொருத்தமானதாகும். ஸ்ரீ ஆனந்த நடேசன் வாழ்ந்த காலத்தில் ஆண்டுதோறும் ‘ஆனந்தலயா’ கலை நிகழ்ச்சியை எப்படித் தனது மாணவர்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்வாரோ அதே பாணியில் அவரது மாணவர்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டவிதம் ஆசிரியரின் கற்பித்தல் முறையின் வெற்றியினை எடுத்து விளம்பியது. ‘ஆனந்தலயா’ நிகழ்வை தொடர்ந்து முன்னெடுத்துவரும் திரு. மகேந்திரன், திரு. சிவசுப்ரமணியம் குடும்பத்தினர்கள் போன்ற பலரதும் விடாமுயற்சிகள் நன்றிக்குரியவை.
அன்றைய இளையவர்களின் கலை அஞ்சலி நிகழ்ச்சியில் லண்டனில் அவருடன் நேரடியாகப் பல்வேறு கலைநிகழ்வுகளின் போது ‘தமக்கும் ஸ்ரீ ஆனந்த நடேசனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் பலர் பகிர்ந்துகொண்டமை மேலும் சிறப்பை ஏற்படுத்தியிருந்தது.
அன்றைய இளயவர்களின் அஞ்சலிக் கலை நிகழ்வில் ‘ஆனந்தகாப்பியம்’ என்ற சிறிய கையேட்டு நூல் ஒன்றும் வழங்கப்பட்டது. அதில் தெல்லிப்பழையூனியன், தெல்லிப்பழை மகாஜனா போன்ற கல்லூரிகளில் அவருடன்; கல்வி பயின்று தற்போது பல நாடுகளில் பரந்து வாழும் சக மாணவ, மாணவிகளின் அருமையான கல்லூரி அனுபவக் குறிப்புக்களைப் பகிர்ந்திருந்தனர். இதனைப் பார்வையிட்டபோது யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளுக்கு வாசகர்களையும் அழைத்துச் சென்றிருந்தது என்றால் மிகையாகாது.
மேற்கத்தைய இசை நிரம்பி வழியும் லண்டன் மாநகரில் கீழைத்தேய மிருதங்கக் கலையை தொடர்ந்தும் வளர்த்துவரும் இளஞ்சந்ததியினர்; என்றும் நிறைந்த பாராட்டுக்குரியவர்கள். தொடர்ந்தும் குருவின் நினைவோடு கலை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள் கூறி நிற்கின்றேன்.
18.11.2022
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.