மார்ச் 14. இன்று அறிவியல் அறிஞர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் பிறந்ததினம். நவீன வானியற்பியலின் தந்தை இவர். இவரது சிறப்பு மற்றும் பொதுச் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள் அதுவரை நிலவி வந்த இப்பிரபஞ்சம் பற்றி நிலவி வந்த அறிவியற் கோட்பாடுகளை ஆட்டங்காண வைத்தவை. வானியற்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்பு மகத்தானது. இக்கோட்பாடுகள் நவீன பெளதிகத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூண்கள்.
இவரை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது என் பால்ய பருவத்தில். ஆனால் அப்போது இவரது சாரபியற் கோட்பாடுகளை அறிந்துகொள்ளவில்லை. அவற்றைப் புரியும் வயதுமில்லை. அப்பருவத்தில் அப்பா ஒரு ஒட்டுப்புத்தகம் (Scrap Book) எனக்குத் தயாரித்துத் தந்திருந்தார். அவற்றில் உலகின் முக்கியமான ஆளுமைகள் சிலரின் புகைப்படங்கள், முக்கிய இடங்கள் என்று பல புகைப்படங்களிருந்தன. அவற்றிலொன்று ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் புகைப்படம். நினைவில் நிற்கும் இன்னுமொரு புகைப்படம் யப்பானின் பாதாள இரயில் (Subway) நிலையப்புகைப்படம்.
பின்னர் இவரது புகழ்பெற்ற E=MCC சூத்திரத்தை என் பதின்ம வயதுகளில் யாழ் பொதுசன நூலகத்திலிருந்து பெற்ற அறிவியல் நூல்களிலொன்றான 'பெளதிகத்தின் வரலாறு' (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட நூல்) என்னும் நூலின் மூலம் அறிந்து கொண்டேன்.
பின்னர் என் இளமைப்பருவத்தில் வானியற்பியல் பற்றிய பல ஆங்கில நூல்களை வாசிக்கத்தொடங்கியபோது இவரது சார்பியற் தத்துவம் கோட்பாடுகள் கூறும் வெளி, நேரம் , புவியீர்ப்பு பற்றிய விளக்கங்களை அறிந்து பிரமிப்படைந்தேன். அன்றிலிருந்து என் அபிமானத்துக்குரிய முதலிடத்திலிருக்கும் அறிவியல் அறிஞராக இவர் மாறினார்.
மானுட இருப்பின் உறைவிடமாகத்திரியும் , பிரமாண்டமான , விரியுமிந்தப் பிரபஞ்சம் பற்றிய, அணுச்சக்தி பற்றிய கோட்பாடுகளுக்காக இவரை நினைவு கூர்வோம். அறிவியலுடன் நின்று விடாமல், தனது சமூக,அரசியல் சிந்தனைகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தியவர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். அதற்காகவும் அவரை நாமின்று நினைவு கூர்வோம்.