இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்த அந்த யுத்தத்தின் முடிவு என்னவென்பதும் எல்லோருக்கும் தெரியும். அதேபோன்ற ஒரு நிலை இப்போது எற்பட்டிருக்கின்றது. ரஸ்யா, சீனா, ஈரான் ஆகிய மூன்று நாடுகள் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்தது மட்டுமல்ல, நவீன தொழில் நுட்பத்தில் முன்னேறிய இரண்டு வல்லரசுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. நேட்டோ படைகள், கப்பல்கள் உக்கிரேனைப் பாதுகாக்க பால்டிக் நோக்கி ஒருபக்கம் முன்னேறிக்கொண்டிருக்க, அமெரிக்கா தனது படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றது. இந்த நிலையில் ரஸ்யா தனது ஆளில்லாத புதிய விமானத்தின் சாதனைகளை உலகிற்கு அறிவிக்க முற்பட்டிருக்கின்றது. எந்தவொரு விமானத்தையும் எதிர்கொண்டு அடித்து வீழ்த்தி விடுவோம் என்று மார்தட்டி நிற்கின்றது.
ரஸ்யாவின் மிகச் சிறந்த யூஏவி என்று சொல்லப்படுகின்ற விமானி இல்லாத இராணுவ போர் விமானமான ஒரியன் (Orion) விமானம் இப்போது பாவனைக்கு வந்திருக்கின்றது. எந்தத் தாக்குதலுக்கும் தயார் என்ற அதைப்பற்றிய மிரட்டலான விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கி விட்டன. அரச தொலைக்காட்சியான ரஸ்யா-1 தொலைக்காட்சியில் சீரியாவில் நடந்த விமானத் தாக்குதலில் ஆளில்லாத விமானத்தை வானில் இருந்து சுட்டு வீழ்த்தியதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த விமானம் நவீன தாக்குதல் ஆயுதங்களைப் பாவிக்கக்கூடிய வசதிகளை படைத்தது. வானில் இருந்து வானத்திற்கும், தரைக்கும் தாக்குதல் நடத்தக்கூடிய வசதிகளை விமானி இல்லாத இந்த விமானம் கொண்டது. தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தே விமானி இந்த விமானத்தை இயக்குவார்.
லேசர் கதிர் வீச்சு மூலமும் தாக்குதல் நடத்தக்கூடிய இந்த விமானத்தில் இரவில் பார்க்கக்கூடிய கமெரா வசதிகளும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருக்கும் விமானி ஒரு குறியைத் தாக்குமுன் அதை இனங்காண்பதற்கு ஏற்ற வகையில் உணர்கருவிகளும் இதில் பொருத்தப் பட்டிருக்கின்றன. இந்த விமானம் கண்காணிப்பு பறப்பின் போது தாக்குதல் ஆயுதங்களுடன் (KAB-20 and KAB-50 adjustable aerial bombs, the UPAB-50 guided gliding aerial bomb, and the X-50 guided missile) சுமார் 24 மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. இதைவிட விஹார்-எம் தாக்குதல் ரொக்கட்டையும் கொண்டு செல்ல வல்லது, ஆனால் இந்த ரொக்கெட் இந்த விமானத்தில் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பது பற்றிய விபரம் வெளியிடப் படவில்லை. பெரிதாக ஓசை எதுவும் எழுப்பாமல் நழுவிச் செல்லக்கூடியது என்பதால் எதிரிகளின் கண்ணில் அகப்படாமல் தப்பிக் கொள்ளக்கூடியது.
இந்த விமானத்திற்கு ஒரியன்-இ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ரஸ்யாவின் குரோன்ஸ்ரட் என்ற நிறுவனமே இத்தகைய விமானங்களைத் தயாரிக்கின்றது. செயற்கைக்கோள்களின் துணையுடன் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம்வரை தரைக் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வல்லது என்று இந்த நிறுவனத்தின் தலைவரான சேஜி போகாட்ரிகோவ் தெரிவித்தார். ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு இந்த விமானத்தை முதலில் நிராகரித்து இருந்தது. காரணம் மாதிரி பறப்பின் போது ஒரு விமானம் நொருங்கி வீழ்ந்து விட்டது மட்டுமல்ல பேதிய அளவு தாக்குதல் கருவிகளும் அப்போது அதில் பொருத்தப் பட்டிருக்கவில்லை. அதன்பின் பல புதிய அம்சங்கள் இந்த விமானத்தில் சேர்க்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டது.
துருக்கி நாட்டின் விமானி இல்லாத புகழ் பெற்ற வேவுவிமானமான ரேக்கிஸ் பேராக்டர்- ரிபி2 விமானத்தையே சுட்டு விழுத்தக்கூடிய அளவு சக்தி வாய்ந்ததாகத் தற்போது இந்த விமானம் அமைக்கப் பட்டிருக்கின்றது. சீரியாவில் நடந்த தாக்குதல்களின் போது சிறந்த தாக்குதல் விமானம் மட்டுமல்ல, எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்கக்கூடிய விமானம் என்பதையும் ஒரியன் நிரூபித்திருக்கின்றது. பாதுகாப்புக் கடமையில் இருந்த போது, ஊடுருவிய வேற்று நாட்டு ஆளில்லாத எம்.கியூ-9, ஆர்.கியு-1 பீரிடேற்ரர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தி இருக்கின்றது. சுட்டு வீழ்த்தப்பட்ட பீரிடேற்ரரின் பெறுமதி சுமார் 32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2018 ஆம் ஆண்டு சீரியாவில் நடந்த போரின் போது தரைத்தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்டதால், ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இந்த விமானத்தின் செயற்பாட்டைப் பாராட்டியிருந்தது. இந்தரக விமானம் லிபியா, ஆர்மேனியா தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்டிருக்கின்றது.
கோவிட்- 19 காரணமாக இத்தகைய விமானங்களின் உற்பத்தியும் சிறிதுகாலம் தடைப்பட்டிருந்தது. தொடக்கத்தில் வேவு பார்ப்பதற்கு, எல்லைப் பாதுகாப்பு, வீதிப் போக்குவரத்து போன்ற தேவைகளுக்காக பாவிக்கப்பட்ட இத்தகைய விமானங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர்விமானங்களாக உருவெடுத்திருக்கின்றன. வேர்ஜினியாவில் உள்ள நோத்றொப் குறும்மான் கோப்ரேஷன் என்ற நிறுவனமே வேவு விமாங்களை உற்பத்தி செய்வதில் முன்னிற்கின்றது. இதைவிட ஜென்ரல் அட்ரோமிஸ் ஏரோநொட்டிகல் சிஸ்டம் இங், போயிங் கொம்பனி, எல்பிட் சிஸ்டம் லிமிட்டெட், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ரிஸ் லிமிட்டெட், ஏரோ வைரோன்மென்ட் இங், லொக்கீட் மாட்டின் கோப்ரேஷன், தலெஸ் குறூப், பே சிஸ்டம், நாபா குறுப், சீனாவின் விங் லூங், ரெயின்போ போன்ற நிறுவனங்களும் விமானி இல்லாத விமானங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி வகிக்கின்றன.
நவீன விமானப்படை யுத்தத்தில் விமானி இல்லாத விமானங்கள் தாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க விமானப்படையால் ஈராக், அபப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இத்தகைய விமானங்களின் தாக்குதல்களே அதிகமாக இடம் பெற்றன. சமீபத்தில் துருக்கி – சீரியா யுத்தத்தை அவதானித்த போது இந்த விமானி இல்லாத விமானங்கள்தான் ஏராளமான டாங்கிகளை இலக்கு வைத்து அழித்திருந்தன என்பது தெரிய வந்தது. 2007 ஆம் ஆண்டு அறிமுகமான எம்.கியூ-9 ரியப்பர், 2009 ஆண்டு அறிமுகமான எம்.கியூ- 1சி கிறே ஈகிள், 1995 ஆம் ஆண்டு அறிமுகமான எம்.கியூ-1 பிரிடேற்ரர் போன்றவை முக்கிய தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தன. பாகிஸ்தான், லிபியா, சிரியா, பொஸ்னியா, சேபியா, சோமாலியா, ஏமன், ஈராக், அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த தாக்குதலுக்கு இவை துணையாக இருந்தன. 2017 ஆம் ஆண்டு சீனாவின் விங் லூங் - 11 அறிமுகப்படுத்தப்பட்டது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளுக்கு இது விற்பனையானது. சீனாவின் இன்னொரு ஆளில்லாத விமானமான ரெயின்போ நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டது மட்டுமல்ல, விலையும் குறைவானது. 2020 ஆம் ஆண்டு அறிமுகமான துருக்கியின் ஏகேசங்கூர் சிரியா, ஆர்மேனியா தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு பேராக்டர் துருக்கியால் அறிமுகமானது. இஸ்ரேல் நாட்டின் விமானியில்லாத எல்பிட் ஹேமஸ்-900 விமானத்தைத்தான் அதிக நாடுகள் தங்கள் எல்லைப் பாதுகாப்புக்குப் பாவிக்கின்றன.
இப்பொழுதெல்லாம் வான் தாக்குதல்கள் அனேகமாக விமானி இல்லாத விமானங்களால்தான் நடைபெறுகின்றன. சமீபத்தில் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் அபுதாபியில் இப்படியொரு தாக்குதலை நடத்தி இருந்தனர். ரஸ்யாவின் பக்கத்து நாடான உக்ரேன் நாட்டினர் தமது எல்லைப் பாதுகாப்புகாக துருக்கிய தயாரிப்பான விமானி இல்லாத விமானமான ரிபி-2 விமானங்களைப் பாவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். ரஸ்ய, உக்ரேன் எல்லையில் முறுகல் நிலையில் இருப்பதால், ரஸ்யா எல்லையோரமாகத் தனது படைகளைக் குவித்திருக்கின்றது. எந்த நேரமும் ரஸ்யா உக்ரேனுக்குள் ஊடுருவலாம்; என்று அமெரிக்க ஜனாதிபதியும் எச்சரித்திருந்தார். உக்ரேனிடம் உள்ள துருக்கிய தயாரிப்பான ரிபி-2 விமானி இல்லாத விமானத்தையும் தங்களால் சுட்டு வீழ்த்த முடியும் என்பதையும் ரஸ்யாவின் ஒரியன் விமானம் நிரூபித்திருக்கின்றது. 2021 செப்ரெம்பர் மாதம் பெலாரஸ்ஸில் நடந்த ஸாபாட் கூட்டுப்பயிற்சியின் போதும் இந்த ஆளில்லா விமானங்கள் பாவிக்கப்பட்டன.
பெரிய நாடுகள் எப்பொழுதும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கச் சிறிய நாடுகளைத்தான் முதலில் குறி வைத்துப் பயமுறுத்துவார்கள். ஹொங்கொங், தைவான் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, ரஸ்யா, சீனா, ஈரான் நாடுகள் ஒன்று சேர்ந்து இந்து சமுத்திர வடபகுதியில் சென்ற வாரம் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. நட்பு நாடுகள் யாரென்பதை நிரூபிக்க, கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலங்கையையும் இந்தப் பிரச்சனையில் உள்ளே இழுப்பது இதன் நோக்கமாகவும் இருக்கலாம். இப்படி ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் போதுதான் ஒருநாட்டின் ‘உண்மை முகம்’ தெரியவரும். இம்முறை யுத்தம் ஒன்று நடந்தால், நவீன ஆயதங்களின் பாவனையால் அதன் அழிவு அளவிட முடியாததாகவே இருக்கும். உலகம் சுருங்கிவிட்டதால், அதன் பாதிப்பை எல்லோருமே எதிர்கொள்ள வேண்டிவரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.