நண்பரும் எழுத்தாளருமான அ. கணபதிப்பிள்ளை அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தது கனடிய தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். தாய்வீடு பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டன. தாய்வீடு ஒன்று கூடல்களில் மட்டுமல்ல, மற்றும் இலக்கிய நிகழ்வுகளிலும் சந்தித்து இலக்கியம், அரசியல் சார்ந்து அனேகமாக உரையாடுவோம். இலங்கையின் வடபகுதியில் உள்ள நெடுந்தீவைச் சேர்ந்த இவர் மிகவும் அமைதியானவர் மட்டுமல்ல, எல்லோரோடும் பண்பாகவும்,அன்பாகவும் பழகக்கூடியவர். முன்பு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மூத்த புவியியல் விரிவுரையாளராகப் பணி புரிந்த, இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் இன்று புகழ் பெற்றவர்களாக விளங்குகின்றார்கள். கனடாவில் உள்ள நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவராகவும் இருந்த இவர் சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழ் மொழி மீது அதீத பற்றுக் கொண்டிருந்த இவர் இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியிருந்தார். தாய்வீட்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்ததாகவே இருந்தன. எனது மனைவி மாலினியின் சினேகிதியான இவரது மனைவி ஜெயாஸ்ரீ அவர்களும் நானும் ரொறன்ரோ கல்விச்சபையில் ஒன்றாகவே கல்வி கற்பிப்பதால், இவர்களுடன் பழகக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன.
இனிய நண்பர் கணபதிப்பிள்ளை அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருடன், அவர்களின் பிரிவுத்துயரில் நாங்களும் கலந்து கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
குரு அரவிந்தன்.
கனடா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.