அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக நேரம் அவளால் அனுபவிக்க முடியவில்லை. பூப்போன்ற சின்னஞ் சிறிய அந்த உதடுகளின் தேடலில் அங்கே சுரப்பதற்கு எதுவுமில்லை என்று தெரிந்த போது குழந்தையின் ‘வீல்’ என்ற அந்த அலறல் சத்தம்தான் அவளது செவிகளில் முட்டி மோதி நின்றது.
வெறுமையின் தாக்கம் ஏற்படுத்திய குழந்தையின் ஆக்ரோசத்தவிப்பை அவளால் அப்போதுதான் முழுமையாக உணரமுடிந்தது. அதுவே அவளது உணர்வுகளின் பிரவாகமாய் ஒருகணம் அவளை உடைந்து போகவும் வைத்தது. அடுத்த கணமே அந்த உணர்வின் தாக்கம் ஏற்படுத்திய இயலாமையின் வெளிப்பாடாய் அந்தத் தாய் மனசு ஓவென்று விம்மி வெடித்தது. பொட்டென்று மார்பில் விழுந்து வழிந்த கண்ணீர் துளிகள் முகம் புதைத்து அழுத குழந்தையின் உதட்டில் படிந்த போது வாய்விட்டு வெளியே சொல்லத் தெரியாத அந்தப் பிஞ்சின் அலறல் கூட ஒரு கணம் தேங்கி நின்றது.
‘அம்மா ஊட்டிய அமுதம் உப்புக் கரித்தது ஏன்?’ என்று அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. குழந்தையைச் சமாதானம் செய்ய வாய் திறந்து ‘ஆராரோ’ சொல்லித் தாலாட்டுப் பாடக்கூட முடியாத சூழ்நிலைக் கைதியாய் அவள் மாறியிருந்தாள். வாய்திறந்தால் வெளியே உதிர்வது தமிழாக இருந்ததால்தான் அவள் இந்த மண்ணில் இப்படியான அவலநிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அது பற்றிச் சிந்திக்க இதுவல்ல நேரம் என்பதால் அது பற்றிய கவலைகளை தற்காலிகமாக அவள் ஒரு புறம் தள்ளி வைத்திருந்தாள்.
பசி கண்ணை இருட்டிக் காதை அடைத்தது. இப்படியான பசிக்கொடுமையை அவள் ஒரு போதும் அனுபவித்ததில்லை. கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை அதுவும் குழந்தைகள் பரிதவிப்பதைப் பார்த்தபோது தூக்கம் கெட்ட இரவாய் எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடையதாய் அந்த இரவு அவளுக்கு அமைந்திருந்தது. கடைசிக் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அவளது கணவன் தொலைந்து போயிருந்தான். உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதுகூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நாடு இருந்தது. அதனால் குழந்தைகளின் பசியைப் போக்க யாரிடமாவது கையேந்த வேண்டிய நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். அகதியாய் சொந்த மண்ணிலே புலம் பெயர்ந்து இங்கே வந்தபோது, படித்திருந்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அரிசி ஆலை ஒன்றில் கூலி வேலைதான் அவள் செய்தாள்.
இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமக்கள் மட்டும் சந்தோஷமாய்க் காலம் களிக்க வடக்கு கிழக்கு, மலைநாடுகளில் வாழ்ந்த சிறுபான்மை இனமான தமிழர்கள் மட்டுமே அரசியல் லாபம் தேடியவர்களால் தினந்தினம், அல்லற்படுத்தப்பட்டு அழுதழுதே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
அடிப்படை உரிமைகளை வாய்திறந்து கேட்டதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய குற்றமாகக் கணிக்கப்பட்டது. அகிம்சை முறையில் போராடிய தமிழ் அரசியல் வாதிகள் அதனால் பலன் எதுவும் இல்லாமல் போகவே தாமாகவே ஒதுங்கிப் போய்விட இளைஞர்கள் அந்தப் போராட்டத்தை முன் எடுத்தார்கள். அரசியல் வாதிகள் யாருமே தமிழர்களின் குறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளவோ அல்லது அதன் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவோ மறுத்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டார்கள். அடங்கிப்போ என்ற கர்வத்தோடு அடக்கி ஆள்வதையே ஜனநாயகம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு பிரிந்து போவது என்பது அத்தனை இலகுவான காரியமாய் தமிழர்களுக்கு இருக்கவில்லை. அதில் உள்ள வேதனையும் வலியும் மற்றவர்களுக்கு இலகுவில் புரிவதுமில்லை. திடீரென அவர்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிப்பு வந்த போது இவர்கள் செய்வதறியாது குழம்பிப் போனார்கள். பாதுகாப்பு வலயம் என்று சொல்லி அவர்கள் ஏற்படுத்திய தடுப்பு முகாமுக்குள் போய் இவர்கள் முடங்க வேண்டிவந்தது. திறந்த வெளிச் சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு ஒதுங்க ஒரு மரநிழலும் குடிக்கத் தண்ணீரும் ஒருநேரம் அரை வயிறுக்கு ஏதாவது தின்னக் கொடுத்தால் போதும் என்ற நினைப்புத்தான் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. இதுதான் மனிதவாழ்க்கை என்றால் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு ஜனநாயகம் என்ற போர்வை எதற்கு என்பது பாதிக்கப்பட்ட இவர்களின் வினாவாக இருந்தது.
பாதுகாப்புக் கருதி பாதுகாப்பு முகாமுக்குச் சென்ற இளம் பெண்கள் களவாடப் படுகிறார்கள், ஆண்கள் தொலைந்து போகிறார்கள் குழந்தைகளும் சிறுவர்களும் தனிமைப் படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் இவள் தங்கியிருந்த பகுதியில் தினமும் செய்திகள் அடிபட்டுக் கொண்டே இருந்தன. வன்னிப்பகுதிக்குச் சென்றால் உயிருக்கு ஆபத்து தொலைந்துகூடப் போகலாம் என்று சொல்லி, பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டதால் எல்லாச் செய்திகளும் வேண்டும் என்றே முடக்கப் பட்டுவிட்டன. யார் தவறு செய்தாலும் தவறுதான் என்பதை வெளியே சொல்ல நல்ல மனம் படைத்த மனிதாபிமானிகள் கூடப் பயப்படுகிறார்கள். அப்படிச் சொல்ல வந்த ஒருசில பத்திரிகை ஆசிரியர்கள் முகவரி இல்லாமற் போனதும் கூட இவர்கள் பயப்படுவதற்கான முக்கிய காரணமாய் இருக்கலாம்.
தூக்கம் கலைந்த நிலையில் பசிக் கொடுமையை எப்படிப் போக்கலாம் என்று எண்ணியபோது அவள் முன்பு கூலி வேலை செய்த அரிசி குத்தும் ஆலையின் நினைவு வந்தது. சுமார் இரண்டு மைல் தூரத்திற்கப்பால் அந்த ஆலை இருந்தது. எட்டி நடந்தால் விரைவாக ஒருநடை போய் வரலாம் என்று நினைத்தாள். குழந்தைகள் இருவரும் இன்னமும் தூங்கினபடியே இருந்தன. இரவிரவாய் அழுததில் ஏற்பட்ட பசிக் களைப்பாக இருக்கலாம்.
குழந்தைகள் எழுந்திருக்கு முன்பாக வந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சுளகையும் (முறம்) எடுத்துக் கொண்டு ஒட்டமும் நடையுமாய்ச் சென்றாள். முதலாளியிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு சென்றவளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. தொழில் இல்லாத காரணத்தால் அரிசி ஆலை இழுத்து மூடப்பட்டிருந்தது. மூடப்பட்டுப் பல நாட்களாகி இருக்கலாம். கட்டிடத்தின் வெளிப்பகுதியில் அள்ளிக் குவிக்கப்பட்ட உமிக்குவியல் மட்டும் இவள் கண்களில் பட்டது. அவசரமாக கொஞ்ச உமியைக் கிளறிச் சுளகில் எடுத்துப் போட்டுக் கைகளால் பரப்பிப் பார்த்தாள். ஏதோ ஒருவித நம்பிக்கையின் பிடிப்பு அவளது கண்களில் பளீச்சென்று தெரிந்தது.
ஒவ்வொரு முறையும் உமியை அள்ளிப் போட்டுப் புடைக்கும் போது அவள் தேடிவந்தது கிடைக்கிறதா என்று ஆவலோடு தேடிப்பார்த்தாள். சப்பி நெற்கள்தான் அதிகமாக அகப்பட்டாலும் அவற்றைத் தவிர்த்துப் பார்த்த போது நாலைந்து நல்ல நெல்லுப் பருக்கைகளும் அவளது கையில் ஒவ்வொரு முறையும் அகப்பட்டன. அரை மணி நேரம் செலவிட்டதில் ஒரு சிறங்கை நல்ல நெற்கள் கிடைத்தன. கஞ்சி காய்ச்சிக் குழந்தைகளுக்குக் குடிக்கவாவது கொஞ்ச அரிசி கிடைத்தால் போதும் என்ற வெறியோடு அவள் துரிதமாகச் செயற்பட்டாள்.
எந்த நேரமும் வானத்தில் குண்டு வீச்சு விமானத்தின் இரைச்சல் கேட்கலாம். திக்குத் திசை தெரியாமல் செல்கூட அங்கே வந்து விழலாம். எதையுமே கணித்துச் சொல்லமுடியாத நிலையில் மயான சூழ்நிலையில் அந்தப் பிரதேசம் இருந்தது. பறவைகளின் கூடுகள்கூடக் கலைக்கப்பட்டதில் அவற்றின் ஓசை அடங்கிப் போயிருந்தது. செல்விழுந்து எரிந்துபோன மரங்களும் குடிசைகளும் மனித உடல்களும் ஆங்காங்கே தினமும் காணும் காட்சியாப் போய்விட்டது.
வியர்வையில் தோய்ந்த உடம்பு பிசுபிசுத்தது. அவ்வப்போது சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு நெல்மணிகளைப் பொறுக்கி எடுத்தாள். வெய்யில் உச்சியைத் தொட்டபோது ஐந்தாறு சிறங்கை நெல்மணிகளை கவனமாக எடுத்துப் பொன்னைப்போல மடியில் சேகரித்திருந்தாள். அதைக் கொண்டு போய் மெல்ல நெரித்து அரிசிப் பருக்கைகளாக்கி அவற்றைப் பொறுக்கிக் குழந்தைகளுக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்ததோடு வழியிலே நின்ற சண்டி மரத்து இலைகள் சிலவற்றையும் அவசரமாகப் பறித்துக் கொண்டு அவள் தங்கியிருந்த இடம் நோக்கி விறுவிறு என்று நடந்தாள்.
என்றோ ஒருநாள் உதயம் தோன்றும் குழந்தைகளை நன்றாய்ப் படிக்கவைத்து அவர்களை நல்ல பிரசைகள் ஆக்க வேண்டும் என்ற ஒரு தாயின் தீராத கனவுகளைச் சுமந்தவண்ணம் அவள் நம்பிக்கையோடு நடந்தாள்.
அடிப்படைத் தேவைக்கான உணவுப் பொருட்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் வருவதாகச் சொன்னார்களே தவிர அங்கே எதுவும் வந்து சேரவில்லை. வந்து சேர்ந்திருந்தாலும் தடுக்கப்பட்டிருக்கலாம். வன்னிப் பகுதியில் போர் உக்கிரமடைந்திருந்தது.
ஒருநேர உணவிற்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் தாங்கமுடியாமற் போனதில் அவளுக்குள் ஒருவித சோர்வும் சலிப்பும் குடிகொண்டது. இராணுவம் நன்கு திட்டமிட்டு உரிமைக்காகப் போராடியவர்களைப் பட்டினி போட்டால் அதைக் கைவிட்டு உணவுக்காகப் போராடுவார்கள் என்ற வஞ்சக நோக்கத்தோடு செயற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் வஞ்சக வலையில் வீழ்ந்ததால் உரிமையை மறந்து உணவிற்காகப் போராட வேண்டிய நிலைக்கு அந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டார்கள். அதனால்தான் இன்று இப்படியான மனித அவலத்தை அவர்கள் எதிர் நோக்க வேண்டிவந்தது.
சண்டி மரத்து இலையையோடு சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுத்து தானும் மிகுதியை அருந்தியதில் சற்றுத் தென்பாக இருப்பது போலத் தெரிந்தது. நம்பிக்கைகள் உடைந்துபோன தருணத்தில் அதுவே அவர்கள் உயிர்வாழ வழிகாட்டுவதாயும் இருந்தது. எனவே மறுநாள் காலையில் மீண்டும் எதிர்பார்ப்போடு அவள் அரிசி ஆலை நோக்கி நடந்தாள். அரிசி ஆலைக்கு அருகே சென்றபோது அவளது எண்ணத்தில் இடி விழுந்தது போல அங்கே கண்ட காட்சி இருந்தது. எரி குண்டுகள் பல அங்கே வந்து விழுந்து வெடித்ததில் அந்த நெல் குத்தும் ஆலையும் அதன் பின்பக்கத்தில் குவிக்கப்பட்டிருந்த உமி மேடும் சாம்பலாய்ப் போயிருந்தன. சில நாட்களாவது உயிர் வாழலாம் என்ற அவளது கடைசி நம்பிக்கையும் கண்முன்னால் சாம்பலாகிப் போயிருந்தது.
குழந்தைகள் பசியால் மீண்டும் வாடப்போகிறதே என்ற கவலையில் ஏமாற்றத்தோடு தங்கி இருந்த இடம் நோக்கி வேகமாகத் திரும்பியவளுக்கு இன்னும் அதிர்ச்சி காத்திருந்துது. இவள் தங்கியிருந்த பகுதியில் இருந்து வந்த ஒப்பாரி ஓசை தூரத்தில் வரும்போதே இவள் செவிகளைத் தொட்டு உறைய வைப்பதாய் இருந்தது. என்னவோ ஏதோ என்ற பதட்டத்தோடு ஒட்டமும் நடையுமாய் வந்தாள். இரத்தம் உறைந்த அவளது குழந்தைகளின் ஆடைகள்தான் அங்காங்கே சிதறிக் கிடந்தன. சிதறல்களைப் பார்த்த வினாடியே அதைத் தாங்க முடியாத அதிர்ச்சியில் அவள் அப்படியே உணர்வற்று விழுந்து போனாள்.
குழந்தைகளுக்காக உணவு தேடி அலையும் ஒரு அபலைத்தாயின் அலைச்சலைக்கூடப் பொறுக்க முடியாத ஆண்டவன் அவளுக்குக் கருணை செய்ய நினைத்திருக்கலாம். அதனால்தான் அவளைக் கேட்காமலே அவளது குழந்தைகளைத் தன்னிடம் தத்து எடுத்துக் கொண்டிருக்கலாம். விதியே விதியே என்செய்தாய் என்று விதிமீது பழிபோட்டு எல்லோரும் கண்மூடி மௌனம் காக்க,
அவளைப்போல பல பெண்கள் அந்த மண்ணில் சிறைப்பிடிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட, ஆடை களையும் துச்சாதன மிருகங்களுக்கு மத்தியில் துணையற்ற அவளும் தனிமரமாய்… வலியும் வேதனையும் சுமந்த கண்கள் குளமாக வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் எதையுமே வெளியே சொல்ல முடியாத ஊமைகளாய்… துப்பாக்கி ரவைகளுக்கு இரைகளாய், முடிவு தெரியாத பயணத்தில் தொலைந்து போனவர்களாய், இன்னும் எவ்வளவு காலம்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.