* ஓவியம் - AI
ஊருக்கு ஊர் வட்டார வழக்கொன்று இருந்தது. வட்டார வழக்கிலும் சந்தங்கள் வந்து விழுந்தன.உமிய உமிய வாய்க்குள் கரையும் வெல்லமாய் அதுவும் தித்தித்தது. தமிழுக்கு அமுதென்று இப்படித்தான் பெயர் வந்திருக்கக்கூடுமோ? அதனால்தான், எம்மவர் தை + பொங்கல்= தைப் பொங்கல் என்றே சொல்லிச்சொல்லி தாய்த்தமிழையும் சுவைத்துக்கொண்டனர்.
ஊரென்றால் தடல்புடலாய் பொங்கல் களைகட்டும்.கடைகளிலும் சனம் நிரம்பி வழியும். மாம்பழம், வாழைப்பழம்,மஞ்சள் இலை,இஞ்சி இலை,தலை வாழையிலை, மாவிலை, கரும்பு, பானை, அகப்பை என்று கடை புதுப்பொலிவோட பரந்து கிடக்கும். அயலில இருக்கின்ற தில்லைநாதனின்ர வாடிக்கைக்கடைக்குப்போனால் காத்து நின்று வாங்கிற சனங்களின்ர ஆரவாரத்தில 'சீ வேணாம்' எண்டு போயிடும். கால்களும் உழையத்தொடங்கீடும். பொறுமையிழந்து வீட்டை திரும்பி வந்து, அம்மாவிட்ட பேச்சும் வாங்கிக்கொண்டு,மனசுக்குள்ள புறுபுறுத்துக் கொண்டு திரும்பப்போய் அந்த நெருக்கடிக்குள்ள வேர்க்க விறுவிறக்க இடிபட்டு சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில கொடுத்ததை எப்படி மறக்கிறது? அதுக்குள்ளேயும் சுவாரஸ்யமும், அன்பும், ஆனந்தமும் நிரம்பி வழிந்தால் எப்படி இவற்றை மறக்க முடியும்?
ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளேயும் கவலை இருந்தாலும், தைப்பொங்கலும் வரப்போகுது, கொஞ்சம் கொஞ்சமா இப்பவே ஆயத்தப்படுத்தினால் தான்..என்று அம்மம்மாவோ,அம்மாவோ பேச்சை ஆரம்பிக்கும்போதே முகத்தில ஒரு பூரிப்புத்தெரியும். கொஞ்ச நாட்களாக மனங்களையும் பரவசத்தில வைச்சிருக்கும்.
வெயிலும் மெல்லத் தாழ அப்பாவும் கோடிக்குள்ள நல்ல இடம் பார்த்து மண்வெட்டியை நல்லா ஓங்கிப்போட்டு, கொத்தி, அடுப்புக்கு மண்ணைக் கோலி எடுப்பார். அம்மாவும் சேர்ந்து நல்ல பதமான மண்ணாப்பார்த்து பிரித்து எடுத்து தண்ணியும் அளவா விட்டுப்பிசைஞ்சு எடுப்பா. கிணத்தில பாவிச்ச வெள்ளி வாளியை எடுத்து அதுக்குள்ள மண்ணைப்போட்டு நிரப்பி கவனமா, பக்குவமா பொங்கலுக்கு பொங்கல் அடுப்பு அங்கே வாளியிலிருந்து பிரிந்து மீண்டும் நிலத்தில் தன்னைச்சாய்த்துக்கொள்ளும். பக்தியும்,பக்குவமும்,நம்பிக்கையும் ஒட்டிக்கிடந்த வாழ்வது. எதிலும் அறமும்,அன்பும் திளைத்திருந்து வாழ்வின் புரிதல் ஒன்றிப்பிணைந்திருந்த பொற்காலம்.
இரண்டு கிழமையாக அடுப்பை காயவைத்து, அவை வெடித்திராமல் கவனித்து,மீண்டும் அதை முதலில் களிமண்ணால் மெழுகி,முடிவில் சாணத்தால் மெழுகி, வீபூதிக்குறியிட்டு, சந்தனம், குங்குமம் எனப்பொட்டும் வைத்து அதைக்கூட குலதெய்வமாய்க் கும்பிட்டு ஒரு மூலையில் எம் குடும்பத்தலைவன் வைக்கும்போதே அப்பாவின் தேகம் சிலிர்க்கும். கண்கள் கசியும் .வாழ்தலின் அர்த்தங்களைத் தைப் பொங்கல்கூட எம்மோடிணைந்து உணர்த்திக்கொண்டேயிருந்தது.
'வாழ ஒரு குடிசைபோதும்' என்றுணர்த்தியதே எமக்கான பொங்கல்தான். மர உலக்கையை நேரே வைத்து அதன்மேலே மாத்தூவி கோடிட்ட நாலு வாசல் கொண்ட மாக் கோலங்கள். முற்றத்தின் ஒரு மூலையில் பொங்கல் அடுப்புகள். நடுவில நிறைகுடம் குத்துவிளக்கு. சுத்திவர அழகா வாசல்களாக வளைத்துப்போட்ட கோலங்களாய் அம்மாவின் சித்திரக்கலை. இடையிடையே யானையும் தாமரைப்பூவுமாய் பொட்டுப்பொட்டாய் வந்து விழுந்த வர்ணம் நிறைந்த என் ஓவியங்கள்.
இந்த வடிவத்தை தயார்படுத்துவதற்கே ஒருநாள் போதாது.முதலில் படத்தை வரையவேண்டும். அடுத்து ஓவியத்தின்மேல் சரிசமமாக இடைவெளிவிட்டு பொட்டுப்பொட்டாக நெருப்பால் ஓட்டை போடவேண்டும். கைவிளக்கில் உக்கிய ஈக்கிலைப்பிடித்து எரித்து, எரியும் தணலால் உடனே ஓட்டை போடவேண்டும். மிகவும் பொறுமையாகவும், அவதானமாகவும் செய்யும் கலையிது.அதனை என் பருவம் செய்து முடித்தது. முடிவில் பொங்கலன்று அக்கோலங்களை பார்க்கும்போது அத்தனை மகிழ்வு.அந்த ஓவியங்கள் உறவுகளுக்கும் பரிமாறப்பட்டதும் உண்மை.
பொங்கலின் அன்றைய
அதிகாலைக்குளிர்ச்சி.
குயில்களின் சங்கீதம்.
முற்றத்தில் மாவிலையும் தோரணமும்.
மனம் மகிழும் பொங்கலின் பூபாளத்தை
இப்பிரபஞ்சம்
காட்சிப்படுத்தும் அழகே தனி!
அத்தனையும்கூடி பூர்வீக வாசத்துடன்
மெல்லிய கதிரொளியும் இறங்கிவர
காய்ந்த தென்னம் பாளையும்,பொச்சும்
வைத்து அம்மா அடுப்பை மூட்டுவா.
தீ மூழும்.தீ மூண்டு
சுவாலையாய் பத்தி எழுவதற்குள்
புகை கிளம்பும்.
அதுவே பொங்கலின் முதல்வாசம்.
அப்போது எம்மை
வாழவைத்துக்கொண்டிருக்கும்
உழவரை ஒரு கணமேனும்
கைகூப்பி வணங்கிடும் என் மனம்.
இந்த இயற்கையின் இயல்பு கூட
இந்த நாளிற்கு இதமாயிருக்கும்.
ஒன்றாய் வாழும் ஆடு,மாடு,
கன்று குட்டிகளென எல்லாம் சேர்ந்து கத்தும்.
அது கூட எம்மோடிணைந்த
பேரன்புதான்.இல்லையா?
பொங்கல் ஒன்றுதான் எம்மை
குடும்பமாய் ஒற்றுமையாய்
உரிமையாய் ஒரே இடத்தில்
இருந்து கொண்டாடிட
எங்களை கொஞ்ச நேரமேனும்
கட்டிப்போட்டது என்பதும் சரிதான்.
பொங்கிப்படைச்சு சாப்பிட்டுவிட்டுப்
பக்கத்து வீடுகளுக்கும் பகிர்ந்து,
அவர்களிடம் இருந்துவரும்
பொங்கல்,வடை,கடலையென்று
பின்னேரம் சாப்பிடும்போது
அதிலொரு தனிச்சுவை வெளிப்படும்
சைக்கிளை எடுத்துக்கொண்டு
நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று
சாப்பிட்டுச்சாப்பிட்டே
ஒன்றுகூடி குலூகலித்தோம்.
அதைவிட அமிர்தம் என்னவென்றால்,
அடுத்தநாள் எங்கட
பொங்கல்பானையை எடுத்து,
அடிப்பிடிச்ச மிச்ச சொச்சமாயிருக்கின்ற
புக்கையைச்சுரண்டிஎடுத்து
அடிபட்டு வாய்க்குள்ள போட்டால்..
'ப்பா'அது தேனாமிர்தம்.
மண்ணும்,மானுடமும்
அனுபவித்த,
யாரிடமும் இருந்து
பிரிக்கமுடியாதது
அப் பொற்காலம்.
இனி..
இங்கே உயிரும், உள்ளமும்
பனியும், குளிரும் உறைந்து
புனைவில் இனித்து மயங்கிக்கிடக்கும்
வாழ்வுக்குள் அன்றுபோல்
எதுவுமே வரவே வராது!
எது எதுவாகினும்,
இங்கும் பொங்கிப்படைத்து
நாலுபேருடன் ஒன்றாயிருந்து
சாப்பிடும்போது
எமக்கான கருவறைச்
சாட்சியங்களையும்,
அந்த வாழ்வினையும்
எப்படி மறப்பது?