இந்தியத் தொடர்பாடல் சில குறிப்புகள் - ஜோதிகுமார் -
1ஓர் இருநூறு வருடகால நகர்வுக்குப்பின், இன்று மலையகம், ஒரு அரசியல் சந்தியில் நிற்கிறது. இதில் தலையான அம்சமாக, வெகுத்தூக்கலாய்த் தெரிவது, மலையக மத்தியத்தர வர்க்கத்தின் பெருவாரியான எழுச்சியாகும். இரா.சிவலிங்கம் காலப்பகுதியிலும் அல்லது அதற்கு முன்னதான திரு.வேலுப்பிள்ளையின் காலத்திலும் அல்லது அதற்கு முன்பாக திரு.ராஜலிங்கம்-சோமசுந்தரம் அல்லது கோ.நடேசய்யர் காலப்பகுதியிலும் இது நடந்திருக்கலாம். ஆனால், இன்று, சாரம்சத்தில், நடந்தேறும், மலையக மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் எழுச்சியும் அது ஏற்படுத்தும் இன்றைய பாதிப்புகளும் சற்றே வித்தியாசம் கொண்டவை.
2
மலையக மத்தியத்தர வர்க்கமானது, இன்று, தனக்கென்ற அரசியலையும் தனக்கென்ற இலக்கியத்தையும் தன்வழியே சமைத்துக்கொள்ள விரும்புவதாய்த் தெரிகின்றது. மலையக அரசியலிலும் மலையக இலக்கியத்திலும் இது செலுத்த முற்பட்டுள்ள தாக்கம் எம் அனைவரினதும் ஆழ்ந்த கவனத்தைக் கோருவதாக உள்ளது. இது தொடர்பில் இரு உதாரணங்களைப் பார்க்கலாம் :
ஒன்று, எமது திரு.சிவலிங்கம் அவர்களால் (சாகித்திய ரத்னா) அட்டனில் ஆற்றப்பட்ட உரை. இது, இக்கருத்தை ஒரு தளத்தில் வெளிப்படுத்துவதாக இருந்தது. (வீரகேசரி : 26.05.2024) மற்றது, வேலுப்பிள்ளையின் இலக்கியம் பொறுத்து இன்று தரப்படும் புதிய வியாக்கியானங்கள். இவை, எமது மேற்படி விடயத்திற்கு உவப்பானவையே ஆகும்.