படித்தோம் சொல்கின்றோம்: நடேசன் எழுதிய அந்தரங்கம் கதைத் தொகுதி! மாயாவாதமும் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகளும் கொண்ட கதைகள் ! - முருகபூபதி -
மனித வாழ்வில் அந்தரங்கங்களுக்கு குறைவிருக்காது. அந்தரங்கம் அவரவர்க்கு புனிதமானது. ஜெயகாந்தனும் அந்தரங்கம் புனிதமானது என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதியவர். அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் நடேசன், இங்கு வந்தபின்னரே இலக்கியப்பிரதிகளும் அரசியல் பத்தி எழுத்துக்களும் எழுதத் தொடங்கியவர். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், அரசியல் பத்தி எழுத்து மற்றும் தான் சார்ந்த விலங்கு மருத்துவத்துறை அனுபவங்கள் சார்ந்த பதிவுகள் என்பனவற்றை தொடர்ச்சியாக எழுதிவரும் நடேசனின் சிறுகதைகளும், நாவல்களும் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் நடேசனுக்கு இதழாசிரியர் என்ற முகமும் உண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் உதயம் என்ற மாத இதழின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.
சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், அரசியல் பத்திகளாகட்டும், இவர் எழுதும் எந்தவொரு படைப்பிலும் அங்கதம் இழையோடியிருக்கும். அந்தரங்கம் கதைத்தொகுதியும் விலக்கல்ல. இதனை வெளியிடுவதற்கு முன்னின்றுழைத்த கருணாகரன், இந்நூலுக்கு அசாதாரணங்களின் கதை என்ற தலைப்பில் மிகவும் பொருத்தமான அருமையானதோர் முன்னுரையை வழங்கியிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு, முதல் முதலில் நடேசனை யாழ்ப்பாணத்தில் சந்தித்தது தொடக்கம், இத்தொகுதி வெளியாகியிருக்கும் இந்தத் தருணம் வரையில் தான் அவதானித்த நடேசன் பற்றியும், நடேசனின் இலக்கியம், மற்றும் சமூக அரசியல் பணிகள் பற்றியும் விளக்கியிருக்கிறார். தமிழகத்தின் மூத்த இதழாளரும் இலக்கியப்படைப்பாளியுமான மாலன் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகள் தொடர்பான தமது வாசிப்பு அனுபவத்தை முன்னுரையாக எழுதியுள்ளார்.