கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -
எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.