நூலை பெற்றுக்கொள்வதற்கு: சவுத் விஷன் புக்ஸ், 491-B, G2 - ஓமேகா, பிளாட்ஸ், தரைத்தளம், நான்காம் இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம் , சென்னை - 600 091 மின்னஞ்சல் முகவரி - southvisionbooks@!gmail.com | தொலைபேசி இலக்கம் - 94453 18520
எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின் பிரதிபலிப்புகள்.
ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.
தற்போது ஜோதிகுமார் பதிவுகளில் எழுதிய கட்டுரைகளின் ஒரு தொகுதி சவுத் விசன் புக்ஸ் மற்றும் நந்தலாலா பதிப்பக வெளியீடாக 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றுள்ளன.
இக்கட்டுரைத்தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மலையகத்தமிழ் எழுத்தாளர் சி.வி.வெலுப்பிள்ளை போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளுடன் ஜெயமோகன், அசோகமித்திரனின் நாவல்கள் (ரப்பர், 18ஆவது அட்சக்கோடு) பற்றிய இலக்கியத் திறனாய்வுகளும் இடம் பெற்றுள்ளன.
ஜோதிகுமாரைப் பொறுத்தவரையில் தீவிரமான வாசிப்பாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் & இதழாசிரியர். அத்துடன் நல்லதோர் அரசியல் ஆய்வாளர். அவரது இலங்கை அரசியலைப்பற்றி, உபகண்ட மற்றும் சர்வதேச அரசிலையைப் பற்றி பதிவுகள் இணைய இதழில் வெளியான அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் முக்கியமானவை. அவை தனித்து ஒரு நூலாக வெளிவருவதும் அவசியம்.
- எழுத்தாளர் எல்.ஜோதிகுமார் -
அவர் தனது இலக்கியச் சார்ந்த் கருத்துகளில் உறுதியாக நிற்கின்றார். மிகவும் தெளிவாக இருக்கின்றார். எப்பொழுதுமே மக்கள் இலக்கியம் என்பதே அவரது எழுத்துகளின் பிரதான நோக்கமாகவிருக்கிறது. எப்பொழுதுமே எழுத்துகளை அவை அடித்தட்டு மக்களைச் சார்ந்து உள்ளனவா இல்லையா என்பதை வைத்தே அவர் படைப்புகளைத் தரம் பிரிக்கின்றார். எழுத்து, எழுத்தின் நோக்கம், அது யாருக்காக எழுதப்படுகின்றது போன்ற விடயங்களில் அவர் மிகவும் தெளிவாகவிருக்கின்றார். அவரது பரந்த வாசிப்பு சேக்ஸ்பியர் , மாக்சிம் கார்க்கி தொடக்கம் மகாகவி பாரதியார் வரை விரிந்து கிடக்கின்றது. இந்திய வரலாறு, உலக வரலாறு பற்றி அவருக்கு மிகவும் தெளிவான, தர்க்கரீதியிலான கருத்துகள் நிறையே இருக்கின்றன.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப, இந்நூலில் அசோகமித்திரனின் '18ஆன் அட்சக்கோடு' நாவலைப்பற்றிய அவரது அணுகுமுறை அவரது இலக்கிய, அரசியல் சார்ந்த அவரது ஆளுமையினைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. நாவலின் நாயகன் எவ்விதம் நடுத்தர வர்க்கத்துப் பிரதிநிதி. அவன் இலக்கியம், தேசபக்தி, இனங்களுக்கிடையிலான முரண்கள், அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் போன்றவற்றை எவ்விதம் கையாள்கின்றான் அல்லது அணுகுகின்றான் என்பதைப்பற்றி ஜோதிகுமார் மிகவும் விரிவாக , தெளிவாகத் திறனாய்வு செய்திருக்கின்றார். மேற்படி திறனாய்வில் அவர் சேக்ஸ்பியர், பாரதியார் , மாக்சிம் கார்க்கி மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் படைப்புகளை ஒப்பிட்டு , அசோகமித்திரன் பாரதியாரைப்போல் , மாக்சிம் கார்க்கியைப்போன்று மக்கள் இலக்கியம் படைக்கவில்லை. அவரது அணுகுமுறை ஜெயமோகன் போன்றவர்களின் அணுகுமுறையை ஒத்தது என்னும் கருத்துக்கு வருகின்றார். இத்திறனாய்வு அவரது பரந்த வாசிப்புக்கும், தர்க்கச் சிறப்புக்குமோர் எடுத்துக்காட்டாகவிருக்கின்றது.
நூலில் மறக்காமல் மேற்படி கட்டுரைகள் வெளியான பதிவுகள் இணைய இதழைக் குறிப்பிட்டிருக்கின்றார். அதற்காக அவருக்கு நன்றியைப் பதிவுகள் தெரிவிக்கின்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் பல கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்தில் வெளியாகியுள்ளன. அவரது கட்டுரைத்தொகுப்புகள் எவற்றிலும் அதற்கான நன்றி தெரிவிக்கப்பட்டதாக நான் அறிந்திருக்கவில்லை. அப்படி வந்திருந்தால் அறியத்தாருங்கள். இதுபோல் சுந்தரராமசாமியின் 'பிள்ளை கெடுத்தால் விளை' சிறுகதை பற்றி ஒரு விவாதே நடைபெற்றது. அதில் அதில் எழுத்தாளர்களான ரவிகுமார், யமுனா ராஜேந்திரன், R.P.ராஜநாயஹம் மற்றும் புதியமாதவி ஆகியோர் கலந்து கொண்டனர். அச்சிறுகதை பற்றிச் சஞ்சிகைகள், இணைய இதழ்களில் வெளியான விவாதங்களைத் தொகுத்துக் காலச்சுவடு நூலொன்றையும் வெளியிட்டதாக ஞாபகம். அதில் பதிவுகள் பற்றிக் குறிப்பிட்டதாக நினைவிலில்லை. இந்நிலையில் ஜோதிகுமார் மறக்காமல் பதிவுகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது முக்கியமானது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.