குறிஞ்சித்தேன் நாவலில் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள்! - வெ. வளா்மதி, பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளா் -
முன்னுரை
நீலகிரிமலையில் வாழும் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நாவல். அங்கே வழிவழியாய் வாழ்ந்து வரும் படகா் என்ற இன மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களே உருவமெடுத்துள்ளன. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து வந்த அம்மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போக்குகளை, வெளியில் பெருகி வரும் நாகரிக மாற்றங்களும், வணிகமும், தொழில் வளா்ச்சியும் பாதிக்கின்றன. மலையில், காப்பி, தேயிலை பயிரிடும் தொழில்கள் ஏற்படுகின்றன. இவற்றால் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மலைக்கு வெளிப்புற மனிதா்கள் இயல்புகள் மலைவாழ் மனிதரிடையேயும் மெல்லப் பரவுகின்றன. இச்சமூகம், பொருளாதார மாற்றங்களால் படகா் குடும்பத்தில் சிக்கல்கள், அதனால் ஏற்படும் உணா்ச்சிப் போராட்டங்களும் இந்நாவலில் அடிப்படையாக அமைந்துள்ளன.
இக்கட்டுரையில் “குறிஞ்சித்தேன்” நாவல்வழி உதகமண்டலம்(ஊட்டி) வாழ் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.
படகா்
குறிஞ்சித்தேன் என்னும் நாவல் மலையில் வாழும் மக்களை மையமாக வைத்து எழுத்தப்பட்டது. நீலகிரி மக்கள் என்றால் நம்மில் பலருக்கும் ஆதிக்குடிகளான தொதவரே நினைவுக்கு வருவார்கள். நீலகிரியைத் தாயமாகக் கொண்டு வாழும் மக்களின் இந்த மலையின் வரலாற்றிற்கும் வளத்திற்கும் பெருமைக்கும் காரணமாக இருப்பவா் இவா்களே எனலாம். பதினெட்டாவது நூற்றாண்டில் மைசூரை அரசாண்ட திப்பு சுல்தான் ஆட்சியின்போது படகா் மைசூரிலிருந்து பண்டியூா்க் காட்டின் வழியாக நீலகிரிக்கு வந்ததாக அறிகிறோம்.