அண்மையில் முகநூலில் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரை பற்றிய பதிவொன்றினை இட்டிருந்தேன். அதில் கலாநிதி கா.இந்திரபாலாவினால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட அக்கட்டுரை பற்றிய விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன் (Ceylon Antiquary and Literary Register 2(3), Jan 1917, pp.194-195, 'Sankily's Fortress at Kopay'). அப்பக்கங்களைத் தேடியெடுத்து அனுப்பியிருக்கின்றார் என் முகநூல் நண்பர்களிலொருவரான யாழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் கு.சரவணன் அவர்கள்.
இக்கட்டுரைதான் இதுவரையில் நான் அறிந்த கோப்பாய்க் கோட்டை பற்றி முதன் முதலில் அதுவிருந்த இடம் அடையாளம் காணப்பட்டு, அது பற்றி எழுதப்பட்ட முதலாவது கட்டுரை. இதில் கோப்பாய்க் கோட்டை பற்றிக் குறிப்பிடும் சுவாமி ஞானப்பிரகாசர் அது பழைய கோட்டை என்று அழைக்கப்படும் காணியில் இருந்த விபரத்தையும், அதனருகில் கோட்டை வாய்க்கால் என்றழைக்கப்படும் பகுதியே கோட்டையின் அகழியென்றும் மேலதிக விபரங்களைத் தருகின்றார்.
கோப்பாய்க் கோட்டை பற்றி அடையாளம் காணப்பட்டு எழுதப்பட்ட முதலாவது கட்டுரை இது. இது மிகவும் முக்கியமான வரலாற்று ஆவணம். கோப்பாய்க் கோட்டை பற்றி இன்று எழுதும் எவரும், ஆய்வு செய்யுமெவரும் கண்டிப்பாக உசாத்துணை ஆவணமாகக் குறிப்பிட வேண்டிய கட்டுரை இது. அவ்விதம் குறிப்பிடப்படாமல் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள் எவையும் பூரணத்துவம் மிக்கவையாக இருக்க முடியாது. சுவாமி ஞானப்பிரகாசரின் கண்டு பிடிப்பை இருட்டடிப்பு செய்யுமொரு செயலாகவே அது கணிப்பிடப்படும்.
இக்கோப்பாய்க் கோட்டை பற்றி இதன் பின்னர் இப்பகுதிக்குப் பயணித்து எழுதப்பட்ட இரண்டாவது கட்டுரை , நான் அறிந்தவரையில், நான் 15.3.1981 வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதிய 'கோப்பாய்ப் பழைய கோட்டையின் பழைய கோலம்' கட்டுரையே. அதன் இன்றைய நிலை பற்றி , தற்போது அதுவிருக்கும் இடம் பற்றி அடையாளன் காணப்பட்டு, எழுத்தாளர் வடகோவை வரதராஜனின் உதவியுடன் கட்டுரையொன்றினை அண்மையில் பதிவுகள் இணைய இதழிலும் , முகநூலிலும் எழுதியுள்ளேன்.
- 15.3.1981 வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதிய 'கோப்பாய்ப் பழைய
கோட்டையின் பழைய கோலம்' கட்டுரை. -
மீண்டுமொருமுறை வரலாற்று முக்கியத்துவம் மிக்க இப்பக்கங்களைக் கண்டுபிடித்து அனுப்பிய கு.சரவணன் அவர்களுக்கு நன்றி. இத்தருணத்தில் கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவர்களுக்கும் என் நன்றியைக் கூற வேண்டும். அண்மையில் இக்கட்டுரை வெளிவந்த இதழ் பற்றி எழுதிய என் முகநூற் பதிவு கண்டு அவ்விதழ் பற்றிய முழு விபரங்களையும் தந்த அவரது உதவியே இன்று கு.சரவணன் அவர்கள் இப்பக்கங்களைத் தேடியெடுக்க உதவியிருக்கின்றது.
* இக்கட்டுரை பற்றி விசாரித்து யாழ் பல்கலைக்கழக நூலகத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். துணை நூலகர் K..சயந்தனும் இக்கட்டுரையைத் தேடியெடுத்து அனுப்பியிருந்தார். அவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
- கட்டுரையைத் தேடியெடுத்து
அனுப்பிய கு.சரவணனன் -
- சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை வெளியான இதழ்
பற்றிய பூரண தகவல்களைத் தந்த கட்டடக்கலைஞர் மயூரநாதன் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கோப்பாய்க் கோட்டை பற்றி நான் எழுதிய ஏனைய கட்டுரைகள்:
1. வரலாற்றுச் சுவடுகள்: 2020 - கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்! - வ.ந.கிரிதரன் - - -https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6012-2020
2. கோப்பாய்க் கோட்டை பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/6819-2021-08-26-16-05-36