ஆய்வு: மருதத்திணையில் இளிவரல் மெய்ப்பாடு! - கி.ச. புனிதவதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இம்மாகுலேட் மகளிர் கல்லூரி, கடலூர். -
முன்னுரை
தமிழின் தொன்மையினையும் சிறப்பினையும் உலகறியச் செய்பவை சங்க இலக்கியங்கள். அவ் இலக்கியத்தைப் படிக்கும் போது ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவது மெய்ப்பாடாகும். அம் மெய்ப்பாட்டு உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்திருப்பது தொல்காப்பியம். இலக்கியத்தில் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வுகளை எண்வகையாகப் பகுத்து, அவை முப்பத்திரண்டு நிலைக்களன்கள் வழித் தோன்றும் என்றும், அத்துடன் பல உணர்ச்சிகளையும், தலைவன் தலைவியின் களவு, கற்பு வாழ்க்கையின் வழித் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வினையும் வகுத்துள்ளார். இங்கு சங்க அகஇலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றின் மருதத்திணையில் வெளிப்படும் இளிவரல் மெய்ப்பாட்டை இக்கட்டுரை ஆராய்கிறது.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு
தொல்காப்பியர் தம் நூலில் எட்டு வகையான மெய்ப்பாடுகளைச் சுட்டுகிறார்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. (தொல்.பொருள்.மெய்.நூ.251)
அவ்வகையில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன தொல்காப்பியர் குறிக்கும் எட்டுவகை மெய்ப்பாடுகள் ஆகும்.
இளிவரல் மெய்ப்பாடு
மூன்றாவதாக இடம்பெறும் இளிவரல் என்னும் மெய்ப்பாடானது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு பொருண்மைகளை நிலைக்களன்களாகக் கொண்டு பிறக்கும்.