எழுத்தாளர் 'தாயகம்' ஜோர்ஜ்.இ.குருஷேவ் 'பொன்னியின் செல்வன்' நாவலைப்பற்றி முகநூற் பதிவொன்று இட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "பொன்னியின் செல்வன் வாசிக்கவேயில்லை என்ற விசயத்தை வெளியில சொன்னா... கேவலமா பாப்பாங்களா!? பிரெண்ட்ஸ்!"
அதற்கு எதிர்வினையாற்றியிருந்த எழுத்தாளர் அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பின்வருமாறு தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்: "பலர் புளுகினாற்போல் அது திறமானதென்றில்லை. நான் கல்கிப்பிரியனல்லன். என்னிடம் 'பொன்னியின் செல்வன்' இருந்தது. கடைசி வரைக்கும் வாசித்து முடிக்கவில்லை."
இவர்கள் இருவரும் தம் வாசிப்பின் பரிணாம வளர்ச்சிப் படிக்கட்டிலொன்றில் அனுபவித்திருக்க வேண்டிய இன்பத்தை இழந்து விட்டார்கள். இவர்கள் பொன்னியின் செல்வனை வாசித்திருக்க வேண்டியது அவர்களது வாசிப்பின் ஆரம்ப காலத்தில். அப்பொழுதுதான் அதன் அருமை புரிந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் அம்புலிமாமாக் கதைகளை வாசித்து இன்புற்றோம். அடுத்த எம் வாசிப்புப் படியில் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை வாசித்தோம்.. அக்காலகட்டத்தைத் தவற விட்டு வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையில் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினால் அதனை ஒருபோதுமே இரசிக்க முடியாது. அதனைத்தான் இவர்கள் செய்கின்றார்கள். அதனால்தான் பொன்னியின் செல்வனை இவர்களால் இரசிக்க முடியவில்லை. நான் இப்போது பொன்னியின் செல்வனை வாசித்தாலும் எனக்கு அதனை முதன் முதலில் வாசித்தபோது அடைந்த இன்பமும், ஆர்வமும் ஏற்படாது. ஆனால் அது இப்பொழுதும் மகிழ்ச்சியைத் தருவதற்குக் காரணம் பால்ய , பதின்மப் பருவங்களில் வாசிப்பின்போது அது தந்த இன்பம்தான். அவ்வின்பமும், அவ்வாசிப்பனுபவமுமே இன்று எம் உணர்வுகளில் அதனைப்பற்றி எண்ணியதும் எழுகின்றன. ஆனால் ஒருபோதுமே இன்று என்னை வாசிப்பில் ஒன்றிவிடச் செய்யும் படைப்புகளான 'தத்யயேவ்ஸ்கியின்' 'குற்றமும், தண்டனையும்'. 'அசடன்', 'க்ரமசாவ் சகோதரர்கள்', 'டால்ஸ்டாயின் 'புத்துயிர்ப்பு' , 'போரும் அமைதியும்' போன்ற நாவல்களை என்னால் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் இரசித்து வாசித்திருக்கவே முடியாது. அதற்குரிய மானுட அனுபவமும், அறிவும் அப்போது எனக்கில்லை.
யாரும் அம்புலிமாமாக் கதைகளை, தொடர்களை வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையில் குறை கூறுவதில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை ஏன் குறை கூறுகின்றார்கள்? அம்புலிமாமாக் கதைகளைப்போல் வாசிப்பின் வளர்ச்சிப்படிக்கட்டில் வாசிக்கும் நாவல்களிலொன்றாக இவர்கள் பொன்னியின் செல்வனை உணர்ந்திருந்தால் அதன் அருமையினை உணர்ந்திருப்பார்கள். இன்று பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த புகழுடன் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு அதிகமாகப் புகழுடன் இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் இவர்களில் பலரும் தலைமுறை , தலைமுறையாக அந்நாவலை அவர்கள் தம் வாசிப்பின் ஆரம்பக் கட்டத்தில் வாசித்து மகிழ்ந்திருப்பதுதான். அதனால்தான் மேலும் வாசிப்பில் முதிர்ச்சியடைந்த நிலையிலும் 'பொன்னியின் செல்வன்' போன்ற நாவல்களைப்பற்றி எண்ணியதுமே மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
முகநூல் எதிர்வினைகள்:
Satheeshvaran Parakiramasingam
தேசிக்காய் தலை வாசித்தால் அதனை எதிர்க்கிறார் போல
Balachandran Muthaiah
சரியாக கூறினீர்கள்! எல்லாம் அந்தந்த காலத்துடன் சரியாக கலக்கவேண்டும். போரும் சமாதானமும் இப்போ சுவைக்கும்!
Vetri Chelvan
கிரி நீங்கள் சொல்வது உண்மை. அந்தந்த காலகட்டங்களில் கற்பனை கதைகளையும், உண்மை கதைகளையும் உண்மையும் கற்பனையும் கலந்த கதைகளையும் வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ராசு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் நாவலை வாசிக்கும்போது நாங்களும் ஒரு விடுதலை போர… See more
Shadagopan Ramiah
எனக்கும் கூட இத்தகைய உணர்வு தான் தோன்றுகிறது....
Rajaji Rajagopalan
"நான் இப்போது பொன்னியின் செல்வனை வாசித்தாலும் எனக்கு அதனை முதன் முதலில் வாசித்தபோது அடைந்த இன்பமும், ஆர்வமும் ஏற்படாது." என்ற உங்கள் கூற்று எனது வாசக அனுபவத்தின்படி முற்றிலும் உண்மை. அதுவொரு காலத்தால் அழியாத காவியம்.
Balachandran Muthaiah
Rajaji Rajagopalan இதேபோல்தான் யவனராணியும் கடறபுறாவும். பின்பு சஜதாவின் வசந்த் character. எல்லாம் அந்தந்த காலத்தையது!
Giritharan Navaratnam
Balachandran Muthaiah இவையெல்லாவற்றையும் மானுட வாசிப்பு அனுபவத்தின் வளர்ச்சிப்படிக்கட்டுகளாகவே நான் கருதுகின்றேன்.
Gajey Pandithurai
நீங்கள் குறிப்பிடும் வாசிப்புப் படிநிலைகள் சரி என்றே நானும் நினைக்கிறேன்
Arun Chellappah
மீண்டும் வாசிக்கலாம் "பொன்னியின் செல்வன்"
Rajaji Rajagopalan
கல்கியின் நூல்களை வாசித்த அனுபவத்தை எனது நாராயணபுரம் நாவலில் எழுதியிருக்கிறேன். பாலா Balachandran Muthaiah ஒருமுறை பார்க்கலாம். எங்களூரில் ஒரேயொரு நூலகம். உள்ளேயிருந்த ஒரு அலுமாரியில் கல்கி, அகிலன், நா.பா எல்லாமே இருக்கும். பொ.செ வனின் 5 பாகங்களையும் அங்கே வாங்கிலில் இருந்துதான் வாசித்தேன். வீட்டுக்குக் கொண்டுவர முடியாது என்ற நடைமுறையே காரணம். கதையை மறந்துபோனேன் ஆனால் வாசித்த அனுபவம் இப்போதும் நெஞ்சை நிறைத்தபடி.
Rajaji Rajagopalan
மணி ரத்தினத்தின் பொ.செ ஒருவேளை பிசுபிசுத்துப் போனாலும் கல்கியின் பொ.செ தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
Arun Chellappah
Rajaji Rajagopalan பொன்னியின் செல்வன் முழுமையையும் திரைப் படத்தில் உள் வாங்குவது இயலாத காரியம்
Perumal Ganeshan
காலவயதும் உணர்வுகளும் அனுபவமும் ஒரு இலக்கிய சுகானுபவத்தை தீர்மானிப்பவை என்பது மிகவும் உண்மை....ஒரு முதிர்ந்தவருக்கு அம்புலிமாமா போல இளைஞர் தஸ்தாவூஸ்கிபோல எனவே அந்த வயதினராக தம்மை மாற்றிக்கொண்டு அனுபவிக்க வேண்டும்
Thambi Narani
மிக சரியான கூற்று.
Abdul Haq Lareena
மிகச் சரியான கருத்து. வழிமொழிகிறேன்
Rathydevi Kandasamy
நீங்கள் சொல்வது உண்மையே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாசிப்பனுபவம் வேறு வேறு உணர்வைத் தரும். ஆனாலும் என்றென்றும் பொன்னியில் செல்வன் கொண்டாட்டத்துக்குரியதுதான். இப்போது ஒலிவடிவிலும் கேட்க முடிகிறது.
Vadakovay Varatha Rajan
முற்றிலும் உடன்படுகிறேன் கிரி .
சிறுவயதில் பித்துக்கொண்டு வாசித்த மாயவி கதைகளை இப்போது அனுபவித்து வாசிகமுடியுமா ?
இடைக்காலத்தில் கொள்ளை கொண்ட பாலகுமாரன் , சுயாதா போனற்றோர் இப்போ சப்பென்று போகிறார்கள் .
அந்தவயதில் சுந்தரராமசாமியின் ஜெ ஜெ சிலகுறிப்புகளையோ , புத்துயிர்ப்பையோ , போரும் அமைதியையுமோ வாசித்து புரிந்து கொண்டிருக்க முடியுமா ?
எழுத்துக்கள் அந்த வயதுடன்தான் இறக்கைகட்டிப் பறக்கச் செய்யும் .
Selvaranjany Subramaniam
வாசிப்பு அனுபவங்கள் பற்றிய மிகச் சிறப்பான கணிப்பு.
Sreeno Sri Sreesu
எனக்கு ஒரு நூல் பிடிக்கவில்லை, என்று கூறுவதற்கும் அந்த நூலைக்குறை கூறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அளவெட்டி வீடடில் எனது அம்மா ரஸித்துப்படித்த "பொன்னியின் செல்வனை" நான் முயன்றபோது, எனக்கு வயது 13 இருக்கலாம். 40 அல்ல. (புளுகுக்கு அல்ல: நான் ardent reader என்று பிறரால் அனுமானிக்கப்படுபவன்.) * உங்களுக்குப்பிடித்த ஒன்று எனக்கும் பிடித்திருந்தே ஆகவேண்டுமென்று அவாவுவது,- எனக்குப்பிடிக்காத ஒன்றை உங்களுக்குப் பிடித்ததே என்ற "ஒரே" காரணத்துக்காக பிடிக்க வைக்க முயல்வதாம். பிடிக்காதென்றால் பிடிக்காது. பிடித்தவர்களுக்கு பிடிப்பதானது பிடித்தவர்களின் பிரச்சினை.
Giritharan Navaratnam
நான் பொதுவானவர்களிலொருவராக எண்ணி விட்டேன். ஆனால் நீங்கள் விதிவிலக்கானவர் என்பதை இப்போது அறிகின்றேன். சுந்தர ராமசாமியும் ஒரு முறை தமிழில் தான் வாசிக்கத்தொடங்கியபோதே வெகுசனப் படைப்புகளைத் தாண்டிய படைப்புகளை வாசிக்கத்தொடங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.,… See more
Sreeno Sri Sreesu
அல்ல. நானும் பிறரைப்போல அம்புலிமாமாவிலிருந்து தான் ஆரம்பித்தேன். ஏனோ வரலாற்று நாவல் இழுப்புகளில் எனக்கு ஈடுபாடிருக்கவில்லை. வரலாற்று non-fiction இல் அக்கறை உண்டு. திரிக்கப்படும் வரலாற்று நாவல்களில் இல்லை.
Slm Hanifa
நான் ராஜேஷ்குமாரையும் வாசித்தவன்,ஜாவர்சீதாராமனை மறக்கமுடியுமா? பொன்னியின் செல்வன் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையாம்
Ravi Ravithasan
4 varusama repeat mode la vasichiddu irukken
Noel Nadesan
Ponniyenselvan was a romantic novel genre disappeared in western literature 200 years ago but it help the Tamils in councilng and therapeutic in some extent.
George RC
ரசனை என்பது ஆளாளுக்கு வேறுபடும் தானே, கிரி. என்னுடைய வாசிப்பு எனக்கு எழுதப் படிக்கத் தொடங்கிய காலத்தில் தொடங்கியது. விரும்பினால் நான் வாசித்தவற்றை பட்டியல் இட்டும் சொல்லலாம். நாலாம் வகுப்பில் சத்தியசோதனை முதல் பின்னர் குமுதத்தின் இலவச இணைப்பாக வந்த சுஜாதாவின் நான் பிளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேன் வரை வாசித்து வீட்டில் இருந்ததால் பல தடவைகள் மறுவாசிப்பும் செய்திருக்கிறேன். திமுகவின் உதயசூரியன் முதல் வறுமைக்குள்ளும் எனது அப்பா வாங்கிய தினசரிப் பத்திரிகைகளும் சந்தைக்குப் போய் வரும் போது எனது ஐயா வாங்கி வரும் சிந்தாமணியும்... சாண்டில்யன் முதல் கல்கியில் வந்த சரித்திர (?) கதைகள் என கண்ணில் பட்ட இன்னோரன்னவற்றை எல்லாம் வாசித்துத் தான் இருக்கிறேன். அதில் எதுவும் இன்றைக்கும் என் நினைவில் இருப்பதாக நினைவில்லை. வைரவர் கோவில் கிடா வெட்டில் குடிக்கும் ஐஸ்கிரீம் போல. அப்போது வாழ்வில் மறக்க முடியாதவொரு சுவாரஷ்யமாக இருந்திருக்கும். இப்போது நினைவில் கூட இருக்காது. அந்தக் காலங்களில் நான் ஆங்கிலத்தில் வாசித்த சர்வதேச அரசியல் இன்றைக்கும் என் மனதில் இருக்கிறது. இன்றைக்கும் எதையாவது எழுத அவை உதவிக் கொண்டிருக்கின்றன. நல்ல காலம், இந்த இலக்கிய வாதிகள் சொல்வது போல... வாழ்க்கையில் பாதியை இழந்து விட்டீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை. இப்படி இழந்த பாதிகளைக் கணக்கிட்டால், எனக்கு சுமார் முப்பத்திநான்கு வாழ்க்கைகள் இருந்திருக்க வேண்டும்!
Giritharan Navaratnam
'கல்லாநிதி கியூறியஸ் ஜி' விதிவிலக்கானவர் என்பது புரிகின்றது.//அப்போது வாழ்வில் மறக்க முடியாதவொரு சுவாரஷ்யமாக இருந்திருக்கும். இப்போது நினைவில் கூட இருக்காது.// எனக்கு அக்காலகட்டத்துடன் பிணைந்திருந்த எல்லாமே பசுமையாக நினைவிலுள்ளன. வாசித்த நூல்கள், அவற்றிலுள்ள கதாபாத்திரங்களையும் உள்ளடக்கியே கூறுகின்றேன். ஆழநடுக்காட்டில் வாழும் வேதாள மயாத்மா, இளைய பல்லவன், இந்திரபானு, நரசிம்மர் தொடக்கம் ஆழ்வார்கடியான், வல்லவரையான் வந்தியத்தேவன் போன்ற பலர் இன்னும் என் ஆழ்மனத்திலிருக்கின்றார்கள்
Jenney Jeyachandran
உண்மை கிரிதரன் ! வாசிப்பும் ஒரு படிமுறை வளர்ச்சியே என்பதனை, அனுபவத்தினூடு பதிவிட்டுள்ளீர்கள்! இதுவே எம்மைப் போன்ற வாசகரின் அனுபவமும்.. ! வாசிப்பானது கால ஓட்டத்தில் கற்றலாகவும் அதுவே எம்மை படைப்பாளிகளாகவோ, கற்பிப்பவர்களாகவோ, பேச்சாளராகவோ ஒரு படிமுறை ஆளுமைகளை வளர்க்கின்றது!
Rikash Mohamed
உண்மை
Yoga Valavan Thiya
நான் பெரிய வாசாசிப்பாளனும் அல்ல, எழுத்தாளனுமல்ல. பொன்னியின் செல்வன் பலதடவைகள் வாசித்துள்ளேன் . இப்போதும் இரசனையுடன் வாசிப்பேன். கதையோடை கதை நான் விரும்பி பார்ப்பது சிறுவர்களுக்கான கார்டூன் படங்களையே. குழந்தைதனத்துடன் இருப்பதில் எனக்கு அலாதிபிரியம்.
Amuthanathi Suthersan
பொன்னியின்செல்வன் சிறந்த நாவல். அதனை ரசிப்பதற்கும் ஒரு வாசிப்பு அனுபவநிலை வேண்டும். நாவலுக்குள் நாமும் நடந்து பவனிக்கும் அனுபவம் வரவேண்டும். ஆனால் அது ஒரு கற்பனைக் கதையே என்னும் திடத்தோடு வாசிக்கவேண்டும். அது வரலாற்று நூல் என்னும் எண்ணம் வந்துவிடக்கூடாது. பார்ப்பனியத்துக்குள் மூழ்கிய பொய்யான வரலாற்றை மீண்டும் சீர்குலைத்து தங்கள் வசமாக்கியுள்ள நாவலே அது. இப்படி பல செப்படி வித்தைகளைசெய்பவர்கள் கல்கி ராஜாஜி சோ சுஜாதா ஜெயமோகன் மணிரெத்தினம் வரை பட்டியல் நீள்கிறது. நமது கம்பன் கூட இவர்கள் கைக்கூலியாய் செய்த வேலைதான் கம்பராமாயணம்.
நன்றி: https://www.facebook.com/GiritharanVN/posts/10158617436048372