தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தூண்களில் ஒருவரான தேர்ந்த வாசகர் வசந்தி தயாபரன் ! - முருகபூபதி -
'
நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்' என்று எனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன். இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள். சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர், சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும் எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு, உருவாகியிருக்கிறார்கள். அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.
எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன், வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.
இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா. இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.