தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?
பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல் தமிழ் சினிமா இல்லை.
இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில் (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். அவர் சொல்கிறார்:
“ எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் இயக்குநர்களுக்கு ஆழமான இலக்கியப்பரிச்சயம் தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி இயல்புகள் சாத்தியக்கூறுகள் - இவை பற்றிய ஒரு பிரக்ஞை வேண்டும். அதுமட்டுமல்ல திரையும் எழுத்தும் தத்தம் இயல்புகளில் மிகவும் வேறுபட்ட ஊடகங்கள் என்பதையும் உணர்ந்திருக்கவேண்டும். வங்காள - மலையாள சினிமாக்களில் இத்தகைய புரிதல் இருபுறமும் இருப்பதைக்காணலாம். அங்கிருந்து வரும் பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில் பெருவாரியானவை ஒரு இலக்கியப்படைப்பையே சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம். “
ஐந்தாம் தரம் வரையே பள்ளிப்படிப்பைக் கண்டிருந்த தண்டபாணி முருகேசன் என்ற சிறுவன் தமிழகத்தில் கடலூரில் 1934 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 24 ஆம் திகதி பிறந்து, இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, சென்னைவந்து, கம்யூனிஸ்ட் தோழர்களின் அரவணைப்பில் வளர்ந்து, கட்சிப்பிரசுரங்கள் விநியோகிப்பது முதலான தொண்டூழியம் முதல் பல்வேறு சிறு சிறு தொழில்களும் பார்த்து, அச்சுக்கூடத் தொழிலாளியாகி, செய்திப்பத்திரிகை, படைப்பு இலக்கியம் படித்துக்கொண்டே, ஒப்புநோக்காளனாகவும் (Proof Reader) தன்னை வளர்த்துக்கொண்டு, ஜெயகாந்தன் என்ற எழுத்தாளனாக அறிமுகமாகி, இலக்கிய உலகில் அங்கீகாரத்தையும் பெற்று பேராளுமையாக உருவாகியவர். இந்திய சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, ராஜா ராஜசோழன் விருது உட்பட பல இலக்கியம் சார்ந்த விருதுகள் பெற்றவர். ஜெயகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரில் 08 ஆம் திகதி சென்னையில் மறைந்தார். இந்தப்பதிவு ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தொனிப்பொருளில் அமைகிறது.