'காலவெளி'ச் சிறைக்குள் நான்
கிடந்து தவிக்கின்றேன்.
மேன்முறையீடு செய்யவும்
அனுமதியில்லா கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
'நேரவெளி' சுவர்களுக்குள்
நீட்டி நிமிர்ந்து படுத்திட முடியாமல்
நான் குடங்கிக் கிடக்கின்றேன்.
காலத்தை இச்சிறைக்குள்
கழிக்க நேர்ந்தது எதனால்?
பரிமாணங்கள் கொண்டு
படைக்கப்பட்ட சிறையிது.
நேரவெளிச் சிறையிது!
இதனுள் இருப்பு.
இருக்க வேண்டி வந்தது
எதனால்?
சுவர்களுக்கு வெளியில் நடப்பதென்ன?
சுவர்களுக்கு வெளியில் இருப்பவை எவையோ?
சுவர்களுக்கு உள் இருப்பதால்
சுவர்களுக்கு வெளியில் இருப்பவை பற்றி
அறிவதற்கு முயற்சி செய்கின்றேன்.
அதனை உய்த்துணர முயற்சி செய்கின்றேன்.
உய்த்துணர்தல் மூலம்
உண்மையை உண்மையாய் அறிதலில்
உள்ள சிரமங்களையும் நான்
உண்மையாய் அறிவேன். அதனால்
உங்களுடன் என் உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்கின்றேன்.
பகிர்ந்துகொள்வதிலொரு பரஸ்பர
புரிந்தல் உள்ளதாக நினைக்கின்றேன்.அப்
புரிதலில் நன்மை உண்டெனவும்
கருதுகின்றேன்.
'காலவெளி'கைதியிவனால்
முடிந்தது இவ்வளவுதான். ஆம்!
முடிந்தது இவ்வளவுதான்.
முடிந்தவரை இவ்விதமே இங்கு
உள்ளவரை என் உணர்வுகளை
உங்களுடன் , சக கைதிகளுடன்,
பகிர்ந்திட விரும்புகின்றேன்.
பகிர்தலிலும் கைதிகள் எமக்கிடையில்
பரஸ்பர புரிதலும், அன்பும் மலரும்.
அதனால்
பகிர்ந்திட விரும்புகின்றேன்.
இவ்விதப் பகிர்தல்களைக் காவி வரும்
இவ்வகை எண்ணங்களும்
'காலவெளிச்'சிறைக் கைதிகளா?
சிறைச்சுவர்களை மீறிடும்
ஆற்றல் மிக்கவையா அவை?
அறியேன் நான்.
எண்ணமே இருப்பென்றும் கூறுவர்
அறிஞர் சிலர். அதனால்
அவற்றுக்கு இச்சிறையை மீறும்
ஆற்றல் உண்டா?
அறியேன் நான்.
காலவெளிக் கைதிகளே!
காலவெளிக் கைதிகளே!
உங்களைத்தாம்
காலவெளிக் கைதிகளே!
காலவெளிக் கைதியென்
கருத்துகள், எண்ணங்களை
உய்த்துணர முடிகின்றதா?
'காலவெளி'ச் சிறைக்குள் நான்
கிடந்து தவிக்கின்றேன்.
மேன்முறையீடு செய்யவும்
அனுமதியில்லா கைதி நான்.
மரணதண்டனைக் கைதி நான்.
மரணதண்டனை 'நேரவெளி'
சுவர்களுக்குள்
மாய்ந்து கிடக்கின்றேன்.
காலத்தை இச்சிறைக்குள்
கழிக்க நேர்ந்தது எதனால்?
- வ.ந.கிரிதரன் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.