நூல் அறிமுகம்: அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு! - அசோக்குமார் ஜனார்த்தனன் -
சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல் நதிக்கரையோரம்’ என்ற அவரது புத்தகத்தை வாசித்துள்ளேன். அந்தரங்கம் வாசித்த பிறகு அவருடைய அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இந்த புத்தகத்தை பற்றிய என் வாசிப்பனுபவம் அனைத்தும் முழுக்க அவரின் படைப்பின் மூலமாக நான் அடைந்ததே தவிர அவரை தெரியும் என்பதால் எழுதும் புகழுரை அல்ல.
அசாதாரணங்களின் கதை என்று கருணாகரன் அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார். அதை வாசித்து உள் செல்வது நன்று. இலங்கை எழுத்தாளர்கள் தமிழகத்தில் அதிகம் பாவிக்க படாத சொற்களுக்கு அடி குறிப்பிடலாம் என்ற கருத்துக்கு, இலங்கை எழுத்தாளர்களை தொடர்ந்து வாசிப்பதனால் எனக்கு அடி குறிப்பு தேவைபடவில்லை. வாசகனாக சிறு உழைப்பும் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் என்னை பாதித்த ஒரு எழுத்தாளர் touch என உணர்ந்த ஆறு இடங்களை பகிர்கிறேன்.
தீர்ப்பெழுதும் ஊர்: ‘ஒரு தாய் உறங்குகிறாள்’ என்ற கதை. திருமணமாகியும் தனியாக வாழும் ஒரு பெண். அவளை அந்த ஊர் பல விதங்களில் பேசுகிறது. அவளை ‘பொதுக்கிணறு’ என்று கூறுகிறது. அவள் இறந்த பின்பு தேவாலயத்தில் அவள் உடல் கிடத்தி வைத்திருக்கும் பொழுதில், இந்த கதை சொல்லியான ஆணுக்கு, 'இவள் இந்த ஊரிலேயே உருண்டு திரண்ட கால்களும், நடந்தால் பாதத்தின் சிறுவிரல் தரையில் படாது’ என்ற நினைவு எழுகிறது. இதில் என்ன எழுத்தாளரின் நுட்பம் என கேள்வி எழலாம். ஆனால் என் பார்வையில் ஊரே தவறாக பேசும் ஒரு பெண்ணை அவள் வாழ்த்த காலத்தில் ஒரு ஆண் எப்படி எல்லாம் கண்டிருக்கிறான், அவள் இறந்த பின்னும் அவனுக்கு அவள் பற்றிய எது முதல் நினைவாக எஞ்சுகிறது என்பதை தொட்ட நுட்பமான இடமாக காண்கிறேன்.