(பதிவுகளில் அன்று) மன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
பிரச்சினையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம். கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் குடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.
பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஒரு பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.