எழுத்து ஊழியத்தை இறுதிவரை மேற்கொண்டவர்..! மனித நேயங்கொண்ட 'மதுரகவி' இ. நாகராஜன்..!! - வி. ரி. இளங்கோவன். -
அறுபதுகளின் முற்பகுதி..
யாழ்ப்பாணத்தில், இன்றைய நவீன சந்தைக் கட்டிடம் அன்று இருக்கவில்லை. அந்த இடத்தில் பஸ் நிலையம் பரந்த பரப்பளவில் விசாலமாக அமைந்திருந்தது. அதன் மேற்குத் திசையில் கஸ்தூரியார் வீதித் தொடக்கத்தில் 'பூபாலசிங்கம் புத்தகசாலை.'
இங்குதான் அதிகமான இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் சந்தித்துக்கொள்வார்கள். தமிழகத்திலிருந்து வரும் மார்க்ஸிச நூல்கள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளியாகும் இலக்கிய நூல்கள், மார்க்ஸிச ஏடுகள் என்பன இங்கு கிடைக்கும். ஆஸ்பத்திரி வீதியில் 'தம்பித்துரை புத்தகசாலை.' இவர்கள் தான் குமுதம், ஆனந்த விகடன் சஞ்சிகைகளின் விநியோகஸ்தர்கள். கே. கே. எஸ். வீதியில் 'தமிழ்ப்பண்ணை' புத்தகசாலை இருந்தது. இங்கு தமிழகத்தில் வெளியாகும் திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும். இந்தப் புத்தகசாலைகள் யாவற்றுக்கும் என் பாடசாலைக் காலத்திலேயே எனது மூத்த சகோதரர் நாவேந்தனுடன் சென்றுள்ளேன். அந்தக் காலத்தில், உயர்ந்த உருவத்தில், தூய வெள்ளை 'நாசனல்' உடையில், அங்கெல்லாம் வந்துபோன மனிதன் தான் இ. நாகராஜன் என அண்ணரிடம் கேட்டு அறிந்துள்ளேன்.
அண்ணரின் நண்பரான அவரைப், பின்னர் காணும்போதெல்லாம் ஒருசில நிமிடங்கள் அவருடன் பேசிக்கொள்வேன். இனிமையாகப் பேசும் நல்ல மனிதனாகக் காணப்பட்டார். அவர் மரபுக் கவிஞர். சிறுகதை, நாவல், குறுநாவல், காவியங்கள் பல படைத்தவர். மலையகத்தில் பார்த்துவந்த ஆசிரியர் வேலையைத் துறந்து சுதந்திரமான மனிதனாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார். 1948 - ம் ஆண்டளவில் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். அன்று வெளிவந்த 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். ஈழகேசரியில் சிறுவர் பகுதி, மாணவர் பகுதிக்கென பல்வேறு புனைபெயர்களில் சிறுவர் பாடல்கள், கட்டுரைகள் இதழ்கள் தோறும் எழுதி வந்தார். சிறுகதைகள், கவிதைகள் பலவும் தொடர்ந்து எழுதி வந்தார். அன்று ஈழகேசரி ஆசிரியராக விளங்கிய இராஜ அரியரத்தினம் இவரை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து எழுத வைத்தார். ஈழகேசரி வளர்த்துத் தந்த எழுத்தாளர், கவிஞர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.