மனித சமுதாயத்திற்குத் தொண்டுசெய்யும் குணசீலர்கள் அந்த லட்சியத்துடனேயே வாழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் காலத்தால் அழிந்து போவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலம் போகாது என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வைத்தியர் சமுல்.பி. கிறீன் அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆவார்.
அமெரிக்காவில் ‘கிறின் ஹில்’ என்னும் இடத்தில் 1822ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி உவில்லியம் ஈ.கிறின் தம்பதிகளுக்குப் புத்திரனாக சமுல் பிறந்தார். தனது பதினொராவது வயதில் தாயை இழந்தார். பத்துச் சகோதரர்களுடன் பிறந்த இவர் பலவித இன்னல்களையும் சமாளித்து உடலுழைப்பால் சம்பாதிக்கப் பழகிக் கொண்டார். விடாமுயற்சியும் சிக்கன முறைகளும் அவரது அன்றாட வாழ்வில் அவரது அருமையான அனுபவங்களாகின. பதின்ம வயதில் குமுறி வரும் உணர்ச்சிகளுக்கு அணைபோட்டு ஆக்க வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வைத்தியர் கிறீன்.
தனது பத்தொன்பதாவது வயதில் நியூயோர்க்கிலிருந்த வண. டாக்டர்; வர்கீஸ் அவர்களிடம் கடமை ஆற்றத் தொடங்கினார். சாதாரண எழுது வினைஞராகவே பணியாற்றத் தொடங்கிய சமுல் கிறீன் அவர்கள் தனது ஓய்வு நேரங்களைப் படிப்பதிலும், வாசிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தவர். வைத்தியத் துறையில் ஆர்வம் அதிகமாக அவரிடத்தில் மேலோங்கியிருந்தமையினால் வைத்தியக் கல்வியை மேற்கொண்டு சிறந்த வைத்தியராகத் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தார்.
நமது நாட்டிலே அடியெடுத்து வைத்துச் சமயத் துறையிலும், கல்வித் துறையிலும் ஈடுபட்டு, ஆலயங்களும், பாடசாலைகளும் நிறுவிய அமெரிக்க மிஷன் ஊழியர்கள் வைத்தியத் துறையிலும் சேவை செய்ய ஆரம்பித்தமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். 1819 ஆம் ஆண்டிலே வைத்திய சேவையையும் ஆரம்பிப்பதெனத் தீர்மானித்து, யாழ்ப்பாணத்திற்கு ஊழியரை அனுப்பியதுடன், வைத்திய மிஷனரிச் சேவை அங்குரார்ப்பணமும் செய்யப்பட்டது. அமெரிக்க மிஷனில் வைத்திய சேவையை ஆரம்பித்து நடத்தவென டாக்டர் யோன் ஸ்கடர் தம்பதியர் அமெரிக்காவலிருந்து யாழ்ப்பாணம் வந்தனர். அவர்களின் முதலாவது வைத்திய நிலையம், 1820 ஆம் ஆண்டு பண்டத்தரிப்பிலேயே நிறுவப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து வைத்திய சேவை செய்ய வந்த வைத்தியர்கள் பத்து ஆண்டுகளின் பின் அவர்களின் சேவைக்காலம் முடிந்துவிடும். ஓவ்வொரு பத்தாண்டுகளின் பின் வேறு வைத்தியர் அச்சேவையை மேற்கொண்டு முன்னெடுத்துப் பணியாற்றிய பின் தங்கள் தாயகம் திரும்பிவிடுவர். அந்த வகையில் வந்து சேர்ந்தவர்தான் சமுல் கிறீன் வைத்தியா ஆவார்
1847ஆம ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம திகதி அமெரிக்காவிலிருந்து கிறீன் வைத்தியர் செப்டம்பர் மாதம் சென்னையை அடைந்தார். பின் சென்னையிலிருந்து புறப்பட்டு அக்டோபர் மாதம் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார் என்று அறிய முடிகின்றது. அன்று வல்வெட்டித்துறையில் அமெரிக்க மிஷன் நிலையம் ஒன்று இருந்தது. பின்பு அன்றைய மிஷனின் சேவைத்தலங்களாக தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, மானிப்பாய், உடுவில், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களையும் பார்வையிட்டபின் வைத்திய சேவையை ஆரம்பித்தார்.
1848 ஆம் ஆண்டில் வைத்திய நிலையம் மானிப்பாய்க்கு மாற்றப்பட்டதோடு, கிறீன் வைத்தியரும் மானிப்பாய் வந்து சேர்ந்தார். அமெரிக்க மிஷனின் மத்திய வைத்திய நிலையமாக இன்றும் மானிப்பாயே விளங்குகின்றது. கிறின் வைத்தியரின் ஞாபகார்த்த வைத்தியசாலை இன்னும் தொடர்ந்து அருந்தொண்டு புரிவதை நாம் அறியமுடிகின்றது. வைத்திய சேவையை ஆரம்பித்த காலத்திலேயே வைத்தியர் ஸ்கடர் ஆர்வமுள்ள சிலருக்கு ஆங்கில மொழியல் வைத்தியத்தைக் கற்பித்தபோது, யாழ்ப்பாண மக்களுடன் கூடி வாழ்ந்த கிறீன் வைத்தியரே சமுதாயத்தில் மேலநாட்டு வைத்தியமும், விஞ்ஞானமும் தமிழில் பரவினால்த்தான் மக்கள் நிஜமாகப் பயனடைவார்கள் என நம்பினார்.
அமெரிக்காவில் இருந்த காலத்திலேயே வைத்தியர் கிறீன் அவர்கள் தமிழ் மொழியை ஓரளவு கற்க முடிந்ததாக அறிய முடிகின்றது. ஆனால் ஆங்கிலம், லத்தீன், ஜேர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்று சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதது.
இவ்விதம் மொழிகளில் ஆர்வம் கொண்ட வைத்தியர் கிறீன் அவர்கள் முதன் முதலில் மொழிபெயர்ப்பதற்கென எடுத்துக்கொண்ட நூல் டாக்டர் ‘கொல்வின் கட்லர்’ இயற்றிய ‘அங்காதிபாதம்’ ஆகும். 1851 ஆம் ஆண்டு வைத்தியர் கிறீனினால் மேற்கொண்ட இம்முயற்சி அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஏற்படுத்தியது.
இற்றைக்கு நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் விஞ்ஞானத்தைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்ட கீறீன் வைத்தியர் மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறிய கருத்துக்கள் இன்றும் பொருத்தமானதாக நினைவிருத்தக்கூடிய ஒன்றாகும். ‘எழுத்துக்கு எழுத்தும், சொல்லுக்குச் சொல்லுமாக வாக்கியங்களை மொழிபெயர்த்தல் உண்மையிலேயே சித்திரவதையாகும், உயிரை எடுத்து ஊன உடலை நடமாட விடுவதாகும். மொழிபெயர்ப்பில் கருத்துத்தான் முக்கியம். மூல நூலாசிரியன் கூறும் பொருளை, உள்ளது உள்ளவாறு உயிருடன் தருவதே உண்மை மொழிபெயர்ப்பாகும்’ என்கின்றார் வைத்தியர் கிறீன்.
இவ்வித எழுத்து நுட்பங்களைக் கையாண்டு ‘அங்காதிபாதம்;’, கெமிஸ்தம்’, ‘மனுஷ சுகரணம்’, ‘இரண வைத்தியம்’, ‘வைத்தியம்’, ‘வைத்திய கைவாகடம்’. ‘குழந்தைகள்’, ‘பெண்கள் ஆகியோரின் நோய்கள்’, ‘கலைச்சொற்கள்’, ‘அருஞ்சொற்களை அடக்கிய அகராதி’ போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர் வைத்தியர் கிறீன் அவர்கள்.
சமயத் துiயில் ஊழியஞ் செய்ய அன்று வந்த மிஷனரிமார் அனைவரும் அந்த மன உணர்வுடைய உண்மைத் தொண்டரே! எனினும் வைத்தியமும் விஞ்ஞானமும் கற்றுத் தேறிய கிறீன் வைத்தியர், சமயப்பண்புடனும் உணர்வுடனும் செயலாற்றித் தனிச் சிறப்பெய்தினார். தமிழுக்குப் புதிரான விஞ்ஞானத் துறையில் நின்று பணி புரிந்தார். தமிழில் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்தி அத்துறையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
தமிழுக்கோ அது புதியதோர் துறை. அன்றைய கால கட்டத்தில் தமிழ் கற்றவர்களுக்கு விஞ்ஞானத் துறையில் ஆர்வம் இருக்கவில்லை. ஆங்கில மொழியிலேனும் விஞ்ஞானம் குறித்த பார்வை மக்களிடையே பரவி இருக்க வில்லை. அந்த வகையில் நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிறீன் வைத்தியர் தமிழ்த் தொண்டாற்றியமை மிகப் பெரும் பாராட்டுக்குரிய விடயமாகும். இன்று நாம் நவீன காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், கிறீன் வைத்தியரின் அரும் பெரும் சேவைகளையும், தமிழ் மக்களுக்காற்றிய தமிழ்த்தொண்டினையும் நாம் அனைவரும் இவ்வேளை நன்றியுடன் கௌரவிப்போமாக!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.