ஆய்வு: நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனைகள்! - பா. தாரா, முனைவர்பட்ட ஆய்வாளர், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் -
முன்னுரை
நாட்டுப்புறப் பாடல்கள் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குபவை. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. மண்ணின் மணத்தைப் பரப்புபவை:
நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும் என்கிறார் முனைவர் சு. சக்திவேல். (நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.22) எனவே, நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது எனலாம். அந்தவகையில் நாட்டூப்புறப் பாடல்களில் விரவிக்கிடக்கும் பெண்ணிய சிந்தனையை மட்டும் எடுத்துரைப்பதாக அமைகின்றது இக்கட்டுரை.
நாட்டுப்புற ப்பாடல் வகைப்பாடு
நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல் நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் பெண்ணிய சிந்தனைகளை முனைவர் சு.சக்திவேல், கீழ்வருமாறு பகுத்துக் கூறுகிறார்.
ஆணாதிக்க வெளிப்பாடு
கற்புக் கோட்பாடு
விருப்பமின்றி நடத்தப்படும் திருமணங்கள்
கருவின் கருவளம்
பாலின சமமின்மை
சக பாலின முரண்
விதவைப் பெண்ணின் மன உணர்வு
வேலைச்சுமை
கூலி வேலை செய்வும் பெண் நிலை
வன்புணர்வு
பெண் தன் பலத்தைப் பிரகடனம் செய்தல்.
மேற்கண்ட பட்டியலுக்குள் அடங்கியிருக்கும் பெண் உணர்வுகளையும், அடக்குமுறை களையும், அடிமைநிலையையும் நாட்டுப்புறப் பாடல்களின் துணைகொண்டு கீழ்வருமாறு காணலாம்.