முன்னுரை
வாழ்வியல் நெறி என்பது செம்மையான வாழ்க்கை முறை எனலாம். இல்வாழ்வானுக்குரிய பண்பாக வள்ளவர் அன்பு, அறம் ஆகியவற்றைக் கூறுகிறார். நற்பண்பு கொண்ட இச்சான்றோர் பண்பாக அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகியவற்றை வள்ளுவர் காட்டுகிறார். பெண்களுக்குரிய வாழ்வியல் பண்பாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, விருந்தோம்பல், கணவனைத் தெய்வமாகக் கொண்டொழுகுதல் முதலிய பண்புகளைக் காட்டுவர். இத்தகு வாழ்வியல் நெறிகளைக் கருவிலே திருவுடைய கம்பர் தமது காப்பியமான கம்பராமாயணத்தில் இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறே போல் உயர்த்தி காட்டுகின்றார். இதனை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி - பெண்மை சிறக்க செய்வது
இல்லறம் இனிமை பெற, இல்லாள் அறிவும், பண்பும் பெற கல்வியே அடிப்படை ஆகும். கல்வி பெற்ற பெண்டிரே இல்லறப் பண்பை உணர்ந்த இனிது நடத்தி செல்ல முடியும். வறுமையால் வாடி வந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவினர். விருந்தினர் அருந்தி மகிழ உணவை அளித்தனர். கோலச நாட்டு குடும்பங்கள் இவ்வாறு குறைவின்றி வாழ்ந்தன என்று கோசல நாட்டைப் பற்றி கூறும் போது கம்பர் கூறுகிறார். இதனை,

பெரும் தடங்கண் பிறை நுதலார்க்கெலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும் அன்றி விளைவன யாவையே (36)

என்கிறார்.

காமம் வெளிப்படுத்தா - பெண்மை
காமம் கொண்ட பெண்கள் அன்பை, தாம் வெளிப்படுத்துதல் இல்லை என்னும் தமிழர் தம் உயரிய பண்பை பஞ்சவடியில் இராமனைக் கண்டு காமுற்ற சூர்ப்பனகையின் சொற்களில்,

தாம் உறு காமத் தன்மை
தாங்களே உரைப்பது என்பது,
ஆம் எனில் ஆவது அன்றால்
அருங் குல மகளிர்க்கு அம்மா (2873)

கம்பர் அழகாகக் காட்டுகிறார்.

அன்பே ஆக்கம் தருவது
இராமனை முடிசூட்டு விழாவிற்கு ஆயத்தப்படுத்துவது போன்று வசிட்டர் பல அறிவுரைகள் கூறுகிறார். அதாவது உலகனைத்துக்கும் பொதுவான பெருமையான அன்பினைப் பற்றி கூறும்போது அன்பினைத் தவிர ஆக்கம் தருவது வேறொன்றில்லை என்பதாக காட்டுகிறார். அதாவது,

முன்பு பின்பு இன்றி மூவுலகத்திலும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ (1422)

என்று கூறுகிறார்.

பிறர்மனை நயவாப் பண்பு
தசரதனுக்கு மூன்று மனைவியர். இராவணனுக்குக் கணக்கில்லாத மனைவியர் என்று கம்பர் கூறினாலும் தசரதன் மகன் இராமன் ஏகபத்தினி விரதனாக இருந்ததைக் கம்பர் காட்டுகிறார். இராவணன் சீதைமீது ஆசை கொண்டு பிறர்மனை நயந்த செயலை,

………. ………… வேறு ஒரு குலத்தால்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ (6169)

என மாலியவான் விலக்கவும் தமிழரின் பிறர்மனை நயவாப் பண்பை வெளிப்படுத்துகின்றன.

சாதி வேறுபாடற்ற தூய நட்பு
அன்பாலும், நட்பாலும் ஒன்று சேர்ந்து உற்றுழி உதவிகள் பெறும் உயர்ந்த நிலையை இராமனின் நட்புச்சூழல் நமக்குப் புலப்படுத்துகிறது. அரச குலத்தைச் சார்ந்த இராமன் வேடர் குல குகனுடன் நட்பு கொண்டார். குரங்கினச் சுக்கீரிவனுடன் நட்பு கொண்டார். தாயினும் நல்லானாகிய குகனைப் பார்த்து இராமன் என்னுயிர் அனையாய் நீ என்று போற்றுகிறார். மேலும்,

குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வார்,
மகனொடும் அறுவர் ஆனோம் எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம் (6507)

என்று உடன்பிறந்தவராக நோக்கும் உயர் பண்பே உண்மையான நட்புக்கு இலக்கணமாக காட்டுகிறார். அன்பும் தூய உள்ளமும் சாதி வேற்றுமையை அடித்து வீழ்த்திய நிலையை இதன் மூலம் நாம் காணலாம்.

அறம் எனும் பண்பு மேன்மை
அன்பினால் உவகையாண்ட இராமனின் அறத்தின் வெற்றியைக் கருவாகக் கொண்டு இயங்குகிறது கம்பராமாயணக் காப்பியம். அறம் ஆற்றல் வாய்ந்தது, அது என்றும் நன்மையே தரும் என்பதனை,

ஆய்வினை உடையார் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம்,
ஏய்வன நலனெ அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ (6868)

என்று அறிவுறுத்தியதினின்று அறத்தின் சிறப்பை அறியலாம். அறம் அன்பினைப் போன்ற அக உள்ளத்தால் ஏற்படுவது ஆகும்.

அடக்கம் எனும் பண்பு
மனிதனின் பண்பு நிலைகள் பலவற்றில் அகத்தில் நிலை கொள்வன. அடக்கம், பொறுமை, உண்மை போன்ற பலவாகும். கம்பர் அடக்கத்தின் சிகரமாக விளக்குகிறார். தன் புலமையில் ஆழ்ந்த பொருளுடைய சொற்களை நொய்தின் நொய்ய சொல் எனவும், பெருஞ்சுவைக் காப்பியம் இயற்றிய தன் செயலைப் பாற்கடலைப் பூனை நக்கியதாகவும், சிறுவன் ஒருவன் கீறலாகவும் கூறுவதால்; அவருடைய அடக்கப்பண்பு வெளிப்படுதலைக் காணலாம். பேராற்றல் படைத்தோரிடம் இயல்பாக அமையும் உலகியல் பண்பாக இது அமைந்துள்ளதை அறியலாம்.

எத்துணை உயர்வும் பெருமையும் உள்ள போதும் அப்பெருமையைப் பேசாத அடக்க நிலையைச் சுக்கீரிவன் இராமனுக்குக் கூறிய ஆறுதல் மொழிகளால் அறியலாம். அதாவது,

பெருமையோர் ஆயினும்
பெருமை பேசலார்,
கருமமே அல்லது பிரிது
என் கண்டது” (3918)

என்கிறார். இத்தகைய அடக்க உணர்வுக்கு எடுத்துக்காட்டாக அனுமனைக் கூறலாம். சீதையைத் தேடி சென்ற அனுமன் உறக்க நிலையிலிருந்த இராவணனைக் கண்ட போது அவனை அழிக்க வேண்டுமென எழுந்த மன உணர்வை இராமன் பணி அன்று என்றெண்ணி அடக்கிக் கொள்கிறான்.

பொறையெனும் பண்பு
பொறையுடைமை பண்பு இவ்வுலகுக்கு வேண்டிய ஒன்றாகும். தவத்துறையைச் சார்ந்த முனிவருக்கு மட்டுமின்றிப் பொறுமை அனைவருக்கும் பொதுவானதும் இன்றியமையாததும் ஆகும். சமுதாய வாழ்வினர்க்கும், தோள் வலிமையைத் துணையாகக் கொண்ட வீரனுக்கும், ஆளும் அரசுக்கும் மிகவும் வேண்டிய பண்பாகும். இலங்கைக்குத் தூது விடும் எண்ணத்தை இலக்குவன் மறுத்த போது அங்கதனைத் தூதுவிடும் மனத்தனான இராமன் அங்கதனுக்குப் பொறை பற்றிய சிந்தனையைத் தருகிறான்.

புயத்துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல்,
சயத்துறை அறனும் அஃதே என்று இவை சமையச் சொன்னான் (6981)

எனும் அடிகளால் அறியலாம்.

வாய்மைப் பண்பு
உண்மை என்பது உள்ளத்தின் பண்பாக அமைவது, சொல் நிலையில் அது வாய்மையாக வெளிப்படும். அரசு நின்னதே எனக் கூறிய பரதனை அரசாளுமாறு இராமன் ஆணையிடுமிடத்து வாய்மையின் தன்மை வலியுறுத்தப் பெறுவதை,

“வாய்மை என்னம் ஈது அன்றி வையகம்,
தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ,
தீமை தான் அதில்; தீர்தல்; அன்றியே,
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே” (2489)

மனத்தூய்மை வாய்மையால் காணப்பெறும் எனும் அறநூலின் கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிது. யாதொன்றும் தீமை இலாத சொலல் ஆன வாய்மைப் பாங்கும்; இங்கு புலப்படுகிறது.
“துறந்திலேன் மெய்மை எய்தும்
பொய்ம்மையே துறப்பது அல்லால்
பொய்மை உரைத்திலேன் (9242)

என்னும் வீடணன் உரையும் உள்ளத்தால் உண்மையயொளி வாக்கினில் வெளிப்படுவதைக் காட்டுகிறது.

நன்றியறிதல் பண்பு
உள்ளத்தின் சிறந்த பண்பாக நன்றியுணர்வு அமைகின்றது. நன்றியறிதலாலும் நன்றி மறவாமையாலும் இது வெளிப்படுகிறது. சடையப்ப வள்ளலிடம் பெற்ற நன்மைகள் பற்றிய கம்பனின் நன்றியுணர்வு காப்பியம் முழுவதும் பரந்து காணப்படுகிறது. பிறிதொருவரிடம் தான் அடைந்த தினைத்துணை உதவியையும், பனையளவாகப் போற்றும் வாழ்வியல் கூறாகப் பொருந்தும் தன்மையை இதனின்றும் உணரலாம். நன்றியுணாவு இல்லாதவர்கள் என்றும் சிறியவராகக் கருதப் பெறுகின்றனர். இறந்த வாலியின் மீது விழுந்து புலம்பிய தாரை வாலியின் உதவியால் அமுதத்தைப் பெற்ற தேவனான ராமன் நன்றியுணர்வின்றி அவன் உயிர் கவர்ந்ததாகப் பேசுமிடத்தில் இவ்வெண்ணம் “சிறியரோ உபகாரலம் சிந்தியார்” என வெளிபப்டுகின்றது. செய்ந்நன்றி உணர்தலும், அதற்குக் கைமாறாக உயிரையே கொடுத்தலும், அறமாக கருதப்படுவதை அனுமன் கூற்று விளக்குவதை,

உதவாமல் ஒருவன் செய்த
உதவிக்குக் கைம்மா றாக
மற்றும் உண்டோ வயிற்றோ,
சிதையாத செலவில் அன்னான்
முன்கென்று ஆவி உலவானல் (4439)

என்பதனால் அறியலாம்.

அடைக்கலம் நல்கும் பண்பு
உதவி நாடி வந்தவர்க்கு உறுதுணையாக நின்று அடைக்கலம் அளித்தலும் உயர்ந்த அறப்பண்பாகக் கருதப்பெறுகிறது. பகைவன் தம்பி ஆயினும் அடைக்கலம் வேண்டி அண்டியவனை ஏற்று பாதுகாப்பளித்த உயரிய பண்பு இராமனிடம் அமைகிறது. வீடணன் அடைக்கலம் பற்றி இராமனின் அருகிருந்தாரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது மாருதி ஆற்றிய பேரூரை,

ஆவத்தின் வந்து அபயம் என்றானை
ஆயிர்த்த அகல விடுதி ஆயின்
கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது
ஒவ்வாதோ (6464)

என அமைந்துள்ள அடிகளால் இவ்வெண்ணம் வெளிப்படுவதைக் காணலாம்.

இன்சொல் பேசும் பண்பு
சொல்நிலையின் அறமாக இனியவை கூறல் பண்பு அமைகிறது. நெஞ்சின் ஆபத்தால் எழும் அன்பு இனிய சொற்களால் வெளிபப்டுகிறது. அவ்வாறு வெளிப்படா நிலையிலும், பகை சூழலின் போது கூட இன்மொழி இயம்பல் உயர் அறமாகக் கருதப்படுகிறது. இராமன் சுக்கீரிவனுக்குக் கூறும் அறிவுரையில் இவ்வுயர்பண்பு நிலையை,

“பகையுடைச் சிந்தை யார்க்குச்
சயன் உறுபண்பின் தீரா,
நகையுடை முகத்தை ஆகு
இன் உரை நல்கு நாவார்” (4227)

என்று காட்டுகிறார். “வைவன் வந்த போதும் வசை அல இனிய கூறல்” என இனியவை கூறல் பண்பை உலகப் பொதுமையின் அறமாக ஆக்குகிறான் கம்பன்.

காமம் இல்லையெனில் துன்பமில்லை
கம்பராமாணத்தில் இருந்த திருப்பங்கள் காமத்தால் உண்டாகின்றன. கைகேயின் மீது தசரதன் கொண்ட காமத்தின் காரணமாக இராமன் காடேகக் காரணமாகின்றது. கானக வாழ்வின் பத்தாண்டு அமைதியும், பஞ்சவடியின் இனிய வாழ்வும் முடிவெய்த காமம் காரணமாகிறது. மறுநாள் முடிசூட்டப்பெற்ற வேண்டிய அரச குமரனுக்கு முனிவர் உணர்த்திப் பலவகை அரசு அறநெறிகளில் இக்காமத்தைக் கடியும் தன்மை,

“தூம கேது புவிக்கு எனத் தோன்றிய,
வாம மேகலை மங்கையரால் வரும்,
காமம் இல்லை எனின் கடுங்கேடு எனும்
நாமம் இல்லை நகரமும் இல்லையே” (1516)

என்கிறார்.

கள்ளுண்ணாமை பண்பு
கள்ளுண்ணாமை பற்றிய கருத்துக்களைச் சக்கீரிவன் மூலம் காட்டுகிறார் கம்பர். கள்ளுண்பவன் செய்ந்நன்றி மறக்கிறான், சூழ்நிலை உணர்வின்றி மயங்குகிறான். தீய செயல்களில் ஈடுபடுகின்றான். கள்ளுண்டு நிலையிழந்த சுக்கீரிவனே கள்ளுண்ணலின் தீமையை,

“வஞ்சமும் களவும் பொய்யும்
மயக்கமும் மரபுஇல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும்
தன்மையும் களிப்பும் தாக்கும்,
கஞ்சமெல் அணங்கும் தீரும்
கள்ளினால் அருந்தினான்,
நஞ்சமும் கொல்வது அல்லால்
நரகினை நல்காது அன்றே” (4468)

என்று கூறுகிறார். தீமைகள் பலவற்றுக்கும் அடிப்படையாகவும், தூண்டுதலாகவும் கள்ளுண்ணல் அமையும் பாங்கு இதன்கண் கம்பர் காட்டுகிறார்.

முடிவுரை
மக்களின் வாழ்வியல் நெறிகளைக் கல்வியில் பெரியவரான கம்பர் தம் காப்பியத்தில் பங்கு கொண்ட பாத்திரங்கள் வழி சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார். “கம்பர் வழி வாழ்ந்து உலகில் சிறந்து ஓங்குவோம்”.

துணைநின்ற நூல்கள்:
1. சீனிவாசன்.ரா,கம்பராமாயணம், அணியகம், சென்னை-30, 3ம்-பதிப்பு, 2000.
2. பிரவீன்குமார், கம்பராமாயணம் (எளிய நடையில்), ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2017.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R