ஆய்வுச் சுருக்கம்
சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடிச்செல்லும் நிலை தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் குடும்பத் தலைவன் தமது மனைவி, பிள்ளைகளை விடுத்து வெளிநாடு செல்லும் போது அக்குடும்பங்கள் சமூகத்தாலும், தங்களது சுயத்தேவைகளை நிவர்த்திச் செய்ய பொருளாதாரமின்றி பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இதனை ‘இன்னல்’ என்ற வார்த்தைகளைக் கொண்டு கட்டமைத்துக் கூறிவிட முடியாது என்பதை “அளம்“ நாவலின் வழி தெளிவாக உணரலாகிறது. பொருளீட்டுதல் என்பது குடும்ப வாழ்க்கைக்கு தேவை என்றே இருப்பினும், அதைவிடத் தேவையானது குடும்பத்தின் மன நிம்மதியும் பாதுகாப்புமாகும். இவற்றை எவ்வளவு பொருளாதாராத்தை ஈட்டிக் கொணர்ந்தும் நிவர்த்தி செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொந்த நாட்டில் சுயகௌரவம் பார்த்து உழைக்காமல் கிடைத்த வேலைகளைச் செய்தும், தங்களின் திறமைகளைக் கொண்டு வேலைகளை உருவாக்கியும், பொருள் ஈட்டி வாழ்வது மட்டுமே தங்களது குடும்பத்தையும், நாட்டையும் உயர்த்தும் என்பது அறியலாகிறது.
கலைச்சொல்லாக்கம்
அளம் - உப்பளம்; புலம் - இடம், திசை; கால் நகை - சிலம்பு; வாய்நகை - புன்னகை; சோணாடு – சோழநாடு; புலம் பெயர்தல் - இடம் பெயர்தல் அல்லது சொந்த ஊரை விட்டுச் செல்லுதல்; ஆயா அப்பன் - தாய் தந்தை; கப்பக்காரன் - கப்பலில் சென்று வேலைசெய்பவன்; சீல – சேலை; பச்சி – பறவை; ஆப்பை – கரண்டி; காசி – பணம்; பிராணன் - உயிர் ; வூடு – வீடு; ஆம்புடையான் - கணவன்.
முன்னுரை
இலக்கியம் சமுதாயத்தின் செயல்பாடுகளைப் பிரதிபலித்துக் காட்டும் காலக்கண்ணாடி. வாழ்வின் பல நிகழ்வுகளைக் கலைநயத்தோடு காட்டுவது புதின இலக்கியம். இவ்விலக்கியம் பல பரிமாணங்களில் சிறப்பாகவும் நுட்பமாகவும் வளர்ந்து வேரூன்றியுள்ளது. நவீன இலக்கியங்கள் நல்லதொரு நிலையை அடைந்துள்ள காலமும் இதுவேயாகும். அதில் மண்வாசத்தோடு தனக்கென்ற ஒரு பாதையை உருவாக்கி, உண்மை நிகழ்வின் அடிப்படையில் மக்கள் வாழ்வில் நடைபெறும் அவலங்களை தனது படைப்பாற்றளின் வழி பல்வேறு இலக்கியங்களை கொண்டு சித்தரித்துக் காட்டுபவர் சு. தமிழ்ச்செல்வி. குடும்ப வாழ்வு என்பது கணவன் மனைவி இருவரையும் அடிப்படையாகக் கொண்டது. அக்குடும்பத்தில் கணவன் பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்யும் அடிப்படை அலகாக செயல்படுகிறான்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்iலை பொருள். 1
என்கிறார் வள்ளுவர். பொருளில்லையேல் இல்லாளும் மதிக்க மாட்டாள், ஈன்றெடுத்தத் தாயும் விரும்பமாட்டாள் என்னும் நிலை பன்னெடுங்காலம் தொட்டே இருந்து வருகிறது. பொருளற்றோரை யாரும் மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இகழ்ந்து பேசுவார்கள் என்று நினைக்கும் போது பொருளின் மதிப்பு எந்த அளவில் உயர்ந்துள்ளது என்பதை எண்ண வேண்டும். அத்தகையப் பொருட்செல்வத்தை, தன்னால் சொந்த நாட்டில், சொந்த ஊரில் தனக்கானத் தேவையை தன்னிறைவுச் செய்ய இயலாது என்ற எண்ணத்தில், அயல்நாட்டிற்கு வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்லும் ஒரு குடும்பத்தின் அவல நிலைப்பாட்டை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
சிலம்பில் புலம்பெயர்தல் குறித்த செய்தி
பண்டைத்தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்விடத்தை விட்டு, மற்றொரு இடத்திற்குச் செல்வதை ‘புலம் பெயர்தல்’ என்பர். இவ்வாறு இடம் விட்டு இடம் பெயருவதைத் தனி மனிதனாகவோ, அல்லது கூட்டமாகவோ தமது குழவினருடனும் இடம் பெயரலாம். ‘புலம்’ என்ற சொல் இடம், திசை முதலிய பொருள்களைத் தருகின்றது.
தன் கால் நகையால், வாய்நகை இழந்தவள் கற்புக்கரசி கண்ணகி. சோணாட்டின் வணிகப் பெருமக்களான கோவலனும், கண்ணகியும் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற அருகில் இருந்த பாண்டிய நாட்டிற்குப் புலம்பெயர்கின்றனர்.
“சேயிழை! கேள் இச்
சிலம்பு முதல் ஆகச் சென்ற கலனோடு
உலத்தபொருள் ஈட்டுதல் உற்றேன்! மலர்ந்தசீர்
மாடமதுரை யகத்துச் சென்று…”2
எனச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. புலம் பெயர்தல் என்பது நம் மக்களிடைய வாழ்வில் கலந்துவிட்டச் செய்தியாகவேப் பார்க்க இயலுகிறது. மேலும் பாண்டியனால் கொல்லப்பட்ட கோவலனின் முற்பிறப்பு பற்றி, மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் எடுத்துரைக்கிறது. கபிலபுரத்திலிருந்து கலிங்க நாட்டின் சிங்கபுரத்திற்குத் தன் மனைவியான நீலியுடன் புலம்பெயர்ந்தான் சங்கமன் என்பவன்,
“அருள்பொருள் வேட்கையின் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வணிகன்.” 3
என்ற பாடற்பகுதி பொருள் தேடல் காரணமாகத் தன் நாட்டிலிருந்து பிறநாட்டிற்குப் புலம்பெயர்தலைக் காட்டுகிறது. கோவலன், சங்கமன் ஆகிய இந்த வணிகர்கள் தம் மனைவியரோடுக் குடும்பமாகப் புலம்பெயர்ந்தனர் என்பது சிலப்பதிகாரத்தின் வழி அறியலாகிறது.
இலக்கியங்களில் இல்லறத்தின் மாண்புகள்
சங்க இலக்கியங்கள் யாவும் இல்லற வாழ்க்கையை ஏற்றமுடையதாகக் கூறுகின்றன. அக இலக்கியங்கள் அனைத்தும் இல்லறத்தின் சிறப்பையே எடுத்துரைக்கின்றன. வீட்டில் அமைதி நிலவினால் மட்டுமே நாடு சிறக்கும் என்று பண்டைத் தமிழர் நம்பினர்.
மனையுறை வாழ்க்கை வல்லியாங்கு மருவின்
இனியவும் உளவோ! 4
என்ற அடிகளின் வழி இல்வாழ்க்கையைத் திறம்பட நடத்தினால் அதைக் காட்டிலும் இனிய வாழ்வு வேறு உண்டோ? என்று ஐயூர்முடவனார் தம் பாடலின் வழி இல்லறத்தின் சிறப்பை எடுத்தியம்பியுள்ளார். இதற்கு அரண் சேர்க்கும் வகையில்,
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன். 5
ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழி செலுத்துவானாயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? என்று அறத்துடன் கூடிய இல்வாழ்வின் சிறப்பினை கூறியுள்ளார். மேலும் இல்லறம் நல்லறமாக நடத்த பொருளின் தேவை இன்றியமையாதது என்பதை, சங்ககால அரச புலவர்களுள் தலைசிறந்த புலவரான பாலை பாடிய பெருங்கடுங்கோ படைத்துள்ள குறுந்தொகை பாடலொன்றில்,
“வினையே ஆடவர்க்கு உயிர் வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்என” 6
என்ற வரிகளின் வழி வினையே ஆண் மக்களுக்கு உயிர் போன்றது. மனையில் வாழும் ஒளி பொருந்திய நெற்றியை உடையப் பெண்களுக்கு, இல்லத்தில் இருந்து கடமைச் செய்தலே உயிர் போன்றது என்று இல்லறத்திற்கான கடமைகளை வலியுறுத்தியுள்ளார். ஆண்மகன் என்பவன் பொருளீட்டிக் குடும்பத்தைத் துன்பத்திலிருந்து பாதுகாத்துப் போற்றும் கடமை பெற்றவன் என்பதைத் திருக்குறள் உட்பட பல்வேறு இலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன என்பதை உணரலாகிறது.
சிங்கப்பூர் செல்லும் மோகத்தில் சுப்பையா
வெளிநாட்டிற்குச் சென்று பணம் ஈட்டும் மோகம் இன்றளவும் அனைத்துத் தர மக்களிடையேயும் நிறைந்துக் காணப்படுகிறது. இது இன்றைய இளைய தலைமுறையையும் விட்டுவைக்கவில்லை. படிப்பது முதல் பணம் ஈட்டுவது வரை வெளிநாடுகளில் மேற்கொள்வது பெருமை கொள்ளத்தக்கதாகவேக் கருதுகின்றனர். இவ்வாசை விளிம்பு நிலையில் வாழும் சுப்பையாவையும் விட்டு வைக்கவில்லை. சுப்பையாவிற்கு அடுத்தடுத்து மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தன. ஏனோ அவன் தன் சொந்த ஊரில் வேலைக்குச் செல்வதில் விருப்பம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான். வெளிநாடுகளில் வேலை வாங்கித்தரும் கப்பக்கார இராமையா எப்பொழுது வந்தாலும், தன்னை அழைத்துச் செல்ல மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் கப்பக்கார இராமையா அழைத்ததாக மகள் வடிவாம்பாள் கூறியதும், மனம் முழுதும் மகிழ்வுடன் குளக்கரையை நோக்கி வந்தான். நுரை ததும்ப சோப்பு போட்டு குளித்துக் கொண்டிருந்த இராமையாவிடம் சற்று நயந்தபடி,
“சினிமாவுள நடிக்கிறவனுவதாங் அகந்த மேரி வாசமடிக்கிற சோப்பெல்லாம் போட்டு குளிப்பானுவளாம். சிங்கப்பூருல எல்லாருமே குளிப்பாவொளாண்ண? இதெல்லாம் நம்மளுக்குகெங்கண்ணந் தெரியப் போவுது.” 7
என்று கூறிக்கொண்டே, மனதிற்குள் நாமும் சிங்கப்பூர் சென்றால் இதுபோன்று சுகபோகமாகமாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் பேசினான். கப்பக்கார இராமையாவோ, உன் மனைவிக்கு இப்பொழுது தான் குழந்தை பிறந்துள்ளது, ஆகவே உனக்கு தற்போது வரக்கூடிய சூழல் இல்லை, அடுத்த முறை வரும்போது அழைத்துச் செல்வதாகக் கூறியதும், வெளிநாட்டுக் கனவு களைந்து போகுமோ என்ற பதட்டத்தில்,
“நா வாரண்ண முடிவு பண்ணுனது பண்ணுனதுதாண்ண. இனிமே அதுல மாத்தமில்ல. இங்சருந்து ஒண்ணும் வேல செய்ய முடியலண்ண. கூலி வேலக்கிப் போறத்துக்கும் ஒத்துவல்ல. ஒக்காந்து திங்கிறத்துக்கும் ஆயா அப்பந் தேடிவய்கல கண்ணு காணாத சீமயில சாணியள்ளிக் கொட்டுனாத்தாங் யாருக்குத் தெரியப்போவு நா வாரண்ண.” 8
என்று உறுதியாகக் கூறினான். இராமையாவால் ஒன்றும் பேச இயலாமல் ஒத்துக்கொண்டார். வெளிநாட்டிற்கு செல்ல நினைக்கும் பெரும்பாலானோர், தங்கள் ஊரில் கூலி வேலைக்கு செல்வதை தற்குறைச்சலாக எண்ணிக் கொள்வர். ஆனால் வெளி நாடுகளுக்கு சென்று அங்கே சொந்த பந்தங்களுக்குத் தெரியாமல் கழிப்பறை கழுவினாலும் அதுவே கௌரவம் என்ற எண்ணப்போக்கு பெரும்பாலான மக்களிடையே வேரூன்றி இருப்பது அவலத்திற்குரியதாகும்.
குடும்பத்தினரின் சிங்கப்பூர் கனவு
பணம் ஈட்டுவதற்காகக் குடும்பத்தில் உள்ளோர் வெளிநாட்டிற்குச் செல்லப் போகிறார்களென்றால் அக்குடும்பத்தில் உள்ளோர் கனவுகளுக்கு பஞ்சமுமில்லை, எல்லையுமில்லை எனலாம். அது போன்று தான் வடிவாம்பாளுக்குத் தன் தந்தை வெளிநாட்டிற்குச் செல்லப்போகிறார் என்ற செய்தியைக் கேட்டதுமே மகிழ்ச்சியில் மான் குட்டியைப் போன்று துள்ளி ஒடினாள்.
“தன் அப்பா கப்பலுக்குப் போனால் இதுபோல் கிழிந்த பாவாடையைக் கட்டிக்கொண்டு திரிய வேண்டாம். வழவழவென்று புதுசு புதுசாய் கெவுன்சட்டை போட்டுப் பார்க்கலாம்” 9 என்று எண்ணினாள். சுந்தராம்பாளுக்கு தன் கணவன் சுப்பையா சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறான் என்று தெரிந்ததும் மனதிற்குள் ‘கப்பக்காரன் பொண்டாட்டி’ என்று ஊர்மக்கள் அழைக்கப் போவதை எண்ணி மனம் மகிழ்ந்தாள். இருப்பினும் கணவன் பிரிவை எண்ணி சோகத்தில் இருந்த போது,
“கப்பகாரனுவ பொண்டாட்டியெல்லம் வழவழன்னு சீலகட்டிக் கிறாளுவன்னு பாத்து ஆசப்படுவியில்ல. அதுமேரி நீ கட்டிக்கிட வேண்டாமா? 10
என்று அவளின் ஆசையைத் தூண்டி மனைவியை ஆறுதல் படுத்தினான். குடும்பமே சிங்கப்பூர் சென்றால் தங்களின் துன்பம் தீரும் என்ற மகிழ்ச்சி அனைவரின் மனிதிலும் நிறைந்து காணப்பட்டது.
கணவன் பிரிந்த சுந்தராம்பாளின் துயரம்
சிங்கப்பூருக்கு சென்று ஐந்து வருடத்தில் திரும்பி வந்துவிடுவேன் என்று கூறிச்சென்ற சுப்பையா, எட்டு மாதம் ஆகியும் ஒரு கடிதம் கூட போடவில்லை. கப்பக்கார இராமையாவும் இரண்டு முறை வந்துவிட்டார். வேலைக்கு அழைத்துச் சென்ற இடத்திலிருந்து ஓடிவிட்டதாக அங்கே கூறியதைத் தெரிவுபடுத்தியதும் சுந்தராம்பாளின் தலையில் இடி விழுந்தது போல் தவித்தாள். பிள்ளைகளும் தன் தந்தைக்கு என்ன ஆனதோ என்று வருத்தப்பட்டனர். சுந்தராம்பாள் காடு, கரை என்று எங்கு போனாலும் தன் கணவனின் நினைவுகள் பின்தொடர,
“சிட்டுக்குருவியளா… செமலோரத்து பச்சியளா…
சீமக்கி போனியளா? செவந்தகனி தின்னியளா?
செடியெறக்கம் கொண்டியளா…?
யாஞ் சீமான பாத்தியளா…?
பச்ச குருவியளா பட்டணம் போனியளா…
பழுத்தபழம் தின்னியளா…?
பசிஎறக்கம் கொண்டியளா?
யாம் பழிகார பாவிய பாத்தியளா..” 11
என்று அணுதினமும் கணவனை எண்ணிக் கண்ணீர் வடித்தாள். மூன்று பெண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு வயிற்றுக்குக் கூட வழியில்லாமல் துன்பமெய்தினாள். ஆனால் ஒவ்வொரு நாளும் தன் கணவன் வந்துவிடுவான், தங்களின் துன்பம் அனைத்தும் தீர்ந்து போகும் என்ற நப்பாசையோடு, வானம் நோக்கியப் பூமியாய் கணவனை எண்ணித் தவமிருந்தாள்.
தந்தை இல்லாத வறுமையின் அவலம்
குடும்பத் தலைவன் இல்லையெனில் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் படும் துன்பங்களை வார்த்தைகளால் கூறிவிட இயலாது. சுந்தராம்பாள் மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு அரிசி இல்லாமல் துன்பப்பட்டாள்;. பிள்ளைகளின் பசியைப் போக்க, கொள்ளையில் வளர்ந்த கீரையைப் பறித்து வந்து சமைத்துக் கொடுத்தாள். வடிவாம்பாள் தன் தாயை,
“சாரணக் கீர கடஞ்சி வச்சிருக்கறங். ஒரு ஆப்ப போட்டறன். தின்னுட்டு படும்மா” 12
என்றாள். தங்கை அஞ்சம்மாள், சாப்பிடுவதற்காக அளத்திற்கு உப்பு அள்ள சென்றபோது அவளுடைய கால்களை உப்பு கோடு கோடாக கிழித்திருந்தது. அந்தக் காயமானது வெயில் நேரத்திற்கு எரிச்சலெடுத்தது.
“பெரியக்கா, காலு எரியிது. தேங்காண்ண இருந்தாக் கொஞ்சம் குடு”13
என்றாள். தன் வீட்டின் இருப்பு தெரியாமல் கேட்டதால் வடிவாம்பாள்,
“தலயெல்லாம் பன்னடயாட்டம் கெடக்கு. உச்சில வக்க சொட்டு எண்ணெ இல்ல. ஒனக்கு காலுக்குத் தடவ கேக்குதா. வாணியாங் வூட்டுல வாக்கப்பட்டா காலுக்குந் தடவிக்கிடலாம் மேலுக்கும் தடவிக்கிடலாம். நம்ம வூட்டுலஇருந்துக்கிட்டு இதுக்கெல்லாம் நெனைக்கக் கொடாது. ஊப்புபெட்டுனது தான எரிஞ்சா சீக்கிரம் பட்டுப்பெயிடும் தாங்கிக்க.” 14
என்று சாதாரணமாக அவர்களுடைய வறுமை நிலையையும் இயலாமையையும் கோவமாகக் கூறினாள். மனம் தாளாமல் சுந்தராம்பாளும் உப்பு அள்ளும் போது ஏற்பட்ட வெட்டுக் காயத்தை பற்றி, “அதயாம் பெரியங்கச்சி பேசுற. யாங் கைய ரெண்டையும் பாரு என்னமா வெட்டிருக்குண்ணு. கருக்குகணக்காருந்து வெட்டிப்புட்டு. நெருப்பு பத்திக்கிட்டமேரி எரியிது. என்னாலயே தாங்க முடியல” 15
என்று முகம் சுருக்கினாள். கீரைக்கு அளத்தில் கிடைக்கும் உப்பைக் கொணர்ந்து தங்கள் பசியை போக்குவது கூட இவர்களுக்குக் கடினமானதாகவே இருந்தது.
தாயின் துயரத்தைத் துடைக்க மகளின் செயல்
உப்பளத்தில் கிணறு தோண்டும் வேலை நடந்தது. அங்கு வேலை செய்வதற்குப் பெரிய ஆள்களை வைத்துச் செய்தால் கூலி கட்டுபடியாகாது என்பதால் சிறுபிள்ளைகளை வைத்து வேலை வாங்குவர். அவ்வேலை செய்ய ஆண் பிள்ளைகளை மட்டுமே அனுமதிப்பர். சுந்தராம்பாளின் பக்கத்து வீட்டில் இருந்த பூச்சி இந்த சீட்டு;க்கூடை தூக்கும் வேலைக்குச் சென்றான். தன் குடும்ப துன்பத்தைப் போக்க, பூச்சியிடம் தானும் வேலைக்கு வருவதாக மன்றாடுகிறாள்.
“ஓங்காலுசட்ட மேலுசட்டய தா பூச்சி. அதப்போட்டக்கிட்டு நானும் ஆம்புளப்புள்ளமேரியே வாறங்.” 16
என்று கெஞ்சினாள். பூச்சியோ, தன்னிடம் ஒரே ஒரு கால் சட்டை தான் உள்ளது அதுவும் பின்புறம் கிழிந்துவிட்டது என்று கூறியும், விடாப்பிடியாக நீ ஏதேனும் ஒரு கோவணத்தை அணிந்து கொண்டு எனக்கு உன் கால்சட்டையைக் கொடு என்று வற்புறுத்தி ஒப்புதல் பெற்றுக் கொண்டு பூச்சியிடம்,
“எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா அடிக்கும். நீ வேலக்கி, போவக்குள்ள யாருக்குந்தெரியாம சாடயா என்னக் கூப்புடு தெக்கிச் சாலயில தாழங்காட்டு மறவுல நினனு ஓங்கால்சட்டய நா போட்டுக்கிட்டு ஒன்னோட வாறங்.” 17
என்று கூறிவிட்டு வேகமாக ஓடிவிட்டாள். மறுநாள் அஞ்சம்மாள் வீட்டிற்குத் தெரியாமல் வேலைக்குச் சென்று, கூலிப் பணத்தை பாவாடையில் சுற்றிக்கொண்டு அந்தி நேரத்தில் பசியில் தள்ளாடியபடியே வீட்டிற்கு வந்தவளை சுந்தராம்பாள், எங்கு சென்றாய் என்று மிரட்டிபடியே பாவாடையில் சுற்றி வைத்திருந்தக் காசானது தூக்கலாகத் தெரிந்ததைக் கண்டு, எதைச் சுருட்டி வைத்துள்ளாய் என்று கேட்டுக்கொண்டே பாவாடையைப் பிடித்து இழுத்ததும் சில்லறை கீழே விழுந்து சிதறியதைக் கண்ட சுந்தராம்பாள் கோவம் பொங்க, “ஏதுடி காசி? ஓனக்கு ஏது காசி? என்று கேட்டுக்கொண்டே விளக்குமாத்தைக் கையில் எடுத்து ஓங்கினாள். அடிவிழுந்துவிடுமோ என்ற பயத்தில் அஞ்சம்மாள்,
“நாம் பூச்சியோட சீட்டுக்கூடத் தூக்கப் போனங்” “செலவுக்கு காசில்லாம செருமப்படுறியேன்னுதாம்மா நாம் போனங்.” 18
என்று அழுதாள். சுந்தராம்பாளால் எதுவும் சொல்லமுடியாமல், அந்த படுபாவி எங்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டானேயென்றுக் கதறி அழுதாள். சிறுபிள்ளையாக இருந்த அஞ்சம்மாள் குடும்ப சூழலைப் புரிந்துகொண்டு தன் சக்திக்கு மீறிய செயலை செய்ய துணிந்த நிலை, அவலமே என்பது உணரலாகிறது.
பிள்ளைகளின் பசியாற்ற சுந்தராம்பாள் படும் அவதி
சுந்தராம்பாள் காட்டிற்குச் சென்று பாலாக்காய் பறித்து வந்து விற்றால், அப்பணத்தில் பிள்ளைகளின் பசியைப் போக்கலாமே என்று எண்ணி, மகள் அஞ்சம்மாளை அழைத்துக் கொண்டு செல்கிறாள். மரம் முழுவதும் சிவப்பெறும்புகள் நிறைந்திருந்தது. அஞ்சம்மாள் மரத்தில் ஏறும்போது எறும்புகள் கடித்ததும் வலி பொறுக்க முடியாமல் பாதி மரத்திலிருந்து குதித்து விடுகிறாள். சுந்தராம்பாள், எறும்பு கடிப்பதையெல்லாம் பார்த்தால் பிள்ளைகளின் பசியாற்ற முடியாது என்று நினைத்துக்கொண்டு புடவையை மடக்கிக் கட்டிக் கொண்டு மரத்தில் ஏறி கிளைகளை ஒடிக்கிறாள். உடல் முழுவதும் எறும்பு கடித்துக் கொண்டிருக்க அவ்வலியைப் பொருட்படுத்தாமல் பழங்களைப் பறித்துப் போடுகிறாள். நிமிர்ந்து பார்த்து உச்சியில் இருந்த கிளையை ஒடிக்கும் போது அதிலிருந்த எறும்பு ஒன்று சுந்தராம்பாள் கண்ணில் வீழுந்து கடித்தது. அவளாள் கண்களைத் திறக்கவோ, கசக்கவோ முடியவில்லை. வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கத்தினாள். அஞ்சம்மாள் தாயின் கதறலைக் கேட்டும் அவள் மரக்கிளையில் தடுமாறுவதைப் பார்த்தும்,“அம்மா… அம்மா… என்னம்மா? வுழுந்துடாதம்மா… என்னம்மா என்னம்மா” என்று அலறினாள். சுந்தராம்பாளால் கண்ணைத் திறக்க முடியாமல் ஒரு சிம்பைப் பிடித்துக் கொண்டு, “கண்ணுல கட்டெரும்பு கடிச்சிக்கிட்டு கெடக்கு பிராணனே போவுது.. கண்ண முளிக்க முடியல” என்று கைகளால் கண்ணை மூடிக் கொண்டாள். அஞ்சம்மாள் “கண்ணத்தெற எறும்ப எடுக்கறங்” என்று கூறி வற்புறுத்தியும் கையை எடுத்தால் வலித் தாங்க முடியவில்லை.
“அம்மா கண்ணத்தொற ரெண்டு பக்கத்து எமய்யும் இளுத்துப் புடிச்சிக்க… நா மெதுவா எடுத்தூட்டர்ரங். பல்ல கடிச்சிட்டு இழுத்துப்புடிம்மா” 19
என்ற கூறிக்கொண்டே, கவனமாய் கடித்து கொண்டிருந்த எறும்பை நகத்தால் கிள்ளி வெடுக்கென்று பிடித்திழுத்தாள். கண்கள் முழுவதுமாய் சிவந்து வீங்கி போய்விட்டது. சிறிது நேரம் படுத்துக் கொள்ளும் படி மகள் வற்புறுத்த, ‘வலி கால் வருத்தம் முக்கால்’என்று நினைத்தபடியே,
“அல்லியும் தாமரையும்
ஆத்தடச்சி பூத்தாலும்
அல்லி கொணமறிஞ்சி – என்ன
ஆதரிக்க யாருமில்ல…
கொட்டியும் தாமரையும்
கொளத்தடச்சி பூத்தாலும்
கொட்டி கொணமறிஞ்சி – என்ன
கொண்டணைப்பார் யாருமில்ல…” 20
என்று சுந்தராம்பாள் தம் மனத்துயரங்களை எண்ணிக் கண்ணீராய் வடித்துக்கொண்டே, தன் கணவனின் பொறுப்பற்றத் தனத்தால் தம் பிஞ்சு பிள்ளைகள் படும் துயரத்தைக் கண்டு ஆற்றாமல் கலங்கி நின்றாள்.
ஊராரின் ஏளனப்பேச்சு
சுந்தராம்பாள் தன் பிள்ளைகள் பசியால் தவித்தாலும், தன் கணவனின் தம்பி கணேசனிடம் மட்டுமல்ல ஊரிலுள்ள யாரிடமும் உதவிக் கேட்க மாட்டாள். பிள்ளைகளை எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வளர்ப்பாள்.
“வூட்டுல ஆம்புள இருந்து எது செஞ்சாலும் கேள்வியில்ல. நாளக்கி ஏதாவது ஒண்ணுன்னா பொம்பளா வளக்குற புள்ளைவொ அதாம் இப்புடின்னு மட்டமாருக்குவுன்னு பேசிப்புடுவாங்க” 21
என்று கூறுவாள். பக்கத்து வீட்டுக்காரியின் மகன் அஞ்சம்மாளை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும், கோவத்தில் ஊர் முழுதும் சுந்தராம்பாள் குடும்பத்தைப் பற்றி,
“அந்த பொம்புளையோட புருசன் கப்பலுக்கு போறன்னுட்டுப் போனவந்தாங். உசுரோட இருக்கறானா இல்ல செத்தானான்னே ஒண்ணுந்தெரியல. மொத்திய கட்டிக்குடுத்தாவொ ஒரு எடத்துக்கு ரெண்டடெடமா. ரெண்டெடத்துலயுமே மூணேமுக்கா நாளி இருந்து வாளாம ஆம்புடையானுவொள தூக்கிப்போட்டு முளுங்கிப்புட்டு மூளியா வந்துட்டு. அதுதாம் அப்புடின்னாக்க நடுப்பொண்ணக் கட்டிக்குடுத்தாவொளே அதாவுது புரசங்கொடயிருந்து ஒளுங்கா வாழ்ந்திச்சா. அதுவும் வாளாவெட்டியா வந்து ஒக்காந்துருக்கு அந்த குடும்பத்து பொண்ணுவொ இருந்து வாளாதுவொ.” 22
என்று இழுக்காகப் பேசி, அந்த வீட்டுப் பெண் வேண்டாம் என்று மகனிடம் வற்புருத்தினாள். இச்செய்தி சுந்தராம்பாள் காதில் விழ, அஞ்சம்மாளை தன் வலுகொண்டு அடித்துவிட்டாள். தன் மகள் விருப்பம் தெரிவிக்காமலா இவ்வாறு பேசுகிறான் என்று மிகவும் வேதனையடைந்தாள். கிராமப் புறங்களில் வழக்கமாக வீட்டில் ஆண்கள் இல்லையென்றால் அக்கம் பக்கத்தினர் தவறுதலாகவேப் பேசுவர். அதிலும் கணவன் வெளிநாடு சென்றுவிட்டால் அவ்வீட்டில் உள்ள பெண்களை ஒழுக்ககேடு மிக்கவர்களாகவே கருதி புரளிபேசும் வழக்கம் இக்காலத்திலும் காணப்படுகிறது.
முடிவுரை
தமிழர்கள் தமது குடும்ப அமைப்பில் ஆண் என்பவன் பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்பவனாகவும், பெண் என்பவள் இல்லறத்தை காத்து ஓம்புதலே கடனெனக் கருதி வாழ்கின்றனர். ஆண்கள் தம் ஊரில் வேலை செய்வதை இழுக்காக கருதி, தங்களது குடும்பத்தை பல வருடங்களுக்கு பிரிந்து சென்று வெளிநாட்டில் பணம் ஈட்ட விழைகின்றனர். இப்போக்கு சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை நடைமுறையில் உள்ளன. வெளிநாடு சென்ற கணவன், ஏதோ சில காரணங்களால் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியாமல் இருந்தால், தனித்து வாழும் அவரது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் பல்வேறு இன்னல்களைச்; சந்திக்கின்றனர். அவர்கள் படும் துன்பங்களை விவரிக்க இயலாது. மேலும் துணையின்றி வாழும் பெண்கள் சமூகத்தின் ஏளனப் பேச்சினையும் தாங்கிக் கொள்ள இயலாத அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை ‘அளம்’ என்ற புதினத்தின் வழி அறியலாகிறது.
சான்றெண் விளக்கம்
1. திருக்குறள் - 751
2. சிலப்பதிகாரம் - 9:73-76
3. சிலப்பதிகாரம் 23:146-150
4. குறுந்தொகை - பா.322
5. திருக்குறள் - 46
6. குறுந்தொகை - பா. 135
7. அளம் - ப.8
8. மேலது. ப.10
9. மேலது. ப.3
10. மேலது. ப.13
11. மேலது. ப.33
12. மேலது. ப.17
13. மேலது. ப.173
14. மேலது. ப.173
15. மேலது. ப.173
16. மேலது. ப.121
17. மேலது. ப.121
18. மேலது. ப.124
19. மேலது. ப.131
20. மேலது. ப.139
21. மேலது. ப.25
22. மேலது. ப.266
துணைநூல் பட்டியல்
1. அளம் (புதின இலக்கியம்) சு. தமிழ்ச்செல்வி, பதிப்பு – 2018, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.
2. திருக்குறள், பரிமேலழகர் உரை.
3. சிலப்பதிகாரம், புலியூர்க்கேசிகன், (தெளிவுரை), பதிப்பு – 2009, பாரி நிலையம், சென்னை – 600 108.
4. சங்க இலக்கியம், பரிபாடல், ச.வே.சுப்பிரமணியன்(மூ.தெ), பா.8, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600 018.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.