முன்னுரை
தமிழின் தொன்மையினையும் சிறப்பினையும் உலகறியச் செய்பவை சங்க இலக்கியங்கள். அவ் இலக்கியத்தைப் படிக்கும் போது ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாக காட்டுவது மெய்ப்பாடாகும். அம் மெய்ப்பாட்டு உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்திருப்பது தொல்காப்பியம். இலக்கியத்தில் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வுகளை எண்வகையாகப் பகுத்து, அவை முப்பத்திரண்டு நிலைக்களன்கள் வழித் தோன்றும் என்றும், அத்துடன் பல உணர்ச்சிகளையும், தலைவன் தலைவியின் களவு, கற்பு வாழ்க்கையின் வழித் தோன்றும் மெய்ப்பாட்டு உணர்வினையும் வகுத்துள்ளார். இங்கு சங்க அகஇலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றின் மருதத்திணையில் வெளிப்படும் இளிவரல் மெய்ப்பாட்டை இக்கட்டுரை ஆராய்கிறது.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு
தொல்காப்பியர் தம் நூலில் எட்டு வகையான மெய்ப்பாடுகளைச் சுட்டுகிறார்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப. (தொல்.பொருள்.மெய்.நூ.251)
அவ்வகையில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன தொல்காப்பியர் குறிக்கும் எட்டுவகை மெய்ப்பாடுகள் ஆகும்.
இளிவரல் மெய்ப்பாடு
மூன்றாவதாக இடம்பெறும் இளிவரல் என்னும் மெய்ப்பாடானது மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு பொருண்மைகளை நிலைக்களன்களாகக் கொண்டு பிறக்கும்.
மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே (தொல்.பொருள்.மெய்.நூ.254)
நிலைக்களன்கள்
மூப்பு
மூப்பு என்பது முதுமை என்று பொருள்படும்.
பிணி
பிணி என்பது பிணியுற்றது கண்டு இழித்தல். இதன் காரணமாக உடல் தூய்மையானது அன்று என்று கருதுதல் ஆகும்.
வருத்தம்
வருத்தம் என்பது இடுக்கண், துன்பம் என்று பொருள்படும். இதன் காரணமாகவும் இளிவரல் தோன்றும்.
மென்மை
மென்மை என்பதற்கு நல்குரவு என்று இளம்பூரணர் பொருள் கூறுகிறார். இவ்விடத்துக் கூறப்பட்ட மென்மை என்பது மிருதுவான என்னும் பொருளில் அல்லாது, இளிவரலுக்குரிய பொருளில் கையாளப்பட்டுள்ளது.
மருதத்திணையில் இளிவரல் மெய்ப்பாடு தோன்றுமிடங்கள்
இத்திணையில் இளிவரல் மெய்ப்பாடு, தலைவி தலைவன் பிரிவில் ஆற்றாதபோதும், பாணற்குச் சொல்லும்போதும், தூதை ஏற்க மறுக்கும்போதும், தோழியிடம் இயற்பட மொழியும்போதும், காப்பு மிகுதியில் தனக்குள்ளேயும், வரைவு நீட்டித்தபோதும், வாயில் மறுக்கும்போதும், தோழி தலைவன் வரைவு நீட்டித்தபோதும், தோழி வாயில் மறுத்தபோதும், காவல் மிகுந்த நகரில் புகுந்தபோதும், தலைவன் நெஞ்சிற்கும், ஊடல் நீட பாணனிடமும், விறலியிடம் வாயில் மறுத்தபோதும் தோன்றுகிறது.
தலைவி வாயில் மறுத்தல்
தலைவன் பரத்தையரிடமிருந்து பிரிந்து வந்துள்ளான்.
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை யூரன் வெண்டினை யாயிற்
பலவா குகநின் னெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை யிரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே. (குறுந். 91)
தலைவனை ஏற்றுக்கொண்டால் நெஞ்சம் உறக்கம் கொள்ளாது. அதியமான் நெடுமான் அஞ்சியின் போர்க்களத்தில் உள்ள ஊரிலுள்ளார் இரவில் உறங்குதல் சில நாட்கள் போல் நீ துஞ்சும் நாளும் சிலவாகும் என்று தன் நெஞ்சிடம் உரைக்கிறாள்.
பரத்தமை ஒழுக்கம் கொண்டுள்ள தலைவனின் செயல்பாடு என்பது எவ்வேளையிலும் மாறும் இயல்புடையது. எனவே அவனுக்காக இரங்கி ஏற்றுக்கொண்டாலும் அதியமானின் அச்சம் பொருந்திய போர்ப்படைகளைப் போல நெஞ்சமே நீயும் பயந்து வாழும் சூழலும், உறங்குவதும் ஆகிவிடும் என்பதை உரைக்கிறாள் தலைவி. தலைவனின் தவற்றைத் திருத்தி ஏற்றுக்கொள்ளும் நற்பண்புடைய தலைவியானவள் காலம் நேரம் கருதாது வாரி வழங்கும் தன்மையாய் ஏற்பாள் என்பதை உவமை வாயிலாக உணர்ந்துகொள்ள முடிகிறது.
கொன்முனை யிரவூர் போல எனும் அளவு உவமத்தின் வழி, தலைவன் நிலையை அறிந்தும் தலைவி அவனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதினால், வருத்த நிலைக்களனைக் கொண்ட இளிவரல் மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
மேற்கூறிய பாடல் கருத்தைப்போன்று, அள்ளூர் நன்முல்லையாரின் பாடலிலும் வெளிப்பட்டுள்ளது. தலைவனின் உண்மை தன்மையினால் தலைவியின் துன்பம் நீங்கவில்லை. இப்பாடல் வருத்த நிலைக்களனைக் கொண்ட இளிவரல் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த நோமென் னெஞ்சே. (குறுந்.202)
பரத்தமை ஒழுக்கம் கொண்டு பிரிந்து வந்த தலைவனுக்காகத் தூது வரும் தோழியிடம் தலைவன் முன்பு நெருஞ்சிப்பூப் போல இனிமை செய்தான், அதன் பழம் முட்களைக் கொண்டுள்ளதைப் போல், பின்பு துன்பத்தைத் தந்துள்ளான். இனிமை செய்த தலைவன், துன்பம் செய்ததால் அவனை நினைத்த நெஞ்சமே, நீ நொந்துகொள் என்பதாக உரைக்கிறாள். தலைவனின் உண்மைத் தன்மையை அறியாது அவன் மீது அன்பு செய்ததை எண்ணித் தலைவி, மஞ்சள் நிறத்தில் சிறியனவாகப் பூக்கும் நெருஞ்சிப்பூவாக இருந்தவன் என்பதும், முள் போல் பரத்தமை ஒழுக்கம் கொண்டு அவனின் உண்மை தன்மையினை வெளிப்படுத்திவிட்டான் என்பது வினை உவமத்தின் வழி வருத்த நிலைக்களனைக் கொண்ட இளிவரல் மெய்ப்பாடாக வெளிப்பட்டுள்ளது.
குறுந்தொகையின் இக் கருத்தொத்த மற்றொரு பாடலிலும் வெளிப்பட்டுள்ளது.
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவு ணண்ணிய பாலோர் போல
ஒரிஇ யொழுகு மென்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே (குறுந்.203: 3-6)
தலைவனின் பரத்தமைப் பிரிவுக்குப் பின் அவனுக்காகத் தோழி வாயில் புக்க தலைவி உரைக்கிறாள்.
முனிவரின் தூய்மையைக் கண்டு அஞ்சி ஒழுகும் தூய்மையற்றவரைப் போல தலைவன் உள்ளான். அவனுக்காக நான் மாறப்போவதில்லை என்று தலைவி கூறுகிறாள். அத்துடன், அவன் என் மீது கொண்ட அன்பை மறந்து, பரத்தமை நாடிச்சென்று என்னையும் அவன் மீது கொண்ட அன்பையும் மாற்றிவிட்டான் என்கிறாள். களவு வாழ்க்கையில் இன்பம் தந்தவன். கற்பு வாழ்க்கையில் துன்பம் தருகிறான். காரணம் தலைவி தனக்கே உரியவள், தன்னையே நினைந்து இரங்குபவள் என்ற உரிமைக் கிடைத்ததும் தலைவனின் மனமும் மாறிவிடுகிறது. இதன் மூலம் குண உவமத்தின் வழி வருத்தமுற்ற நிலையில் தலைவனின் இச்செயலால் தலைவி இளிவரல் நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக மெய்ப்பாடு வெளிப்படுகிறது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய பாடலில்,
ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்
சேரி வரினு மார முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேண் படவே (குறுந்.231)
காமம் செய்யும் வேலை, தலைவியை விட்டு பரத்தமை நாடிச் செல்ல வைத்தது மட்டுமல்லாமல், ஒரே ஊரில் வாழ்ந்தாலும் நம் தெருவிற்கு வரவில்லை, அப்படி வந்தாலும் நம்மைப் பார்ப்பது இல்லை. சுடலையை யாரும் விரும்புவதில்லை. அதைப்போல நம்மைப் பாராது செல்கிறான். கணையிலிருந்து புறப்பட்ட அம்புபோல அவன் காமம் பரத்தமையை நோக்கிச் செல்கிறது. இது என்ன மாயமோ? என்று தலைவனுக்காக வாயில் வேண்டி வந்த தோழியிடம் தலைவி உரைக்கிறாள்.
தலைவன் தன்னைப் பார்க்கவில்லை என்பதினாலும், களவில் தன்னுடன் இன்பம் நுகர்ந்தவன் கற்பில் பரத்தமை மீது இன்பம் நுகர விரைகிறான் என்ற நிலையிலும் வருத்தம் தோய்ந்த இளிவரல் மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகிறாள் தலைவி.
ஏதிலாளர் சுடலை போல தன்னை நோக்காத நிலையில் அளவு உவமத்தின் வழி வருத்த நிலைகளனைக் கொண்ட இளிவரல் மெய்ப்பாடு ஊடல் உரிப்பொருள் நிலையில் தலைவியின் நிலை வெளிப்பட்டுள்ளது புலனாகிறது.
இக் கருத்தையொத்த அகநானூற்றுத் தலைவியும் பரத்தமை நிலையால் வருந்தும் நிலை உள்ளது,
வதுவை மேவலன் ஆகலின், அதுபுலந்து,
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடுவள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும்பெயற்கு உருகி யாஅங்கு
திருந்துஇழை நெகிழ்ந்தன, தடமென் தோளே? (அகம். 206)
பரத்தமை ஒழுக்கத்தால் தான் வருந்துவதை, பகைவரைத் தன் போர்த்திறனால் கொல்லும் தன்மையுடைய வேளிர்கட்கு உரிய வீரை என்னும் இடத்திலுள்ள துறையின் முன்னால், நீண்டு குவிந்து கிடக்கும் வெண்மை நிறமுடைய உப்பின் பெருங்குவியலில், மிக பலத்த மழை பெய்வதினால் ஓடும் நீரோடு சேர்ந்து உப்பும் உடைந்து கரைந்து நீரோடு இணைந்து கரைந்துவிடுவது போலத் தன் பெருத்த மென்மை பொருந்திய தோள்களும் மெலிந்தன, வளையல்களும் நெகிழ்ந்து கழன்று வீழ்ந்தன என்று உரைக்கிறாள்.
தன் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் தன்னை வருத்தத்தில் ஆழ்த்துவதுடன், தன் உடல் அழகையும் கொண்டு சென்று விடும் இளிவரல் நிலைக்குத் தள்ளப்படுவதை மேற்கூறிய வினை உவத்தின் வழிப் புலவர் மதுரை மருதன் இளநாகனார் புலப்படுத்துகிறார்.
தலைவியின் துன்பம் களையாத நிலை
இற்செறிக்கப்பட்ட தலைவியின் காமநோயை நீக்க துணையின்றித் தவிக்கும் நிலையினைக் கூறி, தோழி அறத்தொடு நிற்றல் வேண்டும் என்பதை உரைக்கிறாள்.
வந்தஞர் களைதலை யவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோ ரிலையா னுற்ற நோயே. (குறுந்.305: 4-8)
உவமையினால் பெயர் பெற்ற குப்பைக்கோழியார் பாடலில் இடம்பெற்றுள்ள மெய்ப்பாடு தலைவியின் நிலையைப் புலப்படுகின்றது.
சண்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளின் திறத்தைப் பிறர் பார்க்க உதவிட ஆரவாரிக்க மக்கள் உண்டு. குப்பைக் கோழியின் போரினை யாரும் பார்ப்பதோ, ஆதரிப்பதோ கிடையாது. அதைப் போலத் தான் உற்ற காம நோயும், தலைவனைக் கண்ட வழி ஏற்பட்ட காமம் தன்னுள் போரிட்டு நோயை ஏற்படுத்துகிறது. அதனைக் களைவார், ஆறுதல் உரைப்பார் இல்லை என்று கூறுவதன் வாயிலாகத் தலைவியின் துன்பம் தோழியிடம் உரைக்கப்பட்டு அவள் அறத்தொடு நின்றேனும் காக்க வேண்டும் என்பதாக வெளிப்படுகிறது. தன் வருத்தம் தன் நிலையில் இழிந்த நிலையில் உள்ளதன் வாயிலாக வினை உவமத்தின் வழி இளிவரல் மெய்ப்பாட்டினை ஊடல் உரிப்பொருள் சிறக்க எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இப்பாடல்களின் வழி தலைவன் தலைவியின் மனநிலை வருந்துவது காட்டப்படுகிறது. க. பஞ்சாங்கம் தமது நூலில் மனித மனம் பற்றி,
ஆனால், அது ஒரு பொருளல்ல. செயல் மூளையின் செயல்பாட்டைப் படிமுறையிலிருந்து உற்பத்தியாவது, அதுவே உணர்ச்சிக்கும் (feelings), மனவெழுச்சிகளுக்கும் (Emotion) களமாகிறது. உட்புறச் செயல்பாடாய் அமையும் இந்த மனத்தினால் உடலில் பல உள்ளுறுப்பு மாறுதல்களும் வெளியுறுப்பு மாறுதல்களும் ஏற்படுகின்றன. இம்மாறுதல்கள் தானியங்கு நரம்பு மண்டலத்தின் செயலாலும், உடலிலுள்ள சில நாளமிலாச் சுரப்பிகளாலும் (Ductless Glands) உண்டாகின்றன. இவ்வாறு ஒரு வகையில் உடலியங்கியலின் ஒரு கூறுதான் மனம் என்ற நிலையில் ஒன்றையொன்று சார்ந்தும், பாதித்தும் இயங்குகின்றன.
(வாழ்வியல் களஞ்சியம், தொகுப்பு-4) முனைவர் க.பஞ்சாங்கம், புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம், ப.)
என்று வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுவது பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியம் சுவையுடையதாகப் படைக்கப்படுவதற்குப் புறத்திலுள்ள கருப்பொருள்கள் வழி உரிப்பொருள் சிறக்கப் பாடப்படுபட்டுள்ளதை அறிய முடிகிறது.
இவ்வாய்வின் வழி அறியப்படுவன:
♦ மருதத்திணையில் உரிப்பொருள் ஊடல். தலைவன் தலைவியை விட்டுப் பரத்தைப் பிரிவு மேற்கொள்வதினால் தலைவன் தலைவி இருவருக்கும் இடையே ஊடல் தோன்றுகிறது.
♦ ஊடல் தோன்றினாலும் தலைவி தலைவன் மீது கோபத்தைக் காட்டாது மறைத்து வாழும் நற்பண்புடையவளாக உள்ளாள்.
♦ இல்லறம் நல்லறமாக இயங்கிட அவளின் இப்பண்பு இலக்கியத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துரைக்கின்றன.
♦ தலைவன் தவறு செய்தாலும் அவனை நல்வழிப்படுத்துபவள் தலைவி. இதற்கு உவமையாக சுட்டும்போது அதியமானின் கொடைச்சிறப்பு சுட்டப்படுகின்றது.
♦ பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்ட தலைவனுக்காக தூது வரும் தோழியிடம் தலைவி கடிந்துகொள்ளவில்லை. ஊடல் கொள்ளவில்லை. மாறாக தலைவனின் தன்மையினை உவமை வாயிலாக சுட்டிக்காட்டுகிறாள். நெருஞ்சிப்பூப்போல் களவில் இன்பம் தந்தவன், நெருஞ்சிப்பழம் போல் கற்பு வாழ்க்கையில் துன்பம் தருகிறான். மனதில் உள்ள வலியை ஊடலை புலவர் உவமை வாயிலாக சுட்டுகிறார்.
♦ குப்பைக்கோழி போல் தனிப்போர் புரிவதாக தலைவி தோழியிடம் உரைக்கிறாள். தலைவியின் துன்பம் களையாத நிலையில் வருந்தியிருப்பது இளிவரல் மெய்ப்பாட்டு வழி அறிய முடிகிறது.
♦ தலைவன் தன்னைக் காணாத நிலையிலும் தான் அவனை நினைக்காது இருக்கப்போவதில்லை என்பதன் வழி ஊடல் உள்ளத்தில் இருந்தாலும் அதை மறைத்து குடுப்பத்திற்காக வாழ்பவளாக தலைவி உள்ளாள்.
முடிவுரை
தலைவன் தலைவி இருவரின் வாழ்க்கைச் சூழல்கள் மருதத்திணையில் காட்டப்படுகின்றன. ஊடல் உரிப்பொருள் கருப்பொருட்கள் வழி இடம்பெறுகின்றன. அவ்வூடல் சிறக்க, சங்கப் புலவர்களால் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. களவில் தலைவன் தலைவிக்கு இன்பம் தந்தான். கற்பு வாழ்க்கையில் பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்டு துன்பம் தருகின்றான். இதனால் தலைவி தலைவனிடம் ஊடல் கொள்ளவேண்டும். மாறாக, தலைவி அவ் ஊடலை வெளிக்காட்டாது, தான் அன்பு பெற்று இன்புற்ற நிலையிலிருந்து தாழ்ந்து, வருந்துவதினால் வருத்த நிலைக்களனைக் கொண்ட இளிவரல் மெய்ப்பாட்டு வெளிப்பட்டுள்ளது உவமை வாயிலாக அறிய முடிகிறது. தொல்காப்பியரின் இளிவரல் மெய்ப்பாடு சங்க மருதத்திணைப் பாடல்களில் பொருந்தி வந்துள்ளது.
துணைநின்ற நூல்கள்
1. சாமிநாதையர், டாக்டர் உ.வே., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.
2. சுப்பிரமணியன், முனைவர் ச.வே. (உ.ஆ), தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. முதற்பதிப்பு – மே, 1998.
3. செயபால், முனைவர் இரா. (உ.ஆ), சங்க இலக்கியம் அகநானூறு (புத்தகம் 2) (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை - 600 098. நான்காம் அச்சு: அக்டோபர், 2011.
4. பஞ்சாங்கம், முனைவர் க., புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம், அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. முதல் பதிப்பு: டிசம்பர், 1012.
5. வேங்கடராமன் வித்துவான் ஹெச். (பதி.ஆ), நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.