எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.
எழுத்தாளர்கள் அனைவருமே ஒரே நேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை குறிப்பிட்ட குரலற்றவரின் குரல் தொகுப்பின் மூலம் நிகழ்த்தியவர் கோமகன்.
எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலானஇதழ்கள்,இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர். சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் முதலானவற்றையும் 'நடு' இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது.
பிரான்ஸிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி இதழில் கோமகன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர் யோ. கர்ணனின் நேர்காணலை பதிவுசெய்த முதல் அனுபவத்தின் தொடர்ச்சியாக மேலும் 13 பேரைத்தொடர்புகொண்டு குரலற்றவரின் குரல் தொகுப்புக்காக உழைத்தவர். அந்த 13 பேரின் விபரம்: பொ. கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி ) அ. யேசுராசா ( இலங்கை ) முருகபூபதி ( அவுஸ்திரேலியா ) கருணாகரன் ( இலங்கை ) புஷ்பராணி ( பிரான்ஸ் ) சோ. பத்மநாதன் ( இலங்கை ) புலோலியூரான் டேவிட் யோகேசன் ( ஜெர்மனி ) ஆர். எம். தீரன் நௌஷாத் ( இலங்கை ) இளவாலை விஜயேந்திரன் ( நோர்வே ) கேசாயினி எட்மண்ட், (இலங்கை ) நிவேதா உதயராஜன் ( பிரித்தானியா ) க. சட்டநாதன் ( இலங்கை ) சோலைக்கிளி ( இலங்கை )
குறிப்பிட்ட நூலின் பின்புற அட்டையில் இதன் உள்ளடக்கம் பற்றிய குறிப்பு தெரிவிக்கும் பின்வரும் செய்தியிலிருந்து, கோமகனின் உழைப்பினை புரிந்துகொள்ள முடியும்.
"உலகத்திசைகளில் வாழும் இலங்கையின் தமிழ்மொழிச்சமூக ஆளுமைகள் 14 பேருடன் கோமகன் நடத்திய இந்த நேர்காணல்களில், அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் என இடையீடு செய்யும் படிகளிடையே பல்வேறு திறப்புகள் நிகழ்கின்றன. அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம் போன்றவற்றில் எப்போதும் சர்ச்சைக்கும் விவாதங்களுக்குமான இடங்களிருப்பதுண்டு. இந்த நேர்காணல்களிலும் அத்தகைய இடங்களும் புள்ளிகளும் நிறைய உள்ளன. இந்த நேர்காணல்களை வாசிக்கும்போது, பல்வேறு வகையான ஆளுமைகளோடு தனியே நின்று களமாடுவதாகத்தோன்றும். அவரே மையமாக நின்று ஏனையவர்களுடன் வாள் சுழற்றுகிறார். ஊன்றிக்கவனித்தால், நேர்காணல் என்பது ஒரு சமர்க்கலையே. எழுப்பப்படும் கேள்விகளே எதிராளுமையைத் திறப்பது என உணரலாம். கேள்விகளின் மூலமாக வரலாற்றையும் சமகாலத்தையும் திறந்து எதிர்காலத்தின் மீது ஒளிபாய்ச்சுவதற்கு கோமகன் முயற்சிக்கிறார். கலை, இலக்கியத் துறையில் செயற்படும் ஆளுமைகளின் நேர்காணல்களாக இவை இருந்தாலும் அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் எனச் சகலவற்றைப் பற்றியும் இந்த நேர்காணல்கள் பேசுகின்றன."
படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பிய குரலற்றவரின் குரல், நூல் நேர்காணல்களுக்கு தயாராகும் படைப்பாளிகளுக்கும் கேள்விகளை தொடுப்பவர்களுக்கும் வழிகாட்டும் நூலாகவும் விவாதங்களின் ஊற்றுக்கண்ணாகவும் திகழ்ந்தது.
இங்கிலாந்திலிருந்து பௌசர் நடத்தும் எதுவரை இணைய இதழுக்காகவே கோமகன் என்னை மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு அந்த நேர்காணலை பதிவுசெய்தார். அதற்கு அவர் இட்டிருந்த தலைப்பு : “ இவர்களிடம் பேனையும் அவர்களிடம் துப்பாக்கியும் இருந்தன “ அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் எழுத்தாளர் கே. எஸ். சுதாகர் என்னை நேர்காணல் செய்து எழுதிய விரிவான ஆக்கத்தை சில இதழ்கள் வெளியிடத்தயங்கியதையடுத்து, அதனை தமது நடு இணைய இதழில் வெளியிட்டவர் கோமகன். அத்துடன் ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை என்ற தலைப்பில் நான் எழுதிய சில கலை, இலக்கிய ஆளுமைகள் குறித்த பதிவுகளையும் அரசியல் பத்தி எழுத்துக்களையும் குறிப்பிட்ட நடு இணைய இதழில் வெளியிட்டுவந்தவர். 2019 ஆம் ஆண்டு எனது சொல்லத்தவறிய கதைகள் நூலின் வெளியீட்டை அவரே பிரான்ஸில் அதே ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம்திகதி படைப்பிலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளருமான வாசுதேவன் தலைமையில் நடத்தினார். அந்தப்பயணத்தில் அவர் ‘அகாலம் ‘ புஷ்பராணியையும் மேலும் பல எழுத்தாளர்களையும் எனக்கு அங்கு அறிமுகப்படுத்தினார்.
கோமகன் தனது குரலற்றவரின் குரல் நூலை இவ்வாறு காணிக்கையாக்கியிருப்பவர்:
“ நான் அம்மாவின் வயிற்றில் வளர்ந்திருந்தாலும், என்னை வளர்த்து ஆளாக்கிய எனது அக்கையார் காலஞ்சென்ற திருமதி வாசுகி நவரட்ணத்துக்கும், தாயகப்போரிலே தமது இன்னுயிர்களைக் களப்பலி கொடுத்த அனைத்துத் தரப்பு மாவீரர்களுக்கும், நீண்டநெடிய யுத்தத்தில் பலியாகிய அனைத்துப்பொது மக்களுக்கும் இந்தக் ‘ குரலற்றோரின் குரல் ‘ - ஐக் காணிக்கையாக்குகின்றேன். "
இவ்வாறு தனது தாயகத்தின் மீது அளவுகடந்த நேசம் கொண்டிருந்த கோமகன், அந்த மண்ணை தரிசித்துவிட்டு மீண்டும் பாரிஸ் நோக்கி பயணமாவதற்காக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவேளையில் திடீரென மாரடைப்பு வந்து மறைந்துள்ளார். மரணம் சொல்லிக்கொண்டு வருவதில்லை. எனினும் அவரது திடீர் மறைவு அதிர்ச்சி தருகிறது. இந்தத் துயரத்தை வெறும் அஞ்சலியினால் கடந்துவிட முடியாது. எஞ்சியிருக்கப்போவது அவர் பற்றிய பசுமையான நினைவுகள்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.