அன்புள்ள மேசி ...! - அ.யேசுராசா -
அண்மையில் மறைந்த தனது மனைவி மேசி ஜெயறோசாவைப்பற்றி எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் மனைவியின் நினைவு மலருக்காக எழுதிய கட்டுரையினைப் பகிர்ந்திருந்தார்.அதனைப் பதிவுகள் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றது. - பதிவுகள்.காம் -
- 13. 06. 2022 அன்று, அன்பு மனைவி மேசியின் 31 ஆம் நாள் நினைவை அனுஷ்டித்தோம். காலையில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், பிறகு வீட்டில் வழிபாடும் நடைபெற்றன. உறவினர், நண்பர் வந்திருந்தனர். 36 பக்கங்கள் கொண்ட நினைவு மலரும் வெளியிடப்பட்டது. மேசியின் ஓவியத்தை வரைந்தவர், ஓவியரும் கவிஞருமான ‘யோகி.’ அந்த மலரில் இடம்பெற்ற எனது கட்டுரையை இங்கு தருகிறேன். மலரின் PDF பிரதியைப் பெற விரும்புவோர் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம். எல்லோருக்கும் நன்றி! - அ.யேசுராசா -
அன்புள்ள மேசி ...!
நான் இருக்கிறேன் ; நீங்கள் இல்லை. பிரெஞ்சுத் தத்துவவாதி ஜீன் போல் சார்த்தரின் புகழ்பெற்ற, Being and Nothingness - ‘இருத்தலும் இன்மையும்’ நூற்பெயர், அர்த்தச் செறிவுடன் அடிக்கடி என் நினைவில் வருகிறது! நீங்கள் இல்லை ; ஆனால், மனவெளியில் உங்களுடன் என் உரையாடல் தொடர்கிறது...
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாயினும், உங்களை எனக்கு நீண்டகாலமாய்த் தெரியாது. தபாற் திணைக்களப் பணி காரணமாய் கொழும்பு, பசறை, பேராதனை, கண்டி, மீண்டும் கொழும்பு என வாழ்ந்ததில் ஊரில் பலவற்றை அறியாதிருந்தேன்! விருப்பத் தேர்விலான பணி ஓய்வின்பின் ஊரில் இருந்தபோது, 1989 இல், ‘திசை’ வார வெளியீட்டில், கலாசாரப் பக்கங்களுக்குப் பொறுப்பாக – துணை ஆசிரியராகப் பணியாற்றினேன். ‘திசை அலுவலகம்’ உங்கள் வீட்டுக்கு அண்மையில், மார்ட்டின் வீதி – பிரதான வீதி மூலையில் இருந்தது. காலையில் பணிக்குவந்த சில நாள்களில், அலுவலகத்துக்கு எதிர்ப்புறம், கையில் கோவைகளுடனும் சில புத்தகங்களுடனும் ஓர் இளம்பெண், நகரத்துக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருப்பதைக் கண்டிருக் கிறேன். எப்படியென்று நினைவில்லை ; அந்தப் பெண் எமது எசெக்கியேல் ஆசிரிய ரின் மூத்த மகளென்றும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் செல்பவ ரென்றும் தெரியவந்தது. ஆயினும், பிறகும் உங்களை நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
திருமணம் செய்யாது தனியனாக – இந்தியாவில் புதிய இடங்களுக்குப் பயணம்செய்து சுதந்திரமாக வாழும் மனநிலையில் இருந்தேன்; குடும்பத்தில் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் நான் திருமணம் செய்யாததில் மனக்குறை இருந்தது. 1992 இன் இறுதிப் பகுதியில் ஒருநாள், சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் முன்னர் என்னுடன் படித்த மரியாம்பிள்ளை, எசெக்கியேல் மாஸ்ரரின் மகள் – ரீச்சர் என உங்களைக் குறிப்பிட்டு, ஏன் அவரைக் கலியாணம் முடிக்கக்கூடாது என்று கேட்டார். வீட்டில் இதனைச் சொன்னபோது உங்களை நன்கு அறிந்த எனது இரண்டாவது தங்கை, மிகுந்த மகிழ்ச்சியுடன், கட்டாயம் நான் இந்தக் கலியாணத்தைச் செய்ய வேண்டுமென மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள் ; அம்மாவும் விரும்புவதை உணரமுடிந்தது. அம்மாவின் மனக் கவலையைப் போக்கவேண்டுமென்ற உணர்வும் தோன்றியது. என்றாலும், “யோசிக்க வேணும் ; ஒரு மாதத்துக்குப் பிறகு முடிவைச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டேன்.