கார்க்கியே ஒரு கட்டத்தில் கூறுவார்: அடிமைகளின் ஒழுக்கமுறை போலவே எசமானர்களின் ஒழுக்கமுறையும் எனக்கு அந்நியமானதுதான். கலகம் செய்ய நிமிர்ந்தவனுக்கு உதவி செய் என்ற ஒழுக்கமுறை எனக்குள் வளர்ந்திருந்தது, என. ஒரு புறம் பைபிள் போன்றவை ஏற்படுத்தியிருந்த அல்லது நியாயப்படுத்தியிருந்த ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் வசதியாக ஏந்திக் கொடு என்பது போன்ற அடிமைகளின் கலாச்சாரம். மறுபுறம், நீட்சே போன்றோர் நியாயப்படுத்தியிருந்த – ‘மக்கள் என்போர், ஒரு சிலரால் அடக்கி ஆளப்பட பிறந்தவர்களே’ என்று போதித்த முதலாளிகளின் அறம். இவ்அறங்களிடையேத்தான், தான் தனது மூன்றாவது ஒழுக்கமுறையை கைக்கொண்டதாக கார்க்கி கூறுவார்.
அவர் மேலும் கூறுவார்: “ வாழ்க்கையில் செயல்பட்டு வருகிற ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் விகாரப்படுத்தி வருகின்றது. அந்த ‘சக்தியைத்தான்’ இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அது விகாரப்படுத்தி வைத்திருக்கும் ‘விஷயங்களை’ அல்ல” என்று. இக்காரணங்களின் நிமித்தமே, சாராம்சத்தில், தஸ்தவாஸ்க்கி முதல் மேலும் அநேகரில் இருந்து கார்க்கி அடிப்படையில் வித்தியாசப்படுவதாய் இருக்கிறார். இப்பார்வையில் நின்றே, கார்க்கி, கிளிம் என்ற பாத்திரத்தை அணுகி உள்ளார் என நம்பலாம். இத்தகைய ஓர் பின்னணியில் கிளிம் ஒரு புதிய படைப்பாக புதிய வார்ப்பாக தோன்றுகிறான். (இதுவரை கார்க்கி படைத்தளித்த தாயின் பாவெல், பிரம்மச்சாரி மாட்வி போன்றவர்களிடமிருந்து வித்தியாசமுற்று…)
கேள்வி இதுதான்: யார் இந்த கிளிம்? இவனது பங்களிப்பு எவ்வகைக்குள் அடங்கக்கூடியதாய் இருக்கும் என்பதே இந்நூலின் இரண்டாம் பகுதியான எழுப்பக்கூடிய மிகக் கொடிய வினாவாகின்றது. ஒரு புத்திஜீவியின் மோஸ்த்தார் அல்லது முற்போக்கு மோஸ்தாரை அணிந்துக்கொள்ளும் இவ்உள்ளீடற்ற நபரான கிளிம், வரலாறு தோற்றுவிக்கக்கூடிய முற்போக்கு அலைகளுக்கு அல்லது அவற்றை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய முன்னேற்றம் கொண்ட சக்திகளுக்கு தன் செயற்பாடுகளால் விளைவிக்ககூடிய நாசப்பாடுகள் தான் யாவை? அவை எவ்வகையிலானதாக இருக்கப்போகின்றது - இன்னும் சரியாக கூறுவதானால், இருக்கக் கடவது என்பதே இந்நூலும் கிளிமும் முன்வைக்கக்கூடிய பிரகாசமான கேள்விகளுள் ஒன்றாக இருக்கின்றது.
கிளிம்முடன் நெருங்கி பழகும் ஒரு பொலிஸ் உளவாளி, இதே கிளிம்முடன் நெருங்கி பழகும் இன்னுமொரு பெண் உளவாளியால் ஒரு கட்டத்தில் காட்டிக்கொடுக்கப்படுகின்றான். காட்டிக்கொடுக்கப்பட்டதன் பின், காட்டிக் கொடுக்கப்பட்டவன், கிளிம்மிடம் வேதனையுடன் பின்வருமாறு கூறுகின்றான்:
“உங்களை அண்மித்து, இருக்கும் ஒரு நபரால்தான்…”
கேள்வி, அதாவது அண்மித்து, அருகருகாக இருக்கும் இவர்கள், உண்மையில், யார் இவர்கள் - இவர்களின் செயற்பாடுகள், விளைபயன்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பது இந்நூல் எழுப்பக்கூடிய மனதை வாட்டும் இன்னுமொரு கேள்வியாகின்றது.
மனுகுல வரலாறுகளை எடுத்தால், அண்மித்து அருகருகாய் இருந்த ஒரு குருசேவை நினைத்தாலும் சரி, அல்லது சீன வரலாறில்; அண்மித்து அருகருகாக இருந்த ஒரு தெங்சியோபிங்கை எடுத்தாலும் சரி. யார் இவர்கள்?
கிளிம்மிடமும் இவர்களின் இந்த சாயல் உண்டா? அல்லது இவர்களிடம் கிளிம்மினது சாயல் உண்டா? இதுவே இந்நூல் முன்வைக்கும் பாரிய வினாவாகின்றது.
ஒரு பாரிஸ் கம்யூன் மாத்திரமல்ல – அதற்கு முன்பிருந்தே, வரலாறு வரலாறாக, காட்டிக்கொடுப்புகளையே வரலாறுகளாக தெரிந்து வைத்திருக்ககூடிய ஒரு கார்க்கி இதனை தன் வாழ்நாளில், தன் காலத்தில் இந்நூலுக்கூடாக நாடிப்பிடிப்பதாகவே தெரிகின்றது – முக்கியமாக “ஆளுமையின் சிதைவுகள்” போன்ற வரலாற்று பார்வைகளை அவர் ஏற்கனவே ஒரு உலகப்பார்வைக்கு படைத்து தந்துள்ளார், என்ற பின்னணியில் இருந்து பார்க்குமிடத்து. இருந்தும் கேள்வி இதுதான்: யார் இந்த மனிதர்கள்? இவர்கள் எங்கிருந்துத்தான் வருகின்றார்கள்?? இவர்களது உளவியல் அல்லது இவர்களின் அந்தரங்க உலகு எப்படிப்பட்டதாய் இருக்கும்??? – என்பதனையே இந்நூல் ஆழமாக வாதிக்க முற்படுவதாய் தோன்றுகிறது.
இந்நூலே ஓரிடத்தில் கூறுகின்றது: “ஒன்றல்ல இரண்டல்ல – ஆயிரக்கனக்கான கிளிம்முகள் எம்முடன் நடக்கின்றார்களே” என. இது உண்மை எனில், இவை அனைவராலும் நிதானித்து நோக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பாரதியை கொல்லக்கூடிய மனிதன்தான் யார்? அவனது சிந்தனை உலகு எப்படிப்பட்டதாய் இருக்கும்? அவனது வேர் எது? அவனது உள்மனது எதை ஒலிக்க கூடும் என்பதே கேள்வியாகின்றது. இத்தகைய கேள்விகளின் ஒரு பகுதியை இத்தொகுதி எழுப்புவதாய் உள்ளது எனலாம். இவ்வடிப்படையிலேயே, பல்வேறு வகைப்பட்ட அடித்தளங்களை, இந்நூலானது தனது கவனமான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக படுகின்றது. முக்கியமாக கிளிம்மினது ஆன்ம உள்ளீர்ப்பையும் பின்னர் அது தனித்து விடும் நொடிகளில் அது பயணிக்கும் அல்லது பயணிக்க முற்படும் பாதைகளையும், அல்லது அதன் படைப்பாற்றலையும், மேலும் அப்படைப்பாற்றலானது, படைப்பாற்றல்களின் விதிகளுக்கமைய அவனது புத்திபூர்வ அல்லது பிரக்ஞைபூர்வ உலகை தாண்டி எப்படி எப்படி எல்லாம் சஞ்சாரிக்க முற்படுகின்றது– அவற்றின் சாரம்தான் என்ன என்பவை உள்ளடங்கலாக, இது, தன் விசாரணையை தொடர்கின்றது.
கூடவே, ஆண்-பெண் உறவுகள் தொடர்பில் - முக்கியமாக கிளிமின் முதல் காதலி தொடர்பிலான உறவுமுறை, பின் அங்கே முளைவிடும் “நான்”, மேலும் காதலில் கூட, கிளிம்மின் தாமரை இலை தண்ணீர் போன்ற ஒட்டமுடியா தன்மை – பின் அவர்களின் தவிர்க்கமுடியா பிரிவு - இவையாவும் மறுபுறத்தில் - நம்பமுடியா அளவில் மிக நுணுக்கமான தேர்ந்த உளவியல் திறனோடு சித்தரிக்கப்படுகின்றன. மனித உறவுகளை, அவர்களின் மனத்துவ உளப்பாங்கினை முன்வைத்து சித்தரிப்பதில் டால்ஸ்டாயின் சித்திரங்களை அவ்வப்போது ஞாபகமூட்டியும், சில வேளைகளில் அவற்றை தாண்டியும் இச் சித்தரிப்புகள் பயணிப்பதாக படுகின்றது. கிளிம்மின், தாமரை இலை தண்ணீர் போன்ற அணுகுமுறை, அவன் நெருக்கிப் பழகும் பெண் பாத்திரங்களாலேயே, அளவிடப்பட்டு மிக சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றது.
“உன்னிடம் ஒரு கனவுக்கான உள்ளமோ அல்லது ஒரு கவிதைக்கான இதயமோ இருப்பதாய் தெரியவில்லையே. இருப்பதெல்லாம் ஒரு எண்கணிதம் சார்ந்த காரண காரிய தொடர்புபட்டதாகத்தான்..”
“உன் சிந்தனை உலகு வெறும் பகுத்தறிவு சார்ந்ததாக அல்லவா இருக்கிறது – மனசாட்சிக்கு இடமில்லாததாய்..”
இரண்டாம் தொகுதியின் இறுதிப்பகுதியில், பாரிய யுத்த காட்சிகளை விவரிக்கக் கூடிய பிரமாண்டமான வர்ண ஓவியங்களை ஒத்த, மக்கள் எழுச்சி காட்சிகள், சித்தரிப்புக்குள்ளாகின்றன. ஆக, இந்நூல் பயணப்படும் திக்குகளும் திசைகளும் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன. ஓர் விமர்சகன் (யுடநஒயனெநச குயனநலநஎ) மிக சரியாக கூறியிருப்பது போல மனிதத் தாபங்களினதும் மனித விவேகத்தினதும் பிரமாண்டமான படைப்பாகின்றது இந்நூல் என்பதில் சந்தேகமில்லை.
2
கிளிம்மின் வாழ்வியலானது, தனது நடைமுறை இருப்பால், சில சிறப்பான குணாம்சங்களை கொண்டதாக அமையப்பெற்று இருக்கின்றது. தன் சக தோழரிடை, இப்பாத்திரம் விளைவிக்க கூடிய சீர்குலைப்பானது மிகுந்த நுணுக்கம் சார்ந்தது. ஒரு பெண் பாத்திரம், தன் சக தோழன் குறித்து ஆர்வத்தடன் விசாரிக்கும் போது கிளிம்மின் பதில் பின்வருமாறு இருக்கின்றது: “அவனை விட பத்து வயது அதிகமாய் உள்ள மாது ஒருவளிடம் தீராத காதல் கொண்டவனாய் மாறி உள்ளான். என்ன செய்வது… மிக மோசமான கவிதைகளை வேறு எழுதி தொலைக்கின்றான்...”
மேலோட்டமாய் பார்க்குமிடத்து, எந்த ஒரு உள்நோக்கமும் அற்று குறித்த இளைஞன் மீது பச்சாதாபம் கொண்டது போல ஆற்றப்பட்ட ஒரு கூற்றாக மேற்படி கூற்று தென்பட்டாலும், இக்கூற்று எத்தகைய எதிர் விளைவுகளை, குறித்த நபர் குறித்து, விசாரித்தவளிடம், ஏற்படுத்தியிருக்கும் என்பது தெளிவு. இதே போன்று, பிறிதொரு தோழியிடம், பிறிதொரு நண்பன் குறித்து, கேட்கப்படுகையில் வேண்டா வெறுப்பாய் கூறுவது போல கூறுவான் கிளிம்: “அவனை நான் இப்போதெல்லாம் ‘அதிகமாக’ சந்திப்பதே இல்லை என்றே கூற வேண்டும.; சற்று சள்ளை பிடித்தவனாய் வேறு ஆகிவிட்டான்…”
இப்படியாக, தான் சார்ந்த சக மனிதர்களை ஒரு நுணுக்கமான முறையில் கொச்சைப்படுத்தி தீர்ப்பதற்கூடு, ஒரு நட்பை அல்லது ஒரு நட்பு சார்ந்த ஒரு உறவை நாசமுற செய்வதில், இயல்பாய் நுணுக்கம் வாய்ந்தவனாக, கிளிம், காலப்போக்கில் உருவெடுக்கின்றான்.
மனிதர்களுக்கு எதிரான, இந்நுணுக்கமான செயற்பாடு, ‘புறங்கூறாமை’ என்றெல்லாம் தமிழ் மரபுசார் புலமை உலகில் விளிக்கப்பட்டிருந்தாலும் சமூகம் உருவாக்கும், ஓர் குறித்த “வகை-சார்ந்த-மனிதனில்”, உள்ளடங்கியுள்ள, இயல்பான குணாம்சமாக, இவ்வார்ப்பு சித்திரிக்கப்பட்டதாய் இல்லை. (சகுனி போன்ற பாத்திரங்களில் முன்னிலைப்படுத்தப்படும் அம்சங்களை கவனத்தில் கொண்டாலும் கூட). இங்கே, விடயத்தின் உள்ளடக்கம், இவை அனைத்தும் ஒரு தனி மனித வாழ்வு சார்ந்த ஒன்றல்ல என்பதும் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உழைப்பாளர் வர்க்கம் அல்லது அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இயக்கம் சார்ந்த ஒன்று என்பதிலேயே மேற்படி விடயங்களின் முக்கியத்துவம் தங்கியுள்ளது.
இவை ஒரு புறமாய் இருக்க, இவற்றையெல்லாம் விட மேலாக, தன் சுயநல வாழ்வுக்காய், தானே, தன் வாழ்வில் அரங்கேற்றி, தன் சக மனிதர்களுக்கு எதிராக இயக்குவிக்க நிர்பந்திக்கப்பட்டு போன தனது கடந்த கால காட்டிக் கொடுப்புக்கள், அவன் நினைவில் அவ்வப்போது தோன்றி அவனை பிரக்ஞைபூர்வமாக, வாட்டக்கூடிய ‘நினைவின் சாட்டைகளாக’ உருவெடுக்கும் போது, அவன் அவற்றை தன் புறங்கையால் ஒரு புறமாய் ஒதுக்கி தள்ளிவிட்டு, தான் இன்று தெரிவு செய்து வைத்திருக்கும் தன் வாழ்க்கை பாதையில் தொடர்கின்றான். இதற்காக அவன் வாழ்க்கை சிந்தனைகள் தோற்றுவிக்கும் எதிர் வினைகள் யாவை, அவை எப்படி பட்டவை என்பது குறித்த காட்சி தொடர்கள், நாவலில் அலாதியான அம்சம் கொண்டவையாக அமைந்து இருக்கின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தான் அறிந்த அறங்களுக்கு புறம்பான தனது கடந்த கால செயற்பாடுகளானது, (பாவங்களானது) அவனது உள்மனதை அவ்வப்போது குத்த முற்படும் போதெல்லாம், அவனது பிரக்ஞையானது, தன் பாதத்தில் குத்தியுள்ள ஏதோ ஒரு முள்ளை சகஜமாக அகற்றி கொள்வது போல, மெது மெதுவாக அகற்றி முள்ளை தூக்கி எறிந்து எதிர்வினை ஆற்றி விட்டு மேலும் அநாயசமாக நடை போட பழகி விடுகிறது.
உதாரணமாக, அவனது பால்ய காலத்தில் கிளிம் சிறுவனாயிருக்கும் போது அவனது பால்ய நண்பன் ஒருவன் நீரில் மூழ்கி இறக்கின்றான். இது விபத்து என்றாலும், இடம்பெறும் மரணத்துக்கு ஏதோ ஒரு வகையில் நிச்சயமான பங்குதாரியாக இருந்தவன் சிறுவன் கிளிம்மே. தன்னை விட துடிப்பான அச்சிறுவன் நீரில் மூழ்கி, மூச்சடைத்து, மரணித்து போவதையிட்டு கிளிம்மின் அடி ஆழத்தில் ஒரு திருப்தியே விரவுகின்றது. இவ்விபத்தின் போது தன் சக தோழனை காப்பாற்ற கிளிம் ஒரு அங்குலம் கூட நகர்ந்தான் இல்லை. முடிந்து போன இக்கதையின் சித்திரம், அமுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் மீறி, அவன் மனதில் திடீர் திடீரென அவ்வப்போது வெடித்து கட்டுக்கடங்காமல் பீறிட்டு வெளிக்கிளம்பும் போதெல்லாம் கிளிம் அதை தொடர்ந்து அமுக்கி மூச்சடைக்க செய்து விடுவான். நாளடைவில், அவன் பிரக்ஞை தனக்குள் ஓர் சமாதானத்தை தேடிக்கொண்டு – கேள்வியை, திரிபுபடுத்தி, அவனையே அவ்வப்போது செயற்கையாக (இயற்கையாக?) விசாரிக்கும் நிலையை அமைத்து விடுகின்றது. ‘உண்மையில் அப்படி ஒரு சிறுவன் “மூழ்கினானா”…? அதற்கு அவனது பிரக்ஞையே ஒரு பதிலையும் ஒரு வினா வடிவில் சிரு~;டித்து விடும்: “அப்படி ஒரு சிறுவன், உண்மையில் “இருந்தானா”…” என.
மொத்தத்தில், அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம், இப்படியா, மேலே குறித்த முள்ளை கிண்டி எறியும் செயல்பாட்டில், அவன் இதயம் இறங்கி விடும். அதாவது, “மூழ்குதல்” என்ற நிகழ்வை தாண்டி, முதல் பட்சத்தில் உண்மையில் அப்படி ஒருவன் இருக்க செய்தானா, ‘முதலில்’ மூழ்குவதற்கு என்ற எண்ணப்பாட்டை தொடங்கி விடும்.
அவனது இவ் எண்ணப்பாட்டை அல்லது இச்செயன்முறையை அவனது வார்த்தையிலேயே கூறுவதானால்: “எனது தற்சமய நடைமுறை வாழ்வுக்கு அல்லது வாழ்நிலைக்கு எதிராக நிற்கக்கூடிய எனது அனைத்து கடந்தகால நினைவுகளுமே, தானாகவே, அவையவை, மூச்சடைத்து திணறி, மூழ்கி, புதைந்து போகும் - ஆம், என் வாழ்வானது, அதன் பின்னர் நிம்மதியாக ஓடும் - ஏற்கனவே, ஆழ வெட்டப்பட்டிருக்கும் தன் பழங்கால்வாய் ஒன்றில், முன்னரே நிர்ணயிக்கப்பட்டு போன ஒர் திசையில், சலனமின்றி சாவதானமாய் ஓடும், ஒரு நீரோட்டத்தை போல… என் வாழ்வு”
இப்படியான எண்ணப்பாடுகள், நியாயப்பாடுகள் அனைத்தும் கிளிம்மின், அவனது 20-30 வயதுகளில் உருவாகி, துலக்கம் பெற்று, அவை, அவனிடம் நிரந்தரமான ஒரு களிம்பாக திரண்டு கப்பி போவதை. கார்க்கி, தனது வார்ப்புக்கூடு, மிக தர்க்க ரீதியாக வளர்த்தெடுக்கின்றார். அதாவது அவனது பிரக்ஞை சார்ந்த அக உலகு எப்படி எப்படி வளர்ந்து உருவாகி கட்டி எழுப்பப்படுகின்றது, (ஓடும் வாழ்க்கையில்) என்பதை தன் வாசகருக்கு கறாராக அறியத் தருவதில் குறிக்கத்தக்க வெற்றியை பெற்றுள்ளார் கார்க்கி.
குறித்த மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் இத்தகைய ஒரு ஆன்ம சமநிலையை அல்லது அவனது அக உலகின் வெளியை இந்தளவில் தர்க்கப10ர்வமாய் கட்டி எழுப்பி, வாசகரிடம் முன்னிலைப்படுத்துவதில், இந்நூல், இவ்வகையிலும் ஓர் விதிவிலக்கே.
3
ரஸ்யாவின் ஒரு 40 வருடகால குறுக்குவெட்டுமுகத்தை இந்நூலின் மூலம் படைத்தளிக்க (எழுதுவதற்கு மாத்திரம்) ஒரு 12 வருடகாலம் கார்க்கிக்கு தேவைப்பட்டுள்ளது என்பதில் ஆச்சரியம் கொள்ள யாதுமே இல்லை என்பது இந்நூல் வாசிக்கப்படும் போது வெகுவாக வெளிப்படும் ஒன்றாக இருக்கின்றது. இதன் தயாரிப்புக்காக மாத்திரம் கார்க்கி பல தசாப்தங்களை செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நான்கு தொகுதிகள் கொண்ட இந்நூலில் ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட 500-800 பக்கங்களை கொண்டதாக இருக்கின்றது.
ஒரு வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து மார்க்சின் மூலதனம் மனுகுல அறிவு பகிரலில் எந்த ஒரு ஸ்தானத்தை வகித்ததோ அத்தகைய ஒரு ஸ்தானத்தை இந்நூல் மனுகுலத்தின் வாழ்வியல் சார்ந்த இலக்கிய பாதையில் வகிக்க முற்படுகின்றது எனலாம். இதுவரை எமது மனுக்குலம் நடந்த ஒரு பாதையை, அதன் உண்மைமுகத்தை சரியாக வரையறுத்து கணிப்பிடுவதில் இந்நூல் பாரிய ஓர் அடியை முன்னெடுத்து வைக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. அன்றைய ரஸ்யாவின் இலக்கிய பரப்பிலும், அரசியல் பரப்பிலும் - முக்கியமாக, மார்க்சியம் சார்ந்த அறிவு மட்டங்களிலும் செல்வாக்கு செலுத்த முற்பட்ட சிந்தனை ஓட்டங்களின் தன்மை குறித்து, 2ம் தொகுதியின் ஆரம்ப பகுதி கவனம் செலுத்த முற்பட்டிருக்கின்றது.
நீட்சேயின் தத்துவங்களாகட்டும், அல்லது மாரக்சிய பார்வைகளின் செல்வாக்கு கலந்த அம்சங்களாகட்டும் அல்லது வௌ;வேறு இலக்கிய பரிணமுப்புகளின் பாதிப்புகளாகட்டும் - இவை அனைத்தையும் நூலானது, முன்னரே குறித்த-பிரகாரம், தனது பாத்திரங்களுக்கூடு, ஓர் கருத்தாடலை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்துவதாய் உள்ளது. ஒரு பாத்திரத்தின் நிலைப்பாடு கிட்டத்தட்ட பின்வருமாறு இருக்கின்றது: “வெட்கக் கேடான காமத்தின் சாபமானது, மனிதர்களை அழகிய கவிதைகளை நோக்கி, எப்படி எப்படி நெட்டி தள்ளுகின்றதோ, அது போலவே தங்கள் தங்களது தனிமையின் துயர் சாரந்த அவலங்களை மறைப்பதற்காகவே, மனிதர்கள், வாழ்க்கையின் ஆண்மையின்மையையும் வாழ்க்கையின் பயங்கரங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தேவதூதர்களான மார்க்ஸ் போன்றோரை நாடி ‘செல்ல வைத்துள்ளது’.
இது போலவே, ஒரு சந்தர்ப்பத்தில், வாழ்வு பொருத்த தன் தத்துவ பார்வையை பின்வருமாறு வரையறுப்பதில் கிளிம் பெருமை கொள்பவனாய் இருக்கின்றான்: “காமமும் பசியுமே உலகை ஆட்டி படைக்கும் சக்திகளாகின்றன. நாங்கள் அனைவரும், இவ்விரு அடிப்படை சக்திகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பவர்களே. கலை என்பது எப்படி வெறும் விலங்குணர்வான காமத்தை பரிமளித்து அழகுபடுத்தி அலங்காரம் செய்வதில் ஈடுபட்டுள்ளதோ அது போலவே விஞ்ஞானமானது மனிதனின் வயிற்று பசிக்கு வழி தேடுவதாகவே இருக்கின்றது, அவ்வளவே”.
நீட்சேயிடம் இருந்து இரவல் வாங்கப்பட்டுள்ள இவனின் இப்பார்வை எமது தமிழ் இலக்கிய பரப்பிற்கும், ஒன்றும் அந்நியமானதல்ல என்பது சொல்லாமலே விளங்கும். ஜெயமோகன் முதல் எமது ராமகிருஸ்ணன் வரை, கூடவே, பாலகுமாரன் முதல் இன்னும் வேறுவகைப்பட்ட எழுத்தாளர்களையும் நாம் கவனத்தில் கொள்ளும் போது, மேற்படி அடிப்படைகளின் செல்வாக்கை அவரவர்களில், சிறிதும் பெரிதுமாய், காணக்கிட்டுவதை நாம் அவதானிக்கலாம்.
போதாதற்கு கிளிம்மிடம், ஒரு கட்டத்தில், ஒரு நண்பி வினவுகிறாள்: “நீ ஒரு மார்க்சிஸ்ட் தானா” என்று. ஒரு கணமும் தாமதியாத கிளீம் ‘ஆம்’ என்கிறான். அந்த அளவில் ரஸ்ய சமூகம் அன்று கொந்தளித்து காணப்படுவதும், மார்க்சியம் அத்தகைய ஓர் பின்னணியில் செல்வாக்கு செலுத்த முற்பட்டு நிற்பது என்பதும் வேறு விடயம். ஆனால் விடயம் யாதெனில், அத்தகைய ‘செல்வாக்குகளின்’ மத்தியில் கிளிம் ‘தனது’ செல்வாக்கிற்காக, (அல்லது தனது வாழ்வாதாரத்திற்காக) ஏற்க முனையும் பாத்திரத்தின் தன்மை எவ்வகை சார்ந்தது என்பதே நூல் எழுப்பும் அடிப்படை கேள்வியாகின்றது.
கிளிம் ஒரு கட்டத்தில், குரூரமான வாழ்க்கை நியதிகளை சகஜமாகவும் அநாயசமாகவும், விட்டெறிவதில் கைதேர்ந்த அல்லது பெரிதும் பழக்கமுற்ற ஒரு பெரும் தத்துவ ஞானியை போல் சாவதானமாய் பிரகடனம் செய்வான்: “ வர்க்க போரானது, மனிதாபிமானத்தை வரள துடைத்து வற்ற செய்துவிட்டது” என. கிளிம்மின் பார்வையில் இது சரியாக மாத்திரமின்றி ஓர் உண்மையாக கூட தென்படலாம். ஆனால் இவற்றை தீர்மானிப்பது எது? ஏனெனில், நாவலின் பிறிதொரு பாத்திரம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறுகின்றது: “தற்போதைய வாழ்வு உற்பத்தி செய்துள்ள அல்லது கக்கி வைத்துள்ள மூச்சடைக்கும் நஞ்சுகளை நீ மனிதாபிமானம் என்ற ஒரு துளி இனிப்பை வைத்துக் கொண்டு துடைத்தெறிய முடியாது…” என.
மொத்தத்தில் இரு வேறுபட்ட வாழ்நிலைகள் அல்லது இருவேறுபட்ட வர்க்கங்கள், தமக்குள்ளாகவே உருவாக்கி கொள்ளும் இருவேறு பார்வை தளங்களை நூல் இப்படியாக மேல் நோக்கி எழுப்புகின்றது. இவற்றின் ஒரு துளியை கிளிம் கறாராக பிரதிபலிக்க தவறுகிறான் இல்லை – அவ்வவ் சந்தர்ப்பங்களில். அவன், மேலும் பிரகடனம் செய்வான்: “ரஸீனும் (சுயுணுஐN) புக்காசெவ்வும் மாத்திரமே வர்க்க போர் குறித்து உண்மையான அறிவை கொண்டிருந்த நபர்கள்;’ என. (இதற்கூடாக அவனது காலத்து புரட்சிகர நடைமுறைகளில் இருந்து தன்னை அந்னியப்படுத்தி கொள்ளவும் அதே சமயம் தன்னையும் ஒரு மேலான புரட்சியாளன் என புரட்சிகர மோஸ்தாரை அணிந்து கொள்ளவும் அவன் பிரயாசைப்படுகின்றான்).
ஆனால் ரஸ்ய வரலாற்றை நோக்கினால், புக்காசெவ்வின் போராட்டம் என்பது அடிமைகள் விடுவிப்பு என்ற கோதாவில் விவசாயிகளையும் அடிமைகளையும் ராணி கத்திரினுக்கு எதிராக போராட வைத்தது என்பதும், இதேப்போன்று, ரசீனை எடுத்துக் கொண்டால், அவனது தலையாய பாத்திரமானது வால்காவில் மிதந்து வரும் வசதியான படகுகளில் தனது கோஸ்டியுடன் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபடுவதுமாய் இருந்துள்ளது, என்பதுமேயாகும்.
விடயம் இப்படி இருக்க, ஒரு வரலாற்று பார்வையில், இவ்விருவரும் வர்க்க போர் குறித்து உண்மையான அறிவை கொண்டிருந்தனர் என கிளிம் வரையறுப்பது வேளா வேளைக்கு புதிய மோஸ்தார்களை அணிந்து அல்லது, புதிய புதிய அதிர் வேட்டுக்களை விட்டெறிந்து, கேட்பவரை அதிர்ச்சி வைத்தியத்துக்குள்hக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் சார்ந்த ஒன்றே தவிர வேறில்லை, என்பதும் தெளிவாகும். இது போலவே, மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் பின்வரும் பிரகடனத்தை செய்து முடிக்கின்றான் கிளிம்: “ வரலாறானது மனித ஞானத்தை (ஐNவுநுடுடுநுஊவு) சின்னாபின்னபடுத்தி விடுகின்றது…” அதாவது, மேற்படி கூற்றானது வரலாற்றுக்கும் மனித ஞானத்துக்கும் தீராத முரண் என்பது அவனது நிலையாக உள்ளது, என்பதை தெரிய தருகின்றது.
வரலாறு என்பதே மனித அறிவு தேடலுக்கான அடிப்படைகளின் தலையான ஒன்றாக இருக்கும் போது இவன் தன் நண்பர்கள் மத்தியில், இப்படி வரலாற்றின் முக்கியத்துவத்தையே நிராகரிக்கும் ஒருவனாக தோற்றம் கொள்வது ஏன் என்பது வினாவாகின்றது. மேலும் கூறினால், இது வெறும் தர்க்கமா அல்லது அவனது சாரம் தவிர்க்க முடியாமல் எழுப்பும் ஒரு வினாவா என்பதே நூல் துவங்கி வைக்கும் தேடலாகின்றது. கிளிம் தொடர்பிலான இவ்வாறான காட்சிகள் ஒருபுறம் இருக்க, அன்றைய ரஸ்ய சமூகத்தின், பல்வேறு மட்டங்களில் அல்லது வர்க்கங்களில் இருந்து வெளிகிளம்பும் மார்க்சியம் தொடர்பிலான பல்வேறு வகைப்பட்ட ஆகர்சிப்புகளையும் நூல் தன் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளவும் தவறவில்லை.
குறிப்பாக, பல்வேறு வகைப்பட்ட நலன் சார்ந்தோர், மார்க்சியத்தை தத்தம் வசதிக்கேற்ப உள்வாங்கும் வித்தியாசப்பட்ட முறைமைகளும், மற்றும் அவர்களுக்கூடாக மார்க்சியமானது வித்தியாச வித்தியாசமாக தயாரித்தளிக்கப்படும் விதவிதமான வகைப்பாடுகளும், பாத்திரங்களுக்கிடையே நடக்கும் வௌ;வேறு சம்பா~னைகள் மூலம் நுணுக்கமாக வெளிக் கொணரப்படுகின்றன. “மார்க்சியம் என்றால் என்ன – அது மனுகுலத்தில் கொட்டிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான சித்தாந்தங்களில் இன்னும் ஒன்றே. இதை தவிர, அங்கே அப்படி ஒன்றும் பெரிதாய் கொட்டிக் கிடப்பதாயும் தெரியவில்லையே” என்ற வகையில் அபிப்பிராயப்படும் பல்வேறு பாத்திரங்கள், நூல் தோறும் ஆங்காங்கு தோன்றி மார்க்சியம் பொறுத்து தத்தம் சிந்தனைகளை–அவை கூறும் பல்வேறு பரிமாணங்களை–அவ்வப்போது முன்வைப்பதாக, நூலின் ஒரு இழை கட்டமைக்கப்பட்டு, அதற்கூடு, ரஸ்யாவின் சிந்தனை மரபை முன்கொணர முயற்சிக்கின்றது.
உதாரணமாக “வெறும் லாபங்கள் பொறுத்த ஒரு யூத-ஜேர்மானிய சித்தாந்தமே மார்க்சியம்” என்று ஒரு பாத்திரமும், பின்னர், “உன் ஆண்மையற்ற தன்மையின் காரணமாகத்தான், இருக்கக்கூடிய அனைத்து நம்பிக்கைகளிலும், மிக மிக எளிதான ஒன்றான மார்க்சியத்தை நீ பற்றி பிடித்துள்ளாய்…” என்று பிறிதொரு பாத்திரமும் தத்தமது மார்க்சியம் தொடர்பான பார்வைகளை முன்வைப்பதை காணலாம்.
இவை போக, மார்க்சியம் முன்வைக்க கூடிய பொருளாதார பரிமாணங்கள் தொடர்பிலான பார்வையோடு மாத்திரம் மார்க்சியத்தை எல்லைப்படுத்தும் போக்குகளும், ஒரு உடமை வர்க்கமானது எப்படி தனக்கு பாதகமற்ற முறையில் மார்க்சியத்தை, அதன் உயிரோட்டங்களை அதனிடம் இருந்து பிரித்தெடுத்த நிலையில் கொச்சையாக சிதைத்து அதன் சக்கையை மீள அதனை பாட்டாளி வர்க்கத்திடமே சமர்ப்பிக்கின்றது என்பது போன்ற நிகழ்ச்சி நிரல்களும் நாவலின் வளர்ச்சியோடு வந்து போகின்றன.
புரட்சிகளின் தவிர்க்க இயலாமையை, ஒரு உடைமை வர்க்கமானது தனது உள் உணர்வுகளால் உய்த்துணரும் போது, அவ்வர்க்கம் தன்னிச்சையாக எதிர்வினையாற்றும் தற்காப்பு முறையே இது என ஒரு பாத்திரம் கூறாமலும் இல்லை. இருந்தும் இவ்உண்மைகள், பல பக்கங்களில் கதைக்கப்படாமல், இரண்டொரு வார்த்தைகளுக்கூடு அல்லது இரண்டொரு வரிகளில், அவ்வவ்பாத்திரங்களின் வாயிலாக, ஒரு சம்பா~னையாக காட்சிகளை ஊடறுத்து செல்கின்றன. சுருக்கமாக கூறினால், அன்றைய காலகட்டத்தில், ரஸ்ய சமுதாய வீதிகளில் வீசியெறியப்பட்ட பல்வேறு தத்துவங்களை, தத்தமது தேவைப்பாட்டுக்கும் நலன்களுக்கும் ஏற்ப பொறுக்கி எடுத்து அணிந்துக் கொண்டு உலாவர விடப்பட்ட பாத்திரங்கள் அவ்வவ் தத்துவங்களின் பிரதிநிதியாகி இந்நாவலில் அங்கும் இங்குமாய் அலைந்து திரிகின்றனர். இது தத்துவ தளத்தில், இந்நாவல் இயங்கும் ஒரு தன்மை.
ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பால், இந்நூலின் தலையாய அம்சமாக, முன்னரே குறித்தது போல, கிளிமின் வாழ்க்கையை விவரிப்பதில் நூல் கருமம் ஆற்றுகின்றது. நூலானது, அவ்வாழ்வை தன் மையப் புள்ளியாக கொண்டு, இன்னும் சரியாக கூறுவதானால் அப்பாத்திரத்தை – அப்பாத்திரத்தின் தர்க்க ரீதியிலான வளர்ச்சியை தன் மையப்புள்ளியாக கொண்டு, ரஸ்ய வரலாறின் குறித்த அக்காலப்பகுதியின் குறுக்கு வெட்டு முகத்தை, பல்வேறு மாந்தரிடை – பல்வேறு எழுச்சி – வீழ்ச்சிகளுக்கிடையே – தீட்டி செல்வதாய் அமைந்துள்ளது. இதை சுருக்கமாக கூறினால்: ரஸ்யாவின் தத்துவ-அரசியல் தளத்தில் நடந்தேறும் மோதுகை ஒருபுறம். ரஸ்யாவின், குறித்த வட்டத்தில் வாழக்கூடிய, தனிநபர் வாழ்க்கை தளங்களில் நடந்தேறும் மோதுகை மறுபுறம். இதுபோலவே, ரஸ்ய சமூக தளத்தில் நடந்தேறும் மக்கள் அல்லது சிறு சமூக குழுக்களிடையே நடந்தேறும் மோதுகை – மேலும் - யூதர்களுக்கு எதிரான இன வன் செயல்கள் - இவை வேறொரு புறம். இவற்றை உள்ளடக்கியதாக இந்நவீனம் விரிய, இவற்றின் மையப்புள்ளியாக கிளிம்மின் வாழ்வு இருத்தப்பட்டு தர்க்க ரீதியாய் வளர்த்தெடுக்கப்பட்டு, அது எதிர்கொள்ளும் தாக்கங்களையும், அது பதிலுக்கு தன்புற சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் மாபெரும் வலு கொண்ட காட்சிகளாக நூல் தீட்ட முற்பட்டுள்ளது.
இருந்தும் நூல் எழுப்பும் தலையாய கேள்வி கிளிம் என்பவன் யார் - அவன் ஆன்மா எத்தகையதானது என்பதுதான். கூடவே, அதன் உருவாக்கம் எவ்வாறு நடந்தேறுகிறது? அது எவ்வௌ; சக்திகளுடன் பகைமை பாராட்டுகிறது? சாராம்சத்தில் அவ் ஆன்மா உழைக்கும் மக்கள் அணிகளுக்கிடையில் எத்தகைய தாக்கங்களை அல்லது பின்னடைவுகளை விளைவிக்க கூடியது என்பதே கிளிம் என்ற ‘விதிவிலக்கான’ பாத்திரம் உருவாக்கும் கேள்வியாகும். இதன் பதில்களை நோக்கி பயணிப்பதே நூலின் மைய இழையாக இருக்கின்றது.
மனுகுல வரலாற்றில், மனுகுலம் சந்தித்த பல சரிவுகளின் பின்னணியில், வீற்றிருந்த சக்திகள் யார் எவர் என்ற வினாவுடன் முக்கியப்பட கூடிய ஓர் உலகுக்கு நாவல் எம்மை அழைத்து செல்கின்றது. கார்க்கி தன் இறுதி நூலாக, ‘தான் கண்டறிந்த வாழ்க்கை’ சாரங்களை எல்லாம் இவ் இறுதி நூலில் திரட்டி வடிக்க செய்ய முற்பட்டுள்ளது – ஓர் தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை நூலின் முதல் இரு தொகுதிகளும் தீர்க்கமான முறையில் புலப்படுத்துகிறது. இக்காரணம் நிமித்தமே, இந்நாவலின், முதல் இரண்டு தொகுதிகளினதும் முக்கியத்துவம், எப்படி ஒரு ரஸ்ய சமூகத்தோடு மாத்திரம் மட்டுபடுத்தப்பட்டதாக இல்லையோ அதே போல இதன் முக்கியத்துவம் மனுகுலத்தின் ஒரு குறித்த காலப்பகுதியோடு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடியதாக இல்லாமல் தேச எல்லைகளை தாண்டி காலமற்ற வெளிகளில் சஞ்சரிக்க கூடியதாக இருக்கின்றது – மனித சாரங்கள் குறித்த எண்ணங்களை மீட்டெடுக்கும் பொருட்டு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* அடுத்த பகுதி 'கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி.' தொடரும்.