தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.
இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே இருந்தார்கள். சைவமும் தமிழும் ஒன்றாகவே வளர்ந்தன. அதனால்தான் எந்த வேற்றுமையும் பாராட்டாது, தென்னிந்தியாவில் இந்துக்கள் கடைப்பிடித்தது போலவே, சித்திரைத் திருநாளையே தமிழர்களின் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தைமாதத்தில் உழவர்களின் திருநாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கும் இந்த நடைமுறைகளில் மாற்றங்களைத் திடீரென ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல என்பது நாமறிந்ததே. மேலை நாட்டவரின் வருகையால் இலங்கைத்தமிழ் மக்கள் சிலரிடையே மதமாற்றங்கள் ஆங்காங்கே ஏற்பட்டதால், தமிழர்களில் மதம் மாறிய ஒரு பகுதியினர் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தனர். ஆனாலும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இந்துக்களாக இருந்ததால், அந்த நிகழ்வுகளில் பாரபட்சம் பார்க்காது அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இராசிச் சக்கரத்தில் உள்ள 12 இராசிகளில் மேச ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதியதற்குக் காரணம் அவர்கள் இந்துக்களாக இருந்ததுதான். சித்திரை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சித்திரை பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியத்தில் கார்காலமே தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரைநடையில் இருந்து அறிய முடிகின்றது. தமிழ் மாதங்கள் எல்லாம் ‘ஐ’ இலும் ‘இ’ யிலும் முடியும் என்பதையும் தொல்காப்பியரே குறிப்பிட்டிருக்கின்றார். இதேபோல தைமாதத்தையும் புதுவருடம் என்று நேரடியாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. இதனால்தான், வடமொழி ஆதிக்கத்தின் காரணமாகத் தென்னிந்திய இந்துக்களாக இருந்த தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். அந்த வழக்கமே இலங்கைத் தமிழர்களிடமும் இருந்தது. இது ஆங்கில நாட்காட்டியில் பொதுவாக ஏப்ரல் 14 ஆம் திகதியைக் குறிக்கும். சில ஆண்டுகளில் ஆங்கில நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதம் 13 ஆம் அல்லது 15 ஆம் திகதியிலும் இடம் பெறுவதுண்டு.
சித்திரை வருடப்பிறப்பு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் கொண்டாடப் படுகின்றது. வருடப் பிறப்பு அன்று காலையில் எழுந்து, மருத்துநீர் வைத்து நீராடிப் புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று மகிழ்ச்சியோடு வழிபட்டு வருவர். உறவினர், நண்பர்களுக்கு இனிப்பு பலகாரங்களைப் பரிமாறி உபசரிப்பர். கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. சில இடங்களில் மாட்டு வண்டில் சவாரியும் இடம் பெறுவதுண்டு. போர்த்தேங்கய் அடிப்பது, முட்டி உடைப்பது, கிளித்தட்டு விளையாடுவது, மரதன் ஓட்டப் போட்டி, துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி, நீச்சல் போட்டி போன்றவையும் சில இடங்களில் இடம் பெறும். சிறுவயதினர் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். ஒற்றை ஊஞ்சல், இரட்டை ஊஞ்சல், அன்ன ஊஞ்சல் என்று வசதிக்கு ஏற்ப மரத்திலே கட்டி ஆடுவார்கள். வருடப்பிறப்பன்று நல்ல நேரம் பார்த்துப் பெரியவர்களிடம் இருந்து ‘கைவிசேடம்’ வாங்குவார்கள். நல்ல காரியங்களையும் அன்று தொடக்கி வைப்பார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1921 ஆம் ஆண்டு பல தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, மிகவும் கவனமாக ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களோடு தைமாதம்தான் தமிழர்களின் புத்தாண்டு, சித்திரை மாதமல்ல என்று முடிவெடுத்தனர். 1939 ஆம் ஆண்டு திருச்சியிலும் கூடி அதை உறுதி செய்தார்கள். அதனால் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தமிழர்களின் ஆண்டாகக் கணித்தார்கள். அதாவது கிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருவள்ளுவர் பிறந்ததாகக் கணித்திருந்தார்கள். பல காரணங்களால் அதை அப்போது நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. 1981 ஆம் அண்டு முதல் தமிழக அரசு தைமாதம் தான் புதுவருடம் என்பதைக் கடைப்பிடித்து வருகின்றது. ஆனால் இடையே அரசியல் இலாபம் கருதி மீண்டும் வருடப்பிறப்பைச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார்கள். தமிழ் சான்றோர் ஒன்றுகூடி எடுத்த முடிவுக்கான ஆதாரங்கள் எதுவும் ஆவணமாக இல்லை என்று ஒரு சாரார் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. சென்னையில் கணிசமான அளவு வேற்று இனத்தவர்கள் வாழ்வதாலும், அவர்களின் கைகளில் சில ஆட்சி அதிகாரங்கள் இருப்பதாலும், இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் தமிழகத் தமிழரும், வருடப்பிறப்பு எது என்று தெரியாமல் இப்போது குழம்பிப் போயிருக்கிறார்கள்.
கொழும்பிலே ‘கேவ் அன்ட் கொம்பனி’ என்று மிகப்பழைய புத்தகவிற்பனை நிலையம் இருந்தது. அவர்களிடம் அச்சகமும் இருந்ததால் நாட்காட்டிகளையும் அச்சடித்தார்கள். கணக்குப் பரிசோதனைக்காகச் அங்கு சென்றபோது, நிலவறையில் மிகப் பழைய நாட்காட்டிகளைச் சுவரிலே தொங்கவிடப்பட்டிருந்ததை அவதானித்தேன். 1940 களில் அச்சாகிய நாட்காட்டிகளில் தமிழ் வருடப்பிறப்பு என்று மட்டும் போடப்பட்டிருந்தது. நாடு சுதந்திரமடைந்தபின் 1950 களில் வெளிவந்த நாட்காட்டிகளில் தமிழ் - சிங்கள வருடப்பிறப்பு என்று இடம் பெற்றிருந்தது. 1960 களில் வெளிவந்த நாட்காட்டிகளில் சிங்கள - தமிழ் வருடப்பிறப்பு என்று மாற்றப்பட்டிருந்தது. 1970 களில் வெளிவந்த நாட்காட்டியில் சிங்கள வருடப் பிறப்பு என்று மட்டுமே போடப்பட்டிருந்தது. 1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு நாட்காட்டிகளில் தை மாதந்தான் தமிழர்களின் புதுவருடம் என்று அறிவிக்கப்பட்டதால், சிங்கள பதிப்பகத்தினர் அதைத் தமக்குச் சாதகமாக எடுத்து தமிழ் வருடப்பிறப்பு என்பதை நீக்கிவிட்டு இந்து – சிங்கள வருடப்பிறப்பு என்று மாற்றியிருந்தனர். 1980 களில் சில நாட்காட்டிகளில் ‘இந்து’ என்ற சொல்லையும் எடுத்து விட்டனர். 1972 ஆம் ஆண்டு தமிழகத்தில் தைமாதம்தான் தமிழர்களின் வருடப்பிறப்பு என்று அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 60 சித்திரைப் புத்தாண்டுகளில் ஒரு பெயர்கூடத் தமிழ்ப் பெயர் இல்லை, எல்லாமே வடமொழிப் பெயர்கள்தான், எனவே சித்திரை எமது புதுவருடமல்ல என்பதும், நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மாற்றங்கள் இடம் பெற்றதாகவும் ஒரு பக்கத்தினரின் வாதமாக இருக்கின்றது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வந்து பல்கலாச்சார நாட்டில் வாழும் நாங்கள் மற்றவர்களது கலாச்சாரத்திற்கு எப்படி மதிப்புக் கொடுக்கிறோமோ, அதே போல ஒவ்வொருவருடைய நம்பிக்கைக்கும் மதிப்புக் கொடுத்து நட்போடு பழகுவோம். இலங்கைத் தமிழர்கள் முக்கியமாக மூன்று பண்டிகைகளைக் கொண்டாடி வந்தார்கள். தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு. இவற்றில் தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்ற காரணம் சொல்லி, அதைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். இப்பொழுது சித்திரை வருடப்பிறப்பையும் நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அடுத்தது தைப்பொங்கல்தான் எஞ்சி இருக்கிறது. இதற்கும் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து நிறுத்தி விட்டால் என்ன நடக்கும். அதன் பின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் இல்லாத இனமாக தமிழர்களை இனம் காண்பார்கள். ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்த மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைப் பேணிக் காக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் முகமற்றவர்களாகி விடுவோம். எதையுமே ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய சிறந்ததொரு தலைமைத்துவம் எமக்காக இல்லாததால் இழுபறிப்பட வேண்டிய நிலையில், உலகெங்குமுள்ள தமிழ் இனம் இன்று இருக்கிறது.
புதிதாக ஒன்றை அறிமுகப் படுத்துவதென்றால் அதை ஆதாரங்களோடு ஆணித்தரமாக அறிமுகப் படுத்த வேண்டும், அதைத் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்த வேண்டும். அப்போதுதான் அது காலத்தால் நிலைத்து நிற்கும். புதுமை என்ற பெயரில் எமது அடையாளங்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கும் இனமாகத் தமிழ் இனத்தை இன்று மாற்றி விட்டார்கள். இத்தகைய பண்டிகைகள் கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம், ‘மக்கள் மகிழ்வோடு இருக்க வேண்டும்’ என்பதுதான். எனவே எப்போதும் சோகத்திற்குள் மூழ்கிக் கிடக்காமல், இந்த பல்கலாச்சார நாட்டின் முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றிலும் முடிந்தளவு பங்கு பற்றி, அவர்களுடன் சேர்ந்து, மொழி மதம் எல்லாவற்றையும் கடந்து நாமும் திருநாட்களைக் கொண்டாடி மகிழ்வோம். காரணம், யார்மனதும் நோகாமல் இந்த வாழ்க்கை வாழ்வதற்கே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.