சின்னக் கலைவாணர் X சின்ன கலைவாணர்: எது சரி? சின்னத்தாய் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா? கவிஞர் மகுடேசுவரனின் கட்டுரையை முன்வைத்துச் சில இலக்கணச் சிந்தனைகள்!
அண்மையில் தினமலர் இதழில் கவிஞர் மகுடேசுவரன் ஓர் இலக்கண விளக்கக் கட்டுரை எழுதியிருந்தார். ‘சின்னக் கலைவாணர்’ போன்ற சொற்றொடர்களில் வல்லொற்று மிகல் ஆகாது; சின்ன கலைவாணர் என்றே எழுத வேண்டும் என்பது அச் சிறுகட்டுரையின் சாரம்.
அதனை முகநூலிலும் பகிர்ந்திருந்தார்.
மறைந்த நடிகர் விவேக் பெயரில் அவர் வாழ்ந்த தெருவுக்குத் தமிழக அரசு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இது பிழை என்பதைச் சுட்டிக்காட்டியே கவிஞர் கட்டுரை வரைந்திருந்தார்.
பொதுவெளியில் இடம்பெறும் தமிழ்ப்பிழைகளைச் சுட்டித் திருத்துவது; அவற்றின் இலக்கண வரம்புகளை எடுத்துரைப்பது என்றவாறு கவிஞர் செய்துவரும் அருந்தமிழ்த் தொண்டின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரை அது.
அதன்கண் அவர் விளக்கும் பெயரெச்சம் பற்றிய பொதுவான இலக்கண விதி பற்றி ஐயுற ஏதுமில்லை.
பெரிய, கரிய, சிறிய, அரிய, வறிய, நல்ல, வல்ல முதலான அகர ஈறு கொண்ட பெயரெச்சங்களை அடுத்து வருஞ்சொல், வல்லின எழுத்தில் தொடங்கும்போது ஒற்று மிகாது என்பதே அந்த விதி.
‘நல்ல தமிழ்’ என்றெழுதுவதே நல்ல தமிழ். அல்லாமல் நல்லத் தமிழ் என்றெழுதின் அது பொல்லாத்தமிழ். ஐயமில்லை.
ஆனால் இந்த விளக்கத்தின் முடிவாகச் ‘சின்னக் கலைவாணர்’ என்பதைச் ‘சின்ன கலைவாணர்’ என்றே எழுத வேண்டும் – ‘சின்ன’ என்ற பெயரெச்சத்தை அடுத்து ‘க்’ என்ற வல்லின ஒற்று அங்கு வரலாகாது – என்று அவர் சொல்கிறபோது இயல்பான மொழி பழகிய மனது ஏனோ தயக்கம் கொள்கிறது.
சின்னப்பெண் என்பதைச் சின்ன பெண் என்று சொல்லும்போதும் சின்னத்தம்பி என்பதைச் சின்ன தம்பி என்று சொல்லும்போதும் ஏதோ ஒட்டா உணர்வு தோன்றுகிறது.
‘சின்னத்தாய் அவள் தந்த ராசாவே..’ என்ற தளபதி படப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்போது சின்ன என்பதை அடுத்துவரும் ‘த்’ என்கிற வல்லின ஒற்றின் அழுத்தம்தான் இசைமையுற்று மனதைக் கரைக்கிறது.
இசைஞானியை ஈன்றெடுத்த அன்னையார் பெயரும் சின்னத்தாய் தான் (‘ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு’ என்றெல்லாம் இளையராஜா பாடல்களுக்குள் அவரையே வைத்தெழுதும் கவிஞர் வாலியின் வார்த்தைச் சாகசங்களில் இஃதுமொன்று).
அரச அவையில் பத்து வயதுச் சிறுவனான பாரதியைச் சீண்டும் நோக்கோடு காந்திமதிநாதன் என்பார் ‘பாரதி சின்னப் பயல்’ என்று ஈற்றடி அமையுமாறு வெண்பாப் பாடச்சொல்லிக் கேட்க, பாரதி புனைந்ததாகப் பதிவாகியிருக்கும் புகழ் பெற்ற வெண்பாக்களின் ஈற்றடிகளிலும் வலி மிகுந்தே உள்ளது (சின்னப்பயல்).
எனவே, வாழும் தமிழில் – மக்கள் வாய்மொழி வழி வளரும் தமிழில் – ‘சின்ன’ என்ற பெயரடையை அடுத்து வருமொழி முதல் வல்லினமாக உள்ளபோது ஒற்று மிகுந்துதான் ஒலிக்கிறது – ‘சின்னத்தாய்’, ‘சின்னப்பெண்’, ‘சின்னப்பயல்’ என்றெல்லாம்தான் சொல்கிறார்கள் என்பது தெளிவு. இந்த வழக்கு இலக்கண விதிக்கு முரணாய் இருப்பதுதான் இப்போது சிக்கல்.
இவ்வாறு சொன்ன மாத்திரத்திலேயே உண்மையிலேயே இஃது இலக்கண விதிக்கு முரணாகத்தான் உள்ளதா என்ற கேள்வியும் தோன்றி விடுகிறது. ஏனென்றால் இப்படி மண்ணோடு வளரும் மக்கள் வழக்குகள்தாம் மரபாகி இலக்கண விதிகளாகின்றன. ஒரு காலத்தில் அழுத்தம் திருத்தமான விதியாக இருந்த ஒன்று காலப்போக்கில் வழக்கொழிந்து விட்டால் புதிய வழக்கை இலக்கணம் ஏற்றுக்கொள்ளும்.
அஃறிணைப் பன்மைக்கு மட்டுமே ஒரு காலத்தில் பயன்பட்டு வந்த ‘கள்’ விகுதி, பிறகு எப்படி – ‘நீங்-கள்’ என்றும் ‘நாங்-கள்’ என்றும் – உயர்திணைப் பன்மைக்கும் மரியாதைப் பன்மைக்கும் பயன்பட ஆரம்பித்தது என்பதைக் ‘கள் பெற்ற பெருவாழ்வு’ என்ற கட்டுரையில் மு.வ விளக்குகிறார்.
‘கள்’ அஃறிணைக்கானது என்று தன் காலத்து விதியை விளக்கும் அதே சூத்திரத்திலேயே கள் விகுதி கொண்ட ‘மக்-கள்’ என்ற உயர்திணைச் சொல்லைத் தொல்காப்பியர் எடுத்தாள வேண்டி வந்ததையும் சொல்கிறார்.
எனவே உள்ளுணர்வோடு முரண்படாமல் ‘சின்னத்தாய்’ என்று சொல்வதைச் ‘சின்னத்தாய்’ என்றே எழுதுவதற்கும் ‘சின்னப்பெண்’ என்பதைச் ‘சின்ன பெண்’ என்றல்லாமல் ‘சின்னப்பெண்’ என்றே எழுதுவதற்கும் இலக்கணத்தில் இடமுண்டா என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்.
***
இந்தப் பிரச்சனையில் இரண்டு விடயங்கள் எடுத்தாராயப்படுகின்றன:
1. பெயரடை (adjective) தொடர்பான தமிழ் இலக்கண விதிகள்:
‘தாய்’ என்ற பெயர்ச்சொல்லை விவரிக்கும் ‘சின்ன’ என்ற பெயரடை எத்தன்மை கொண்டது?
2. தமிழின் சொற்புணர்ச்சி விதிகள்:
சின்ன + தாய், சின்ன + கலைவாணர் முதலான தொடர்களில் உள்ள இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதும்போது எப்படி எழுத வேண்டும்?
இரண்டு சொற்களும் இணையும்போது இடையில் வல்லின மெய் தோன்றுமா? இல்லையா?:
சின்ன+தாய் = சின்னத்தாய் ஆகாமல் வல்லொற்றொலி விடுத்துச் சின்னதாய் ஆவாளா?
***
பெயரடைகள் (Adjectives/அட்ஜெக்டிவ்ஸ்)
ஒரு பெயர்ச்சொல்லை விவரிப்பதற்குப் பயன்படும் சொற்களைப் பெயரடை எனலாம். ‘பெரிய மனிதர்’ என்ற தொடரில் ‘பெரிய’ என்ற சொல், குறித்த மனிதர் எப்பேர்ப்பட்டவர் என்பதை விவரிக்கிறது. எனவே ‘பெரிய’ என்பது ஒரு பெயரடை. இஃது ஆங்கில மொழிப் பயன்பாட்டை ஒட்டி எழுந்த கருத்துருவம்.
தமிழ் இலக்கணம் வெவ்வேறு காரணிகளை முன்னிறுத்தி வினைத்தொகை, பண்புத்தொகை, பெயரெச்சம் முதலான வெவ்வேறு பெயரடைகள் பற்றி விளக்குகிறது.
முதலில் பெயரெச்சம் பற்றிப் பார்ப்போம்.
பெயரெச்சம்
ஒரு பெயர்ச்சொல்லை விவரிக்கும் விதமாக அமைந்து தன்னளவில் தானே ஒரு பெயர்ச்சொல் ஆகாமல் எஞ்சி நிற்பது பெயரெச்சம்:
‘வந்த பையன்’ என்பதில் ‘வந்த’ என்பது பெயரெச்சம். ‘பையன்’ என்ற பெயர்ச்சொல்லை விவரிக்கிறது.
‘சிறந்த மனிதர்’ என்பதில் ‘சிறந்த’ என்பது பெயரெச்சம். ‘மனிதர்’ என்ற பெயர்ச்சொல்லை விவரிக்கிறது.
‘நல்ல தமிழ்’ என்பதில் ‘ நல்ல’ என்பது பெயரெச்சம். ‘தமிழ்’ என்ற பெயர்ச்சொல்லை விவரிக்கிறது.
தெரிநிலைப் பெயரெச்சம்
மேற்சொன்னவற்றில் ‘வந்த பையன்’ என்பது காலத்தை வெளிப்படையாக உணர்த்துகிறது. பையன் வந்து விட்டான் – அச்செயல் நடந்து விட்டது – அஃது இறந்த காலத்துக்கானது என்பது தெரிகின்ற நிலை அங்கு உள்ளது.
எனவே ‘வந்த’ என்பது தெரிநிலைப் பெயரெச்சம்.
‘அழைக்கின்ற குரல்’ என்பதில் ‘அழைக்கின்ற’ என்பது நிகழ்காலத்தை வெளிப்படையாக உணர்த்துகிறது.
எனவே அஃதும் தெரிநிலைப் பெயரெச்சம்.
‘எழும் அலை’ என்பதில் ‘எழும்’ என்பது எதிர்காலத்தை உணர்த்துகிறது. அஃதும் தெரிநிலைப் பெயரெச்சம்.
ஆனால் ‘நல்ல பையன்’ என்பதில் ‘ நல்ல’ என்பது எக்காலத்தைக் குறிக்கிறது? அது வெளிப்படையாக இல்லை. அவன் நேற்று நல்ல பையன், இன்று நல்ல பையன், நாளையும் நல்ல பையன் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகிறது.
எனவே இது குறிப்புப் பெயரெச்சம் எனப்படுகிறது.
***
பெயரெச்சம் எப்போதும் ‘அ’ விகுதியேற்று முடியும். அஃதாவது, அதன் கடைசி எழுத்தொலி ‘அ’ என்பதாக இருக்கும்:
பெரிய – ய (ய = ய் + அ)
அரிய, பெரிய, சிறிய, கரிய, நல்ல, வல்ல, புதிய, பழைய முதலான சொற்களையும் ஆய்ந்து பார்த்தறியலாம்.
பெயரெச்சம் முதலான அகர ஈறு பெறும் சொற்களோடு இன்னொரு சொல் சேரும்போது அப்புணர்ச்சி இயல்பாய் அமையும் என்கிறார் நன்னூலார்:
செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
அஃறிணைப் பன்மை யம்மமுன் னியல்பே
(நன்னூல் 167)
பெரிய கடல், சிறிய சாலை என்றே வரும். இடையில் வல்லின ஒற்று வராது என்பது இஃதிலிருந்து தெரிகிறது.
இதனடிப்படையிலேயே சின்னப்பெண் என்று எழுதுவது பிழை என்கிறார் கவிஞர் மகுடேசுவரன்.
சிறிய, பெரிய, முகத்த முதலான பெயரெச்சங்களுள் ஒன்றாகச் ‘சின்ன’ என்பதைக்கொள்ளும்போது வருமொழி முதல் வல்லினமாயினும் ஒற்று மிகாது என்பது இந்தப் புள்ளியில் புலனாகிறது.
சின்னத்தாயைச் சின்னத்தாய் என்றே எழுதலாம் என்ற நம்பிக்கையோடு ஆரம்பமான பயணம் எங்கோ இடறுப்பட்டு, இடர்ப்பட்டு முடியப் போகிறது போலத் தோன்றுகிறது. பார்க்கலாம்.
***
மேலுள்ளதன் அடிப்படையில் சின்ன பாடல், சின்ன கவிதை என்று தான் எழுத வேண்டும் என்றால் வண்ணத்தமிழ், வண்ணப்பாடல் என்றெல்லாம் எழுதுகிறோமே, அஃதும் பிழையா? இல்லை!
வண்ணப்பாடல் என்பதில் வருகின்ற ‘வண்ண’ என்ற பெயரடை, பெயரெச்சம் என்ற பகுப்பின் கீழ் அமையாது.
‘ம்’ எழுத்தை ஈறாகக் கொண்ட ‘வண்ணம்’ என்ற பெயர்ச்சொல், ‘பாடல்’ என்ற இன்னொரு பெயர்ச்சொல்லுடன் சேர்வதான இவ்வகைப் பெயரடை, இலக்கணத்தில் பண்புத்தொகை என்று சொல்லப்படுகிறது.
வண்ணம் என்பது பண்புப்பெயர். பாடல் என்பது அந்தப் பண்பை ஏற்ற பெயர். அஃதாவது பாடலின் பண்பு என்ன என்பதை வண்ணம் என்ற சொல் சொல்கிறது. (வண்ணம் = சந்தம்).
இப்படியான சந்தர்ப்பங்களில் மகர ஈறு கெட்டு (மறைந்து) வல்லொற்று மிகும் என்கிறது இலக்கணம்:
வண்ணம் + பாடல் = வண்ணப்பாடல்
‘ஆகிய’ என்ற பண்பு உருபைச் சேர்த்து விரிக்கும்போது வண்ணப்பாடல் என்ற தொடரின் பொருள் துலக்கமாகும்:
வண்ணம் ஆகிய பாடல்
எனவே இவ்வழியில் சின்னத்தாய் என்பதை அளவுப் பண்புத்தொகையாகக் கொள்ளலாமா என்று கேட்டால், அவ்வாறு கொள்வதற்கு அத்தொடர் ‘சின்னம்’ என்ற மகரவீற்றுப் பண்புப்பெயரைக் கொண்டதாக இருக்க வேண்டும்:
சின்னம் + தாய் = சின்னத்தாய்
சின்னம் ஆகிய தாய்
என்று அமைய வேண்டும்,
இப்படிப் பொருள் விரிப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது –
எதுவரை என்றால், சின்னம் என்பதன் வேர்ச்சொல்லை ஆராய்ந்து அதன் பல்பரிமாணங்களை அறிய முனைப்புக் கொள்ளாதவரை.
‘சின்னம்’ என்ற சொல்லின் அடி சில் என்பது.
சில் + நாள் = சின்னாள் என்றாகும்
சில் அகர ஈறு ஏற்றுச் சில என்றாகும் போது அத்தொடர், சில நாள் என்றாகும்.
பல் – பல – பன்மை
இல் – இல – இன்மை
அல் – அல – அன்மை
புல் – புல – புன்மை
நல் – நல – நன்மை
என்பது போலச்
சில் – சில – சின்மை
என்றாகும். ‘தன்சீரெழுத்தின் சின்மை மூன்றே’ என்னும் தொல்காப்பியம் (தொல். செய் 46,).
இவற்றினின்று வளர்ந்த பல் – பல்குதல், சில் – சில்குதல், அல் – அல்குதல் முதலானவை தமது வேர்ச்சொல் சார்ந்து பொருள் தருவது போல, இல்குதல், வல்குதல், புல்குதல் முதலானவை வழங்குவதில்லை.
எனவே ஒத்த நிலை கொண்ட வேர்ச்சொற்கள் ஒரே விதமாக வளர்வதில்லை என்பது தெளிவு.
சின்னம் இப்படியாக வளர்ந்த ஒரு சொல். சின்னம் என்பதன் முதன்மைப் பொருள் சிறியது, சிறுமை ஆகியனவே என்பதைச் சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் காணலாம்.
இதனடியாகச் சின்னம் என்பதற்குத் ‘துண்டு’ என்ற பொருளும் உண்டு. அஃதாவது பெரிய ஒன்றின் சிறிய கூறு:
சின்னப்படு குவளை (மாணிக்கவாசகர்)
சின்னத்துணி (சீவகசிந்தாமணி).
சரி, சின்னம் என்ற சொல்லுக்கு நாம் எல்லோரும் பரவலாக அறிந்த பொருள் ‘இலச்சனை’ என்பது தானே? அஃது என்ன சொல்கிறது?
அந்தப் பொருளிலும் ‘சின்னம்’ என்பது பெரிய ஒன்றின் சிறுமை என்பதையே குறிக்கிறது. (எ+கா: அரசு என்பது பரந்து விரிந்த கட்டமைப்பு. அதன் கட்டுமானப் பெருமையையும் பண்பையும் குறிக்கும் சிறு வடிவம் அதன் சின்னம்).
அவ்வகையில், ‘விவேக் கலைவாணரின் சின்னம் – எனவே சின்னக் கலைவாணர்’ என்பது செழுமிய பொருள் தரக்கூடிய, இலக்கண வழுவில்லாத ஒரு தொடரே. இங்குச் சின்னம் என்பது பெரிய ஒன்றின் சிறுமையைச் சொல்லும் பண்புப்பெயராக ஆளப்படுகிறது. சின்னக்கலைவாணர் என்பதும் சின்னத்தாய் என்பதும் பண்புத்தொகை என்ற வகையில் வழுவில்லாத் தொடர்களே.
அந்தச் சொல்லின் வேரை மறந்து விடுகிறபோதுதான் மயக்கம் தோன்றுகிறது. சின்னம் இலச்சனையைக் குறிப்பது பெருவழக்கான பிறகு அதன் முதன்மைப்பொருள் நினைவிலிருந்து நழுவி விடுகிறது.
இது மொழியில் இயல்பாக நேர்வதுதான். நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் அதன் வேர்ச்சொல்லை அறிந்து, ஆராய்ந்து பயன்படுத்துவதில்லை. வரலாறு என்று சொல்லும் ஒவ்வொரு நொடியிலும் அது வரல் + ஆறு என்று இரண்டு பெயர்ச்சொற்களைக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்துக்கொண்டு அச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்துவது அவசியமும் கிடையாது. வேகமான தொடர்பாடலுக்கு அது உதவவும் மாட்டாது. வேர்ச்சொல் ஆய்ந்து விளக்குவது மொழியியலாளர் பணி.
பிற்சேர்க்கைகள்:
-> இக்கட்டுரையைப் புலனத்தில் பகிர்ந்தபோது சில்+நம் = சின்னம் என்றாகுமென்பதை நாசா அறிவியலாளரும் ஆய்வறிஞருமான முனைவர் நா.கணேசன் அவர்கள் உறுதிப்படுத்தினார். முனைவர் நா. கணேசனாரது விளக்கம்: கருநம் > கன்னம், சில்நம் > சின்னம் (cf. சில்+நகை = சின்னகை (புன்னகை)), பெருநம் = பென்னம், … என்றாகிறது.
-> இதையொட்டி எழுந்த உரையாடலில் வேறு பேராசிரியர்களும் தமிறிஞர்களும் மேலுள்ள விளக்கத்தை ஒப்பினர்; சின்னக்குயில் என்றவாறு வல்லினம் மிகும் என்பதை உறுதிப்படுத்தினர்.
-> சின்னஞ்சிறிய முதலான அடுக்கிடுக்குத் தொடர்களில் தன்னைத் தொடரும் பெயரடையின் பொருளை மிகுவித்துக் காட்டும் சொல்லாகச் சின்னம் அமைவதை அறிவோம் (சின்னஞ்சிறு கிளியே – பாரதி, சின்னஞ் சிறியேன் சிதைவே செயினும் – கந்தர் அநுபூதி, சின்னம் சிறிய மருங்கினில் – அபிராமி அந்தாதி).பென்னம்பெரிய, கன்னங்கரிய முதலானவையும் அவ்வாறானவையே. இப்படியான இடங்களில் “மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் என்ற நன்னூல் (219) சூத்திரத்துக்கு ஏற்ப மகர ஒற்று தன்னைத் தொடரும் வல்லெழுத்துக்கு இனமான எழுத்தாகத் திரிகிறது (ககரத்துக்கு ஙகரம் இனம் – கன்னங்கரிய, சகரத்துக்கு ஞகரம் இனம் சின்னஞ்சிறிய)
-> அகராதிச் சான்று:
சின்னம் ciṉṉam (p. 1468)
சின்னம்¹ ciṉṉam , n. சிறு-மை. [T. K. M. cinna.] 1. Smallness, minuteness; அற்பம். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16). 2. Anything small; சிறியது. (J.) 3. Winnowing fan; முறம். (பிங்.) 4. Drizzling; மழைத்தூறல். (அக. நி.) 5. Derision, slight; இகழ்ச்சி
-> சிறுமை என்னும் பொருளிலும் அதனை ஒட்டிய பொருளிலும் சின்னம் என்ற சொல் ஆளப்படும் இடங்களை – அவற்றுக்கான இலக்கியச் சான்றுகளை – மேலுள்ள இணைப்பின்வழி தமிழ் லெக்சிகானில் தேடி அறிந்து கொள்ளலாம்.
-> ஆய்வறிஞர் நா. கணேசன் அவர்கள் பகிர்ந்தவற்றைக் கீழே இணைத்துள்ளேன்:
சின்ன ciṉṉa , adj. < id. [T. K. M. cinna.] 1. Small, little; சிறிய. சின்னத்துணி (சீவக. 2929). 2. Inferior, mean, low; இழிந்த. சின்ன மனிதன். 3. Young; இளைய. என் சின்னத்தம்பி.
சின்னக்காசு ciṉṉa-k-kācu , n. < சின்ன +. An ancient small coin = ⅕ pie; பழைய சிறிய நாணயவகை. (M. M.)
சின்னக்குறிஞ்சி ciṉṉa-k-kuṟiñci , n. < id. +. A species of conehead. See குறிஞ்சி. (L.)
சின்னச்சம்பா ciṉṉa-c-campā , n. < சின்ன +. A variety of campā maturing in four months; நாலுமாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை.
சின்னச்சலவாதை ciṉṉa-c-calavātai , n. < id. +. Urination; சிறுநீர்விடுகை. Vul.
சின்னட்டி ciṉṉaṭṭi , n. < சின்-மை. 1. See சின்னது. (J.) 2. A kind of small herb; பூடுவகை.
சின்னப்பட்டம் ciṉṉa-p-paṭṭam , n. < id. +. Person who is second in authority and is the successor-designate of the head of a mutt; பெரிய மடாதிபதிக்கு அடுத்தபடியான மடாதிபர்.
(உ-ம்: தருமை ஆதீனச் சின்னப்பட்டம் முதல்வரைப் பட்டினப் பிரவேச வியவகாரத்தில் சந்தித்தபின், நிருபர்களுக்குச் செவ்வியளித்தார்.)
சின்னப்பணம் ciṉṉa-p-paṇam , n. < சின்ன +. Small fanam = 1¼ anna; ஒன்றேகால் அணா. (C. G.)
சின்னப்பயல் ciṉṉa-p-payal , n. < id. +. 1. Little fellow; சிறுபையன். 2. Mean, petty-minded fellow; அற்பன்.
சின்னப்பூ² ciṉṉa-p-pū , n. < சின்னம்³ +. 1. Loose, untied flowers; விடுபூ. சின்னப்பூ வணிந்த குஞ்சி (சீவக. 2251).
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.