பெண் எப்போதும் ஆணை சார்ந்து வாழ்பவளாகவே இருந்திருக்கிறாள். கடந்த இருபது வருடங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றாலும், எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதனைப் பெண்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள். எனவே அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றே பார்க்கப்படவேண்டும். இந்த புத்தகம் ஒரு ஆண் எழுதியது என்பது மிகப் பெரும் சிறப்பு. இந்த புத்தகத்திற்கு "யாதுமாகி" என்று மிகப் பொருத்தமான ஒரு பெயரை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மிகவும் பொருத்தமான முகப்பு ஓவியம் வரைந்த திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களையும் இங்கே பாராட்டவேண்டும். நூலாசிரியரின் பாட்டி திருமதி தையலம்மா கார்த்திகேசு, மனைவி மாலதி இருவரும் இவர் எழுத்துலகில் தொடர்ந்து பணியாற்ற முக்கிய காரண கர்த்தாக்கள் என்பதை முருகபூபதி நன்றியோடு முன்னுரையில் நினைவு கூறுகிறார்.
இந்நூலில் இடம்பெறும் முதல் பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், ஆறு தசாப்த காலம் தமிழ் எழுத்துலகில் சில முக்கியமான படைப்புக்களை தந்தவர். அவர் களப்பணி ஆற்றி எழுதிய நாவல்கள் பற்றியும், அவரது துயரமான இறுதி நாட்கள் பற்றியும் எழுதியுள்ளார். அடுத்த ஆளுமை அருண். விஜயராணி. 1970 களில் இலங்கை வானொலியில் யாழ்ப்பாண மண்ணின் மொழி வாசனையோடு விசாலாட்சி பாட்டி என்ற தொடரை எழுதி புகழ்பெற்றவர். அங்கதம் தோய்ந்த நடையில் சமூக சீர்திருத்த சிறுகதைகள், நாடகங்கள் எழுதியவர். மத்திய கிழக்கு, லண்டன் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர். அடுத்த ஆளுமை கமலினி செல்வராசன். இயல்பிலேயே கலை இலக்கிய நடன இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தவர். இலங்கை வானொலியில் கணவர் சில்லையூர் எழுதி இயக்கிய நாடகங்கள் பலவற்றில் நடித்தவர். ஆதர கதாவ, கோமாளிகள் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கலை இலக்கிய மேடைகளிலும் தோன்றியவர். கணவர் இறந்த பின்னரும் நெற்றித் திலகத்துடன் வலம் வந்த புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். கணவரின் மறைவுக்குப் பின் அவரது கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். பலதுறைகளில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி 61வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியையும் இந்த நூலின் வாயிலாக அறிகின்றோம்.
- எழுத்தாளர் முருகபூபதி -
அடுத்த ஆளுமை ஆச்சி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட, கோபிசாந்தா என்ற இயற் பெயர் கொண்ட, கலைமாமணி, பத்மஸ்ரீ விருது பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் சுமார் ஐந்தாயிரம் நாடக மேடைகளும் கண்ட சாதனைப் பெண் நடிகை மனோரமா. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களே உடன் நடிக்க பயந்த திறம்வாய்ந்த ஆளுமை. கணீர் குரலில் சிறந்த உச்சரிப்புடன் பேசியும், பாடியும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்கள் ஏற்று தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரை பதித்தவர். மனோரமா தமிழ்த் திரையின் ஒரு சகாப்தம். இவர் பற்றிய பல செய்திகளை முருகபூபதி பதிவுசெய்துள்ளார்.
அடுத்த ஆளுமை வள்ளிநாயகி இராமலிங்கம். குறமகள் எனும் புனைபெயரில் எழுதிவந்தவர். 1933 இல் பிறந்த இவர், பெண் கல்வி எனும் விழிப்புணர்வு கூட இல்லாத காலகட்டத்தில் படித்து, இயல், இசை, நாடகம் மற்றும் இலக்கியத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். இரண்டு வயதில் வாசிக்கத் தொடங்கி நான்கு வயதில் கட்டுரை எழுதி, “போலி கௌரவம்” எனும் சிறுகதையை 17 வயதில் எழுதினார் என்பதை அறிகின்றோம். சீதன முறையை ஆதரிக்கும் சமூக சீர்கேட்டிற்கு எதிராக தனது எழுத்துகளை போர்க்குரல் ஆக்கியவர். படைப்பு இலக்கியத்தோடு நின்று விடாமல் வடமாகாணப் பெண்களின் கல்வி பற்றி தீவிரமாக சிந்தித்து எழுதியவர். முதுமாணி பட்டத்திற்கான இவரது ஆய்வு “யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி” என்னும் தலைப்பில் அமைந்தது. என்பதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
ஆறாவது ஆளுமை “கெக்கிராவ சஹானா” 1968 இல் பிறந்து 12 வயதிலேயே இலக்கியப் பிரதிகள் எழுதத் துவங்கி, இலக்கிய இதழ்களைப் படித்து கல்வி கற்று, ஆசிரியர் பணி ஏற்று தன்னையும் ஒரு படைப்பாளியாக உருவாக்கிக்கொண்டு பத்து நூல்களையும் வரவாக்கி இருக்கிறார். ஆங்கில இலக்கியங்கள் பற்றிய அறிமுக உரைகள், கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மொழி பெயர்ப்பு, நாவல், ஆய்வு முதலான துறைகளில் ஏராளமான பதிவுகளை வரவாகிய இவர் அகாலத்தில் திடீரென மறைந்தது பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.
அடுத்த பெண் ஆளுமை தங்கேஸ்வரி. நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். ஒரு மொழி அமிழ்த்து சாகடிக்கும் நியாயமற்ற செயலைக் கண்டித்து 2011 இல் கொழும்பில் நடத்திய மாநாட்டில் "கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மங்களும் தொன்மைக் கிராமங்களும்" என்ற ஆய்வை வெளியிட்டவர். ஊர்கள், ஆறு, நதி, குளம் போன்றவற்றின் தமிழ்ப் பெயர்களை நீக்கிவிட்டு சிங்களப்படுத்தியதை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார்.தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். நாட்டுப்புற கதைகளும் எழுதியவர். கலை இலக்கிய ஆர்வலர். சமூக ஆய்வுகளே இவரது எழுத்தூழியம். இவரது பல ஆய்வுக்கு கட்டுரைகள் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு ஆவணக்கங்களாகத் திகழ்கின்றன. இவரின் மறைவு ஈடுசெய்ய இயலாதது.
இந்த ஆளுமைகளை சந்தித்து பேசிய அனுபவம், அவர்களின் படைப்புகள், பெற்ற விருதுகள், வளர்ச்சியில் துணை நின்ற சக எழுத்தாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகியவற்றை எளிய மொழியில் சில சுவையான சம்பவங்களுடன் ஒரு கதைசொல்லியாக இருந்து நம்மை கூடவே அழைத்துச் செல்லுவது முருகபூபதியின் சிறப்பு. இந்தப் புத்தகம் ஆளுமைகளைப் பற்றிய குறிப்பைத் தான் சுட்டிக்காட்டுகிறது. இந்த குறிப்புகளைக் கொண்டு இந்த ஆளுமைகளின் வாழ்க்கை, சிரமங்கள், போராட்டங்கள் என்பவற்றை பாடமாக கற்றுக்கொள்ளும் அடுத்த தலைமுறையினர் பயன்பெறுவார்கள் என்று நம்புவோம். அவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. “ தனக்குத் தொழில் எழுத்து “ என ஓயாது இயங்கும் முருகபூபதி அவர்களின் நூல்களின் வரிசையில், யாதுமாகி 28 ஆவது நூல் என்பதையும் சுட்டிக்காண்பிக்கின்றேன்.