3
சண்முகதாசனின் தலைமையில் இச்செந்தீ மலையக தோட்டங்களின் உள்ளேயும் வெளியேயும் ஆழ ஊடுருவி கொழுந்துவிட்டு எரியத்துவங்கிய காலகட்டம் அக்காலகட்டம். மலையகத்தின் போர்ப் பறைகள், மலையகத்தின் மேற்குறித்த, பத்தாம் பசலி கட்டுவிப்புகளை, ஆட்டம் காண செய்த ஒரு இடியேறு போக்கு அது. இலங்கை முழுவதும் இப்படியாய் சூள் கொண்ட ‘இப்போக்கினை மாற்றவோ என்னவோ’, இத்தகைய ஒரு அரசியல் பின்னணியிலேயே, மேல் குறித்த 1971இன் எழுச்சியும், இலங்கையில் இறக்கிவிடப்படுகின்றது. இதில், யாருமே எதிர்பார்க்காத நிலையில், நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பங்கேற்றதும் அன்றைய ஒரு யதார்த்தம் ஆகியது. இருந்தும், இவ் எழுச்சியின் படுதோல்வியும், கூடவே, பங்கேற்றவர்கள் போக எழுச்சியில் பங்கேற்காத, ஆனால், இடதுசாரி அணிகளை சார்ந்த பெரும்படையினர் - சரியாக கூறினால் - எழுச்சிக்கு எதிரானவர்கள் அல்லது அதனை விமர்சன ரீதியாக ஆழமாக எதிர்க்க தலைப்பட்டவர்கள் கூட- பிரதானமாக, சண்முகதாசனின் இயக்கத்தை சேர்ந்த அநேகர், அது மலையகமாய் இருந்தாலென்ன, வடக்காயிருந்தாலென்ன, அல்லது தெற்காயிருந்தாலென்ன – எதுவாயிருந்தாலும், கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகியதும் அன்றைய விதிமுறைகளின் பிரதானமான ஒன்றானது.
இதனையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எழுச்சியில் பங்கேற்காத இவர்கள் அனைவரும், எழுச்சிக்கு நேரடி எதிரானவர்கள் இவர்கள் என்ற போதிலும், மேற்படி எழுச்சியை பிற்போக்கானது என இவர்கள் வரையரை செய்துக்கொண்டு, வாதிட்டு பரப்புரை செய்துக் கொண்ட போதிலும், “எழுச்சியை” “காரணமாக” வைத்து இவர்களை ஒட்டு மொத்தமாக அடக்கி நிர்மூலமாக்கும் செயற்றிட்டத்தை அரசு இறக்கிவிட்டது - அதில், வெற்றியும் கண்டது.
ஆகவே, ஒரு “எழுச்சி” எவ்வாறு ஆதிக்கச் சக்திகளால் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது என்பதற்கு இது உதாரணமாகின்றது. காரணம், எழுச்சியோடு எழுச்சியாய், எழுச்சிக்கு நேரெதிராய் நின்ற இடதுசாரிகள் - அவர்களது சூள் கொண்டு முகிழ்த்த இயக்கங்கள் யாவும் ஒரேநாளில் அடியோடு நொறுக்கி அழிக்கப்பட்டது ஒரு யதார்த்தமாகியது. இதில் சம்பந்தப்படாத அல்லது இந்நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்காத இடதுசாரிகள் என்றால் அது பாராளுமன்ற வாதத்தை அரவணைத்துக்கொண்ட அல்லது ஆட்சியாளரோடு கைக்கோர்த்து நின்ற இடதுசாரிகள் மாத்திரமே. (வரலாற்றின் இக்கட்டம், அதாவது, இனம்-மதம் கடந்த இனங்களின் இணைவில் எழுச்சிகள் நடந்த இக்காலக்கட்டம், சாந்திக்குமாரின், “உதய காலத்து ஜனனங்கள்” எனும் சிறுகதையில் எதிரொலிப்பதாகவும் இருந்தது). ஆனால், விடயம் இத்துடன் முடிந்ததாக இருக்கவில்லை. ஒரு திசை நோக்கிய, நுண்; அரசியலின் ஆரம்பமே இத்தாக்குதலின் பின்னர்தான் இலங்கை வரலாற்றில் இமை விரிக்க துவங்கியது எனலாம்.
படைபலம் கொண்டு ஓர் இடதுசாரிகளின் கட்டுவிப்புகளை அடித்து நிர்மூலமாக்கிக் கொள்வது எளிதானது. ஆனால் அவர்கள் விதைத்திருக்க கூடிய புரட்சிகர சிந்தனைகளை, கருவூலங்களை, மக்களின் கோபதாபங்களை அல்லது மக்களிடை சூள் கொண்டு இயங்கும்-அல்லது இயங்கத்துடித்த, புலமை சுவாத்தியத்தை–கருத்துலகை–சமூக எதிர்ப்பலைகளை சின்னாப்பின்னப்படுத்தி நிர்மூலமாக்குவது என்பது வேறொரு நடைமுறையைச் சார்ந்தது. இதற்கான நகர்வுகளையே, 1970இற்கு பின்னதான காலப்பகுதிகள் ஆரம்பித்து வைக்கின்றன எனலாம்.
அதாவது, முதற்கட்டம், சூள் பெற்று வந்த புரட்சிகர கட்டுமானங்களை, இடித்து நிர்மூலமாக்கி, அது தோற்றுவித்த புரட்சிகர அலைகளை ஸ்தம்பிக்க செய்தல். அடுத்து, விதைக்கப்பட்ட சிந்தனைகளை, அதன் கருவறைகளிலேயே மரணிக்க செய்யும் வேலைத்திட்டம். ஒன்று பௌதீக ரீதியானது. மற்றது. கருத்துநிலை சார்ந்தது. கருத்துநிலைகளை மாற்றியமைக்கும் நடைமுறை வேலைத்திட்டங்களில், தலையானதாக, பல்கலைகழக தெரிவு அனுமதி முறைமையும் கிராமங்களை ஒட்டிய பெருந்தோட்ட நிலங்களை அரசுடைமையாக்கி, அவற்றை பெரும்பான்மை விவசாயிகளுக்கு இனரீதியாக பகிர்ந்தளிக்கும் நடைமுறையும், அரசால் மேற்படி நோக்கம் கொண்டு இறக்கிவிடப்பட்ட நடைமுறைகளாக இனங்காணலாம். (நட்சா, டெல்டா, சங்குவாரி போன்றவை நினைவுகூறத்தக்கன). ஆனால், இதேவேளை இனவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு போக்கு அல்லது அதற்கூடு ஆட்சி நடாத்தும் போக்கு என்பது, இலங்கை வரலாற்றுக்கு அப்படியொன்றும் அந்நியமானதல்ல. இவை, 1971இன் முன்னரே இருந்து வந்துள்ள சமாச்சாரங்கள்தாம்.
ஆனால், இவ் இனவாத சிந்தனையை மேலும் நிறுவனமயப்படுத்தி, ஊக்குவித்து, இறுகப்பற்றி படரச் செய்யும் ஒரு நடைமுறையும், அதற்கான நகர்வுகளும் புதிதாக, புதிய படிமுறையில் களமிறக்கி விடப்பட வேண்டி இருந்தது – அது, பற்றிப்படரக்கூடிய ஒரு போராட்ட சிந்தனையை அடியோடு சிதைக்க வேண்டுமெனில். கூடவே, இப்போராட்ட உணர்வானது, இனவாதத்தால் மாற்றீடு செய்யப்படுவதும், அது மக்களிடையே தொடர்ந்து பரவி எடுபடச் செய்ய வேண்டுமென்பதும் தேவைப்படும் சமாச்சாரம்தான் என்றால், அது, புதியது – புதிய நடைமுறை சார்ந்தது.
பல்கலைக்கழக அனுமதி செயற்றிட்டமானது, வட இலங்கையின் இளைஞர் மத்தியில் மாத்திரமல்லாது தென்னிலங்கையின் இளைஞர் மத்தியிலும் போதிய செல்வாக்கினை பெற்று, தேவைப்படும் சிந்தனை மாற்றத்தை, அவர்களிடையே கொண்டு வந்து சேர்ப்பதில் முதலிடம் வகிப்பதாக இருந்தது. அதாவது, இப்போது, வடக்கின் இளைஞர்களும், தெற்கின் இளைஞர்களும் எதிரெதிராக நிறுத்தப்பட்டாக வேண்டும் என்பது ஆதிக்க சக்திகளின் உள்நோக்கமாக இருந்தது. அதாவது, இதுவரை, எழுச்சியுடன் பங்கேற்ற அல்லது ஒன்றிணைந்த அல்லது தம்மை ஒன்றிணைந்த ஓர் சக்தியாக இனங்கண்ட இளைய சமுதாயத்தை, சிதைத்தழிக்கும் ஒர் கருவியாக, இப்புதிய பல்கலைகழக தேர்வுமுறை இறக்கி விடப்படுகின்றது. மொத்தத்தில் இதுவே, தேசியத்தை, தேசிய உணர்வினை மறுபுறம், சம்பந்தப்பட்ட சமூகங்களில் கட்டியெழுப்பும் கருவிகளும் ஆயின. வேறு வார்த்தையில் கூறினால், புரட்சி பின்னகர்த்தப்பட்டு, இனவாத சிந்தனைகளும், அவற்றின் எதிர் விளைவுகளான தேசிய சிந்தனைகளும், இப்படியாக முன்னிடம் நோக்கி நகர்த்தப்பட்டன. இப்புள்ளியிலேயே, மேலே கூறிய அயர்லாந்தினதும், மற்றும் ர~;ய தேசிய இன நகர்வுகளினது குறித்த மார்க்சிய சிந்தனைகளும், கைகோர்ப்பதாக உள்ளன.
சுருக்கமாக கூறினால்: மக்களை எப்படி, எப்படி பிளவுப்படுத்துவது–அல்லது அவர்களை எப்படி, எப்படி எதிர்மறையான பகைமைகளுடன் ஒருவருக்கொருவர் எதிராக முன்னிறுத்தி வைப்பது–அதற்கூடு இச்சுரண்டல் ஆதிக்க ஆட்சியாளர்களை எவ்வாறு தக்கவைத்து, பாதுகாத்துக் கொள்வது என்பதும், அதற்கெதிராக மார்க்சிய நிலைப்பாடுகள் எனப்படுபவை தங்களை எவ்வாறு வடிவமைத்து கொள்கின்றன என்பதும் கேள்விகளாகின்றன. ஆட்சியாளர்கள், தன் நலனைக் காக்க, கட்டமைத்து இறக்கிவிடும் இச்சவாலை அல்லது இத் தந்திரோபாயத்தை அவர்கள் விட்டெறியும் போது, இப்புள்ளி எழுப்பும், கேள்விக்குரிய பதிலை, தாண்டி எந்த ஓர் மார்க்சிய கட்சியுமே, ஆக்கபூர்வமாக நகர்ந்ததாக சரித்திரம் இல்லை. இங்கேயே மார்க்ஸ்–எங்கெல்ஸ்–லெனினது பங்களிப்புகள் கரைக்கடப்பதாக உள்ளன என்பதனை வரலாறு நிரூபணம் செய்திருக்கின்றது.
இங்கிலாந்து தொழிலாளர்களே, அயர்லாந்து தொழிலாளர்களையும் விடுவிப்பர் என்ற மார்க்சின் ஆரம்பகால எதிர்பார்ப்புகள் நடைமுறை நகர்வுகளால் பொய்த்துப்போனது என்பதனை அவரே கண்டுணர்ந்தார். வேறு வார்த்தையில் கூறினால், ஆதிக்க சக்திகளின் கொடூர பரப்புரைகளின், அல்லது அடிமேல் அடியான தாக்குதல்களிலிருந்து, மீள முடியாத இங்கிலாந்து தொழிலாளி, இனரீதியான சிந்தனைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும், பலிகடா ஆகிவிடுவது இயல்பாகின்றது என்பதனை அவர் விரைவிலேயே தன் வரலாற்று கூர் அறிவுத்திறனால் உணர்ந்துக் கொள்ள தலைப்பட்டார்.
அதாவது, மக்களை இன ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக, சாதீய ரீதியாக பிளவுபடுத்துவதற்கும், அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும், மிக கறாரான வேலைத்திட்டங்கள் தீவிரமாக, நடைமுறை ரீதியில் இறக்கிவிடுவதென்பது, அவை வரலாற்றில், விதிவிலக்கான விடயங்களாய் அல்லாமல், வரலாறு வரலாறாக இம்மயக்க நிலை பிரஞ்ஞை பூர்வமாகவே ஆட்சியாளர்களால் திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்டு அவர்களின் தலையாய தந்திரோபாயமாக ஸ்தாபிக்கப்பட்டு வருவது நடைமுறையாகின்றது.
இதனாலேயே, பேரறிவு கொண்ட கார்ல்மாக்ஸ் கூட, இலங்கையில், பல புனித எண்ணங்களை உள்ளடக்கிய இடதுசாரி கட்சிகள் விட்ட அதே தவறை அவரும் ஓர் கணத்தில் விட நேர்ந்தது. 40களிலும் 50களிலும் மார்க்ஸ், அயர்லாந்தின் சுதந்திரமானது, மேலே கூறியவாறு, இங்கிலாந்து தொழிலார்களின் வெற்றிகளின் ஊடேயே நிச்சயிக்கப்படும் என முடிவு செய்திருந்தார். ஆனால், நிலைமைகள் 60களை எட்டி விடும் போது, அயர்லாந்து அடையக்கூடிய சுதந்திரமே, இங்கிலாந்து தொழிலாளரின் சோசலிசத்துக்கான பாதையையும் திறந்துவிடக் கூடும் என்று முடிவு செய்தார். (பார்க்க 1869 கடிதங்கள்) மார்க்சின் பார்வைகளில், காணப்பட்ட மேற்படி மாறுதல்கள் குறித்து அவதானம் செலுத்திய லெனின்: “ஆரம்பத்தில் மார்க்ஸ், ஒடுக்கும் சமுதாயமான (இங்கிலாந்தின்) தொழிலாளர் எழுச்சியினாலேயே அயர்லாந்து விடுவிக்கப்படும் என்றும், அது அயர்லாந்தின் இனவிடுதலைக்கான போராட்டத்தால் அல்ல என்றும் எதிர்ப்பார்த்தார்”.
ஆனால் இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கமானது, மார்க்சின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக இனவாத நஞ்சூட்டப்பட்டு, மிதவாதிகளின் கைக்குள் அது சிக்கிக் கொள்வதனையும், இதேவேளை அயர்லாந்திலோ, முதலாளித்துவ ஜனநாயக விடுதலைக்கான இயக்கம் வளர்ச்சி பெற்று தன் உக்கிர கட்டத்தை அடைந்து புரட்சிகர நிலையை கண்டு, பலம் பெற்றதாய் வலுப்பெறுவதையும் அவதானித்த அவர் தன் பார்வையை மீள் பரிசீலனை செய்கின்றார். அதாவது, இங்கிலாந்தின் தொழிலாளர்கள், எவ்வாறு ஆதிக்க சக்திகளின் பரப்புரைகளினாலும் கையூட்டல்களினாலும் நஞ்சூட்டப்பட்டு, தலைமையிழந்து, மிதவாதிகளிடம் தஞ்சம் புகுவதில் முடிந்தனரோ, அதற்கு நேரெதிராக அயர்லாந்தின் சமூக இயக்கம் தன் உக்கிர புரட்சி நிலையை அடைந்து பலம் பொருந்தியதாய் உருவாகுவதை அவர் அவதானிக்கின்றார். இதன் அடிப்படையிலேயே பின்வரும் முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார்:
“ஆங்கிலேய தொழிலாளர் வர்க்கமானது, ஆங்கிலேயரின் பிடியிலிருந்து அயர்லாந்து, விடுபடும் வரை, என்றென்றைக்கும், விடுவிக்கப்பட மாட்டாது”.
“ஆங்கிலேய தொழிலாளரின் பின்னடைவு அயர்லாந்தின் அடிபணிதலால் மேலும் உறுதியுற உறுதியாக்கப்படுகின்றது” (லெனின். ஏழட -20-பக்கம் 440)
இவ்விரு நிலைப்பாடுகளும் மார்க்சிய சிந்தனைகளில், புதிய பரிமாணத்தை கொணர்ந்து சேர்த்த சிந்தனை முறைமைகள் என்றால், அது மிகையாகாது. மார்க்ஸ் –ஏங்கெல்சின் இப்படிப்பினை லெனினுக்கு மிகுந்த சாதகமாகியது. இப்புள்ளியிலேயே லெனின் தன்னை பெரும் அசுரத்தனத்துடன் சுதாகரித்துக் கொள்கிறார் எனலாம். இக்காலக்கட்டத்திலேயே, அவர் ரோசா லக்சம்பேர்க்; முதல் பல்வேறு வகையான இடதுசாரிகளின் தேசியம் குறித்த அணுகுமுறையை தனது ஆழமான பார்வைக்கு உட்படுத்திக் கொண்டார் எனவும் கூறலாம்.
இடதுசாரிகளின் அணுகுமுறையானது இரண்டு விதமாக உருவாவதை அவர் இனங்காண்கின்றார். ஒன்று புரட்சி அனைத்தையும் சரிசெய்துவிடும் என்ற வழமையான அணுகுமுறை. இது பொதுவில் ஒடுக்கும் சமூகத்தில் இருந்து எழக்கூடிய இடதுசாரிய சம்பிரதாயமாகின்றது. மற்றது, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்ந்த இடதுசாரியம் பொறுத்தது. இவர்கள் ஒடுக்கப்படும் தமது ஒன்றிணைந்த சமூகம் தொடர்பில் அதிதீவிர அக்கறை செலுத்தினர் அன்றி, அச்சமூகத்திடை காணப்படும் புல்லுறுவி வர்க்கங்கள் அல்லது பின்னடைந்த சக்திகள் பொறுத்த விமர்சனங்களை கொண்டிராத தன்மைகளை வெளிப்படுத்;த முனைந்ததுமாகும். (இது, ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் ஆதிக்க சக்திகளுக்கு, இறுதியில், தலைமையை தாரைவார்த்து விடும் சங்கதிகளில் முடிவடைந்து விடுவதில் நிறைவு பெறுகின்றன).
இவை, இறுதிகணிப்பில் ஆட்சியாளரால் இறக்கிவிடப்படும் இப்படியான காட்டுமிராண்டியான திட்டங்களுக்கு பலிகடா ஆகிவிடும் நிகழ்ச்சி நிரலின், இறுதி முடிவுகளே. இப்புள்ளியிலேயே சண், (அவர், மக்களை அரவணைத்திருந்தாலும்), ஒரு டானியல் செய்தி குறிப்புகள் எதிரொலிக்ககூடிய ஒரு நடைமுறையில் இருந்து, மாறுப்பட்ட ஒரு நடைமுறையை சடுதியாய் அவர் மேற்கொள்வது என்பது சிரமமாகின்றது. ஆனால் மறுபுறத்தே காலம் கோரியது என்னவோ- ஓர் ஆதிக்க சக்தியின் நிதானமான நகர்வுகளின் பின்னணியில் - இதுவாகவே இருந்தது. வடக்கு-கிழக்கு-தெற்கு-மலையகம் - இவ் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய உழைப்பின் முன்னிலை சக்திகளை இழுத்து தொடுக்கும், வரலாற்றுப் புள்ளியாக சண் இருந்தார் என்பது போலவே, வடக்கின் அனைத்து சாதிய படிநிலைகளில் இருந்த பல்வேறு வகைப்பட்ட மாந்தரையும் இணைத்து திரட்டி சாதீயத்தை தகர்க்கும் வரலாற்று சக்தியின் பிரதிநிதியாகவும் அவரே இருந்தார். இது போக ‘சண்’னே ஒரு மேட்டுக்குடி மகன் தான் கைலாசை போலவே என்பதும் குறிக்கத்தக்கது.
அதாவது, ஒரு புறம் பாராளுமன்ற வாதத்தை நிராகரித்து அதற்கெதிராக எந்தவொரு சமரசமும் இன்றி போராடிய ஒரு மரபு. மறுபுறம், தமது சமூகத்துள்ளேயே நிலவிய சாதிய அநாகரிகங்களை எதிர்த்து, ஜனநாயக உரிமைகளுக்காக, தமது இனத்தின் புல்லுருவிகளுக்கு எதிராகவும் தம் இனத்தின் ஒடுக்கும் சமூகத்தின் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராடிய மற்றுமொரு நீண்ட மரபு. இவ்விரு மரபுகளையும், தன்னகத்தே இதுகாலம் வரை கொண்டிருந்த அல்லது ஏற்கனவே ஆதிக்க சக்திகளின் தேசிய இன வாய்ப்பாட்டுக்கு எதிரான வாய்ப்பாட்டை கொண்டிருந்த சண் போன்ற ஒரு தலைமைக்கு, ஒரு தேசிய கேள்வியுடன் தற்போது இணைவதா என்பதே சண்முகதாசனின் அத்தருண கேள்வியானது.
அதாவது சண்முகதாசன் ஏன் தேசியம் தொடர்பிலான கேள்வியை, சரியான தருணத்தில், சாதிய போராட்டத்தை அவர் முன்னெடுத்த அதே வீச்சில் கைகொள்ள தவறினார் - எனும் கேள்வியின் பின்புலம் இதுவேயானது. இன்னும் கராராக கூறுவோமானால், 1971இன் எழுச்சிக்கு பிறகு, மிக நுணுக்கமாக ஆதிக்க சக்திகளால் உள்நோக்கம் கொண்டு, களமிறக்கிவிடப்பட்ட தந்திரோபாய வேலைத்திட்டங்களான பல்கலைக்கழகத் தேர்வு முறையும்; பின் காணி சுவீகரிப்பு முறையும்- அதன் பகிர்ந்தளிப்பும் - இவை ஏற்படுத்திய எதிர்வினைகளுக்கும், சிந்தனை சுவாத்திய மாற்றங்களுக்கும், எதிரான நகர்வுகளை சண்முகதாசன் கறாராக ஏன் நாடிப்பிடித்து ஏந்தத் தவறினார் என்பதுவே கேள்வியாகின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.