(பயனுள்ள மீள்பிரசுரம்) நூல் அறிமுகம்: பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’ - ஜெயமோகன் -
குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.
உரைநடையில் வரும் மாற்றம் என்பது உண்மையில் கண்ணோட்டத்தில் வரும் மாற்றமேயாகும். அதுவரை வாழ்க்கைக்கு அதீதமான விஷயங்களைப்பேசிவந்த இலக்கியம் சட்டென்று நேரடியான அன்றாட யதார்த்ததை நோக்கி திரும்பியது. யதார்த்தவாதம் இலக்கியத்தில் பிறந்தது. குஜராத்தி யதார்த்தவாதத்தில் காந்தியத்தாக்கம் மிகவும் அதிகம்.
காந்திய யுக படைப்பாளிகளில் முதன்மையானவர் பன்னாலால் பட்டேல். அவரது வாழ்க்கை ஒரு நாடகம் , மூலத்தில் ‘மானவீனீ பவாயி ‘ குஜராத்தி யதார்த்தவாதத்தின் ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. 1946ல் எழுதப்பட்டு 1973ல் தமிழில் மொழியாக்கம்செய்யபப்ட்ட இந்நாவல் இன்றும் அதன் அடிப்படையான சத்திய வேகத்தால் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.