இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. 14-08-2022 அன்று கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் பாரதன் தலைமையில் எழுத்தாளர் ஜீவபாரதி பரிசினை வழங்க எழுத்தாளர் குரு அரவிந்தன் சார்பாக பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.
தமிழ் இலக்கியத்தில் நான்கு நிலத்திணைகள், பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்தாக மாறியது போல, இன்று தமிழர்கள் வாழும் பனிநிலத்தையும் சேர்த்து ஆறாம் நிலத்திணையாக மாறியிருப்பதை குரு அரவிந்தனின் கட்டுரை விபரமாக எடுத்துச் சொல்கின்றது. ஆறாம் நிலத்திணையின் பொதுப் பண்பாக 'உருகுதல்' அமைந்திருக்கிறது.
மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வெளிவந்த குரு அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பான 'சதிவிரதன்' பலராலும் பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் இருந்து வெளிவரும் நந்தவனம் இதழில் வெளிவந்த எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'சாக்லெட் பெண்ணும் பண்ணை வீடும்' என்ற சிறுகதை ஆகஸ்ட் மாதத்து சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டு இந்திய ரூபா 500 பணப்பரிசைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுக்கதைகளை முன்பு மொழிபெயர்பின் மூலம்தான் பலராலும் வாசிக்க முடிந்தது. இப்போது எழுத்தாளர் குரு அரவிந்தனே அதுபோன்ற சிறந்த கதைகளைக் கனடாவில் இருந்து தமிழில் எழுதிவருவது, தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கின்றது.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.