'பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?'
நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.
'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.
நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.
'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.
https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM
குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளித்தொகுப்பு 'Fragrant Petals: Kamala's Natyam' (நறுமணப் பூவிதழ்கள்: கமலாவின் நாட்டியம்).
நடனக் கலைஞரும், குமாரி கமலாவின் மாணவிகளிலொருவருமான ரமா பரத்வாஜ் குமாரி கமலாவின் நடனப்பங்களிப்பை நாற்பதுகளில், ஐம்பதுகளில் மற்றும் அறுபதுகளிலெனச் சுருக்கமாக ஆனால் சுவையாக விவரித்திருப்பார். இக்காணொளியைத் தயாரித்திருப்பவர் இன்னுமொரு நடனக்கலைஞரான அனிதா ரத்தினம்.
நடனக் கலைஞரான குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளி இதுவென்பேன். 'நறுமணப் பூவிதழ்கள்: கமலா நாட்டியம்' விவரணக்காணொளித்தொகுப்பின் மூன்று பகுதிகளையும் கீழே காணலாம்:
குமாரி கமலா பகுதி 1: https://www.youtube.com/watch?v=uolYHBsXLvA
குமாரி கமலா பகுதி 2: https://www.youtube.com/watch?v=9OLPCejOBgI
குமாரி கமலா பகுதி3: https://www.youtube.com/watch?v=Laj8m6GcbSA
காலத்தால் அழியாத கானம்: 'கன்னங்கறுத்த கிளி! கட்டழகன் தொட்ட கிளி'
'சிவகங்கைச் சீமை'யில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் கண்ணதாசன்., இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி. குமாரி கமலா மற்றும் குழுவினரின் நாட்டியம் இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களிலொன்று. பாடியவர் பி.லீலா.