(ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)
தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது. ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர். சூரியன் மகரராசிக்குச் செல்லும் தினமே தைப்பொங்கல் தினமாகும். தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பர். இலங்கையில் பொதுவாக 2 நாட்களும், புலம்பெயர்ந்த நாடுகளில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் ஒரு நாள் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள், தமிழ் நாட்டில் சில இடங்களில் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் கொண்டாடுகிறார்கள். போக்கி என்ற சொல்தான் மருவி போகி என்றாகியது. போகிப்பண்டிகைக்காகப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, வீடு, வளவுகளைச் சுத்தம் செய்வர். தமிழ் நாட்டின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற பல விதமான விளையாட்டுப் போட்டிகள் இத்தினங்களில் இடம் பெறுகின்றன.
ஆறாம் நிலத்திணையான கனடா, பனியும் பனி சூழ்ந்த பிரதேசம் என்பதால், தைமாதம் பனி விழும் காலமாகையால், வெளி முற்றத்தில் பானை வைத்துப் பொங்க முடியாது. அதனால் தமிழர்கள் தைப்பொங்கலை வீட்டுக்குள்ளேயே பொங்கிக் கொண்டாடுவர். பொங்கலுக்கு மின்சார அடுப்புத்தான் பாவிப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக வாழையிலை, வெற்றிலை, மாவிலை, கரும்பு, தேங்காய், அறுகம்புல், பூக்கள் போன்றவற்றை விசேடமாக வேறு நாடுகளில் இருந்து தருவிப்பார்கள். கனடாவில் உள்ள கோயில்களிலும் தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இதைவிட தமிழர்களின் சங்கங்கள், ஒன்றியங்கள் தமது அங்கத்தவர்களுடன் தைப்பொங்கலை மண்டபங்களில் கொண்டாடுவர். 500 குடும்பங்களுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட பீல்பிரதேச குடும்பமன்றத்தினர் ‘பொங்கலோ பொங்கல்’ என்ற எனது சிறுவர் நாடகத்தை மேடையேற்றிப் பல்லின மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். இந்த நாடகத்தில் கனடாவில் பிறந்த சிறுவர் சிறுமியர் தமிழில் பேசி, பாடி நடித்திருந்தனர். அதில் இடம் பெற்ற பொங்கல் பற்றிய எனது சிறுவர் பாடலை, மகாஜனக்கல்லூரி வெளியிட்ட ‘குழந்தைக் கவிதைகள்’ நூலில் இருந்து உங்களுக்காகத் தருகின்றேன். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எங்கள் பாரம்பரியத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
தைபிறந்தால் வழிபிறக்கும்
பொங்கலோ பொங்கல்
தமிழர்களின் திருநாளாம்
பொங்கலோ பொங்கல்..
கதிரறுத்துப் பொங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல்..
உழைப்பாலே உயர்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்
ஒன்றுபட்டு வாழ்ந்திடுவோம்
பொங்கலோ பொங்கல்..
கனடாவில் பட்டாசு கொளுத்துவது என்றால் அதற்கு முற்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். தைப்பொங்கலன்று கலை நிகழ்வுகளும் இடம் பெறும். தமிழ் வானொலிகள், தமிழ் தொலைக்காட்சிகளில் பொங்கல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. தமிழ் பத்திரிகைகளும், இதழ்களும் பொங்கல் பற்றிய கட்டுரைகளையும், நிகழ்வுகள் பற்றிய படங்களையும் வெளியிட்டு ஆதரவு தருகின்றன. கோவிட்- 19 பேரழிவு காரணமாக 2020-2021 ஆண்டுகளில் சுகாதார சட்ட, திட்டங்களுக்கு அமைய கட்டுப்படுத்தப்பட்ட அளவு மக்களே பொங்கல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஆர்வமான மக்கள் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டாடுகின்றனர். கனடிய தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம் பெயர்ந்தாலும், தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை புலம் பெயர்ந்த மண்ணில் கட்டிக்காப்பதில் மிகவும் கவனமாகச் செயற்படுகின்றார்கள்.
தாயகத்தில் பொதுவாக சூரியன் உதிக்கு முன் எல்லோரும் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பொங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வர். முதலில் முற்றத்தில் தண்ணீர் தெளித்து மொழுகி, அதன்பின் கோலம் போடுவார்கள். முதல்நாளே பொங்குவதற்குத் தேவையான பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்து விடுவார்கள். அடுப்புக்காகச் செங்கட்டி அல்லது அளவான மூன்று பெரிய கல்லை வைப்பார்கள். கோலத்தின் உள்ளே வடகிழக்கு மூலையில் தலைவழையிலை போட்டு, அதிலே நெல் அல்லது அரிசியைப் பரப்பி நிறைகுடம் வைப்பர்.
சைவசமயத்தவர் மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் செருகி அருகே வைப்பார்கள். வாழையிலையில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம், மாம்பழம், மஞ்சள், கரும்புத் துண்டுகள் போன்றவற்றையும் வைப்பார்கள். பொங்குவதற்குப் புதிதாக வாங்கிய மண்பானையில் பாலும் தண்ணீரும் கலந்து அடுப்பில் வைப்பர். பொங்கிச் சரியும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று உரக்கச் சொல்லிச் சிறுவர் சிறுமியர் பட்டாசு கொளுத்தி மகிழ்வர். பொங்கல் தயாரானதும் தலைவாழை இலையில் படைத்து அத்துடன் வாழைப்பழம், மோதகம், வடை, அவல், கடலை மற்றும் பலகாராங்கள் போன்றவற்றையும் படைத்து சூரியனை வணங்குவார்கள். அதன்பின் உறவுகள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து வாழைப்பழத்துடன் பொங்கல் சாப்பிடுவர். மறுநாள் பட்டிப் பொங்கல் செய்வார்கள். கோயிலுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும் சென்று விருந்துண்டு வருவர்.
எமது மாணவப் பருவத்தில் தைப்பொங்கல் காலத்தில் வானத்தில் பட்டம் விடுவது முக்கிய பொழுது போக்கு விளையாட்டாக இருந்தது. பாம்பன், கொக்கு, பிராந்தன், கொக்கன், படலம், எட்டுமூலை, பெட்டிக்கொடி, நட்சத்திரம் என்று பல வகையான பட்டங்கள் வானத்தில் பறக்கும். சிறுவர்கள் பொதுவாகக் பாம்பன், கொக்கு, படலம் போன்ற பட்டங்களைத்தான் பறக்க விடுவார்கள். அவற்றைக் கட்டுவது இலகுவானது. பாம்பன் பட்டத்திற்கு நீண்ட வால் இருக்கும், கொக்கு பட்டத்திற்கு வால் இருக்காது. இதிலும் ஒற்றை நொச்சை, இரட்டை நொச்சை என்று இருக்கும். பராந்தன், கொக்கன், எட்டுமூலை, பெட்டிக்கொடி போன்றவை கட்டுவது கொஞ்சம் கடினமானது என்பதால் பெரியவர்கள்தான் அப்படியான பட்டங்களைப் பறக்க விடுவர். பெரிய பட்டங்களுக்குப் பச்சைப் பனைமட்டை நாரை மிகவும் கவனமாக கத்தியால் மெல்லியதாகச் சீவி விண் செய்வார்கள். விண் பூட்டிய பட்டங்கள் வானத்தில் பறக்கும் போது பல மைல் தூரத்திற்கு விண் கூவும் சத்தம் கேட்கும். குரு விளையாட்டுக் கழகத்தில் அது ஒரு போட்டியாகவும் நடக்கும். காங்கேசந்துறையில் இன்ஸ்பெக்டர் குமார் என்று ஒரு பொலீஸ் அதிகாரி இருந்தார். ஒரு நாள் அவர் பொலீஸ்வண்டியில் குரு விளையாட்டுக் கழகத்திற்கு வந்து விண் பூட்டிய பட்டங்கள் எல்லாவற்றையும் இறக்கச் சொன்னார். அருகே உள்ள காங்கேசந்துறை விமானத் தளத்தின் ‘வயலெஸ் சிக்னல்’ இதனால் தடைப்படுவதாகக் காரணம் சொன்னார். அன்று அவர்தான் தான் எமது பாரம்பரிய விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைத் தொடக்கி வைத்தார்.
புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் ‘தைத்திங்கள்’ பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. ‘தைத்திங்கள் தண்கயம் படியும்,’ ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். ஆனால் தைப்பொங்கல் என்ற சொல் பாடல்களில் பாவிக்கப்படவில்லை. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா பொங்கல் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. ‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்..’ என்று உழவுத் தொழில் பற்றி ஒளவையார் குறிப்பிடுகின்றார். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் - உழந்தும் உழவே’ என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
சினிமாப்பாடல்கள் கூட, அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள் முற்றித் தலைசாய்த்திருப்பதை ‘வளர்ந்து விட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா, தலை வளைந்து சும்மா பார்க்கிறியே தரையின் பக்கமாய்’ என்று கவிஞர் மருதகாசி ‘பிள்ளைக்கனி அமுது’ படத்திற்காக நெற்கதிர்களைப் பெண்கள் நாணத்தோடு தலை குனியும் காட்சியை ஒப்பிட்டு எழுதியிருந்தார். சுண்ணாகத்தில் இருந்து மாசியப்பிட்டி வழியாகச் சண்டிலிப்பாய் செல்லும் போது வழுக்கி ஆற்றின் கரையோரமாக அழகான பச்சைப் பசெலென்ற வயற்காட்சிகளை நான் பார்த்து ரசித்த போதெல்லம் இந்தப் பாடல் நினைவில் வரும். இதேபோல இன்னும் சில சினிமாப்பாடல்கள் இருக்கின்றன. நிலவே நீ சாட்சி படத்தில் ‘தை மாதப் பொங்கலுக்கு’, தளபதி படத்தில் ‘தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை’, மகாநதி படத்தில் ‘தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’ போன்ற சில சினிமாப் பாடல்கள் தைப்பொங்கல் திருநாளை நினைவூட்டுகின்றன. பாவேந்தர் பாரதிதாசனும், ‘தைம்முதல் நாள் பொங்கல் நன்னாள்’ என்று தைப்பொங்கல் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
எமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எமது அடுத்த தலைமுறையிரிடம் இருப்பதால் இத்திருநாளைப் பற்றி, முக்கியமாகப் புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினருக்கும் அறியத்தருவோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.