புகலிடத் தமிழ் சினிமா – ஒரு தொடர்ச்சியற்ற பயணத்தில் - ‘புகலிடத் தமிழ் சினிமா’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -
சில வாரங்களுக்கு முன்பு வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் குறித்து ஒரு சிறு குறிப்பொன்றினை இத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதன்போது சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த அருந்ததியின் ‘முகம்’ குறித்தும் ஜீவனின் ‘எச்சில் போர்வைகள்’ குறித்தும் சில குறிப்புக்களைத் தொட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போதுதான் எனக்கு இந்த நூல் ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியும், யமுனா ராஜேந்திரனும் தொகுத்தளித்த ‘புகலிடத் தமிழ் சினிமா’ என்ற இந்த நூலானது இன்றைய சூழ்நிலையிலும் ஒரு முக்கியமான நூலாக எனக்குப்பட்டது. முக்கியமாக அன்று இந்நூலில் கட்டுரையாளர்கள் வெளிப்படுத்திய புகலிட தமிழ் சினிமாவானது எதிர்நோக்கிய அதே சிக்கல்களையும் சவால்களையும் இன்றைய சமகாலத்திலும் எதிர்நோக்குவதினால் இந்நூல் குறித்து சில கருத்துக்களை பகிர்வதும் அவசியம் என நினைக்கிறேன்.
பாரிஸிலிருந்து முகம் பதிப்பகத்தினரால் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதற்கு பின் ‘முகம்’ பதிப்பகத்தினர் ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கின்றனரா என்ற தகவல் என்னிடம் இல்லை. வெளிவரவில்லையென்றே நினைகின்றேன். அதேபோல் இதுபோன்றதொரு சினிமா குறித்ததொரு நூல் வெளிவந்ததா என்ற கேள்விக்கும் இல்லை என்ற கசப்பான பதிலே விடையாகக் கிடைக்கின்றது.
எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனும் இயக்குனர் அருந்ததியும் தொகுத்தளித்த இந்நூலில் மு.புஷ்பராஜன்,அருந்ததி, ஜீவன், அபிநயன், சுவிஸ் ரஞ்சி, கதிர்காமநாதன், அழகு குணசீலன், புவனன், எஸ்.பி.ஜெகாதரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
பதிப்புரையில் இயக்குனர் அருந்ததி “சினிமாவின் சாத்தியப்பாடுகள் அதிகம். ஆயினும் இப்புலம்பெயர் சூழலில் ஒரு சினிமாவை உருவாகுவதற்கான சாத்தியபாடுகள் மிக குறைவானவை. எனவே அதன் காரணங்கள் பற்றியும் அதன் கடந்து போதல் பற்றியும் இந்நூல் பேசுகின்றது” என்று பதிவு செய்கிறார். அவர் இதனைக் கூறி இப்போது 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் எமது நிலைமையில் எந்தவித மாற்றமுமில்லை. அந்தக் குறைந்தளவு சாத்தியப்பாடுகளை வைத்துக்கொண்டுதான் நாம் இன்னமும் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.