இன்று மிகவும் சாதாரணமாக 'கட்டடக்காடு' , 'காங்ரீட் காடு' போன்ற பதங்களைப் பாவிக்கின்றோம். அண்மையில் வெளியான எனது சிறுகதைத்தொகுதியில் கட்டடக்காடு என்னும் சொற்பதத்துடன் கட்டடக்கூடு என்னும் சொற்பதத்தையும் உள்ளடக்கியிருந்தேன்.
'கட்டடக்காடு; என்னும் சொற்பதத்தைப் பாவித்துத் தமிழில் மேலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் 'காலம்' செல்வம் அருளானந்தம் அவர்களின் கவிதைத்தொகுதியொன்றும் 'கட்டிடக்காடு' (உண்மையில் கட்டடக்காடு என்றிருக்க வேண்டும். பலரும் கட்டடத்தைக் கட்டிடம் என்றே அழைக்கின்றார்கள். வழக்கில் இவ்விதமே பலராலும் அழைக்கப்படுவதால் ஆசியான் பதிப்பகமும், கவிஞர் செல்வமும் அவ்விதமே பாவித்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். கட்டிடம் - கட்டு+ இடம் = கட்டுமிடம். கட்டு + அடம் = கட்டடம். கட்டடம் கட்டுவதற்கான இடமே கட்டிடம். அடம் - அடுக்கு. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதால் கட்டு + அடம் -> கட்டடம் என்றானது.) என்னும் பெயரில் , அமரர் எஸ். சபாலிங்கத்தின் ஆசியான் பதிப்பகத்தின் வெளியீடாக வெளியாகியிருந்தது.
நான் முதன் முதலாக காங்ரீட் காடு (Concrete Jungle) என்னும் சொற்பதத்தைக் கேட்டது கொழும்பு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான கார்லோ பொன்செகா மூலமே. கட்டடக்கலை மாணவர்களாக எமக்கு 'உடலியல்' (Physiology) பற்றிய பாடமொன்றினை அவர் கற்பித்தார். கட்டடங்களை வடிவமைப்பதற்கு மானுட உடலியல் பற்றியும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தினால் அப்பாடல் எமக்குக் கற்பிக்கப்பட்டது. அவ்விரிவுரையாளர் எமக்கு விலங்கியல் நிபுணரான (Zoologist) டெஸ்மண்ட் மொரிஸ் (Desmond Morris) எழுதிய 'மனிதமிருகக் காட்சிசாலை' (Human Zoo) என்னும் நூலைப்பற்றி அறிமுகப்படுத்தியிருந்தார். அத்துடன் அந்நூல் காங்ரீட் காடுகளான நகரங்களில் வாழும் மனிதர் கூண்டுகளில் அடைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைகளில் வசிக்கும் மிருகங்களைப்போல் நடந்துகொள்கின்றார்கள் என்பதை விபரிக்கும் நல்லதொரு நூலென்றும் கூறியிருந்தார்.
காங்ரீட் காடு அல்லது கட்டடக்காடு என்னும் சொற்பதத்தை முதன் முதலாகப் பாவித்தவர் டெஸ்மண்ட் மொரிஸ் என்றே கருதுகின்றேன். ஆனால் இது மேலதிக ஆய்வுக்குரியது.
சந்தர்ப்பம் கிடைத்தால் தவறாமல் இந்நூலை வாசித்துப் பாருங்கள். கூகுளில் தேடினால் இலவசமாக இதன் பிடிஃப் வடிவம் கிடைக்கும்.
நூல் பின்வருமாறு ஆரம்பமாகின்றது:
"When the pressures of modern living become heavy, the harassed city-dweller often refers to his teeming world as a concrete jungle. This is a colourful way of describing the pattern of life in a dense urban community, but it is also grossly inaccurate, as anyone who has studied a real jungle will confirm."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.