3
“உன்னை காதலிக்கின்றேன் - அனைத்தையுமே அப்படியே அறிந்து வைத்திருந்தும், ஒன்றுமே பேசாமல், மௌனம் காக்கின்றாயே – அதற்காய்…” உன்மைத்தான். இவ்வளவு அடக்கம் ஒருவனில் அடங்குமெனில், எந்தப் பெண்தான் காதல் வசப்படாமல் இருப்பாள்? கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, ரசிய மாகாணம் ஒன்றில் குடியேறிய பின், அவன், மூன்று முக்கிய மனிதர்களைச் சந்திக்கின்றான். அவர்களில் ஒருத்தி, கிளிம்மிடம் கூறும் கூற்றே, மேலே காணப்படுகின்றது. இவள் ஒரு பாடகி. ஏற்கனவே மாஸ்கோவில், கிளிம்முக்கு ஓரளவு அறிமுகமாகி இருந்தவள், அவர்களின் பரஸ்பர நண்பர்களின் சுற்று வட்டத்திற்கூடு. வித்தியாசமான ஒரு பெண்ணாக இவளை நாவலில் உலவ விட்டிருக்கின்றார், கார்க்கி.
“எனக்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் இஷ்ட்டமில்லை…”
“என்னைப் பொறுத்தவரை, மனிதன் என்பவன், அன்பு செலுத்தி கொண்டிருக்கும் வரைத்தான் வாழ்கின்றான். பிறிதொருவன் பொறுத்து அவனால் அன்பு செலுத்த முடியாது போய் விட்டால், அவன் இருப்பதன் அர்த்தம் தான் என்ன…?"
அவளது தர்க்கங்கள் இப்படியாகத்தான் இருக்கின்றது. கிளிம்மின் புலமை தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, அவனது மௌனத்தால் வசீகரிக்கப்பட்டு விடும் இவள், கிட்டத்தட்ட, கிளிம்மின் அடிமைப் போன்றே இருப்பதில் பெருமை கொள்கின்றாள் - ஆரம்ப கட்டத்தில். போதாதற்கு தனது அந்தரங்கங்களை எல்லாம் கிளிம்மிடம் கொட்டி தீர்ப்பதில் வேறு ஆனந்தம் கொள்கின்றாள் - இவ் அபலை பெண்.
“என் தந்தை ஒரு சீட்டுப் பிரியர். அவர் தோற்கும் போதெல்லாம் என் தாயாரை அழைத்து, பாலில் தண்ணீரை கலக்கச் சொல்லுவார். எங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தன. அம்மா பால் விற்பவர். நேர்மை. அனைவரும் அம்மாவை மனதார விரும்பினர். மரியாதை செலுத்தினர். அவள் தண்ணீரைக் கலக்கும் போது எப்படியாய் அழுதாள் தெரியுமா – என் அம்மா. எவ்வளவு, எவ்வளவு துன்புற்றுக் கலங்கினாள், என்பதை உங்களால் அறிய முடிந்தால்…”
“பாடும் போது, நான் என்னை மறந்து போகின்றேன். நன்றாகப் பாட முடியாது போனால் அப்படியே வெட்கித்து தலை குனிந்து செல்கின்றேன்…”
“பாடும் போது… என் கால்களை என்னால் உணர முடியாது போகும்… கால்கள் இருப்பதே எனக்கு nதியாது…நினைத்துப் பார்… தந்தை தச்சு வேலை… தாய் பால் விற்பவள்…. திடீரென நான் பாடுகிறேன்… முழுச் சபையுமே மயங்கி தள்ளாடுகிறது… நினைத்துப் பார்…”
ஆனால், இந்த அபலையில், இப்படியாய் பொங்கி வழியும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அனைத்துமே, கிளிம்மைத் தொடுவதாக இல்லை. அவை அனைத்தும், அப்படி அப்படியே, அவனது உலர்ந்த, உணர்வற்ற தோல்களில் பட்டுப் பட்டுத் தெறித்து, முறிந்து விழுகின்றன – உலர்ந்த, காய்ந்த சருகுகளாய். இத்தகைய ஒரு சூழலில், விடயங்களை மேலும் மோசமாக்க, அவன், அவள் மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, போனால் போகிறதென்று, அவள் பாடும் மண்டபத்திற்குள், நுழைந்து விடுகிறான், அவள் பாடும் பாட்டை பார்க்க. மக்கள் ஆரவாரிக்கின்றார்கள். ரோஜா மலர்களை விட்டெறிகின்றனர். அள்ளி, அள்ளிக் கட்டோடு அவள் மேல் கூடை கூடையாய் வீசி எறிகின்றனர், வெறி கொண்டதுப் போல்.விக்கித்துப் போகின்றான், கிளிம், சில நொடிகளில். அவன் எதிர்பாராதது இது. சிறிது நேரத்தில், அவனது திகைப்பு, ஒரு வித கோபமாக, ஒரு வகை வெறுப்பாக, மெது மெதுவாக மாறத் தொடங்குகிறது, அவனுள்.
“வெறும் பால் விற்பவள்…” . “என் படுக்கையில் எப்படி கிடந்தவள் இவள்”, என அவன் மனம் அவள் படுக்கையில் கிடந்த கிடப்பை காட்சிப் படுத்த முனைகின்றது. பாட்டு முடிகின்றது. வெறுமையோடு அறைக்கு திரும்பும் கிளிம் காத்திருக்கிறான். அவளுக்காய். அவளோ அனைவருடனும் இருந்து விடை பெற்று சற்றுச் சுணங்கியே வந்து சேர்கின்றாள், அறைக்கு, கிளிம்மை பார்க்கும் ஆர்வத்துடனும், மிகுந்த குதூகலத்துடனும். அவளது அந்தக் குதூகல மனநிலையை சிதைக்கவோ என்னவோ, கிளிம், தான் ரயிலில் வரும் போது சந்திக்க நேர்ந்த, ஒரு புரட்சிகாரன் சம்பந்தப்பட்ட, திகில் காட்சியை கூறத் தொடங்குகிறான். தன் கண் முன்னால், அவன், அப்புரட்சிக்காரன், ஒரு படையினனின் துப்பாக்கியை பறித்தெடுத்துக் கொண்டு ஓடிய, விதம் பற்றி அவளிடம் விரிவாக விவரிக்க தொடங்குகிறான் கிளிம். இவன் வெறுப்புடன், அவ் இளைஞன் பொறுத்து, இப்படி கூறும் கதையை, மிகுந்த ஆர்வத்துடன் உன்னிப்பாய் கேட்கும் இவள், “அப்படியா… அப்படியா செய்தான் அவன்? உண்மையாகவா? அப்பப்பா, எவ்வளவு தைரியசாலி? எவ்வளவு திறம் படைத்த ஆளாய் இருக்கின்றான் அவன்…? என்று மறுதலையாக அதிசயித்து, அவனை கொண்டாடத் துணிகின்றாள் அவள்.
இவளின், இத்தகைய எதிர்வினையை காணும் கிளிம், மேலும் இவளிடம் வெறுப்புத் தட்ட, அவளது குதூகல சிந்தையை அப்படியே நைத்துத் தேய்க்க, வேண்டுமென்றே பின்வரும் வார்த்தைகளை உமிழ்வான்: “அவன் கிடக்கட்டும் ஒரு புறமாய்… ஆனால் உனது எதிர்காலத்தை நினைத்தால் தான்…” என்று ஒரு விதமாய் இழுப்பான் கிளிம்.
“ஏன்… என் எதிர்காலத்துக்கென்ன…” என இப்போது திடுக்கிடும் அவளிடம் தொடர்ந்து வெகு சாவதானமாய் கூறுவான் கிளிம்: “ஓ.. உனது குரலை எண்ணிப்பார்… மிகவும் மெலிதானது அது… நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாதது… மேலும்… பாடகர்களின் கூட்டம் என்பது, வெறும் முட்டாள் மனிதர்களால் ஆக்கப்பட்ட ஒன்று… ஏற்கனவே, கெடுக்கப்பட்டு விட்ட ஒரு கூட்டம்தான்… அவர்கள், கூட்டத்தை கு~pப்படுத்தவே பாடுகின்றார்கள்…”
எதிர்பாராத இக்கோரத் தாக்குதலை கேட்க நேரிடும், விக்கித்து போன இவ் அபலை பெண் கூவுவாள்: “ஓ… கிளிம்… கடவுளே… நீயுமா… இப்படி…அட… அவனைப் போல் அல்லவா நீயும் பேசுகின்றாய்…”
“யாரைப்போல… யார் அந்த அவன் என கேட்கும் கிளிம் மேலும் சாவதானமாய் தொடர்வான்: “அந்த அவன் அப்படியே பேசியிருந்தாலும் கூட,அவனது கூற்று, அப்படி ஒன்றும் முட்டாள்தனமானதல்லவே…” என அசட்டையாகத் தட்டி விடுவதுப் போல் கூறுவான் கிளிம்.
“இல்லை… இல்லை… அவன் முட்டாள் தான்… மிக கேவலமான, அசட்டு முட்டாள் தான் அவன்… அவனிடம் ஒன்றுமே இருக்கவில்லை… அவனிடம் இருந்ததெல்லாம் வெறும் பாழடைந்த வெறுமைத்தான்… புத்தகங்கள், நூல்கள், படிப்பு…படிப்பு, வாசிப்பு…வாசிப்பு… இதை தவிர வேறென்ன… அவன் இதயத்தில் அப்படி ஒரு ஓட்டை –அப்படி ஒரு வெறுமை… ஒரு கேவலமான பிச்சைகாரனைப் போன்றவன்… அவனுக்கு உண்மையில், யாரையுமே மனதாரப் பிடிப்பதில்லை…”
“பூனை, நாய், எதையுமே அவனுக்கு பிடிப்பதில்லை… கேவலமான நாய் அவன். ஒரு சிறு மாட்டின் மூளை அவனுக்கு. என்னைப்பார்… நான் அப்படி வாழ விரும்பியதில்லை… என்றுமே”
“உன்னிடம் சந்தோசம் இருக்கின்றதா? கொடு… அனைவருக்கும் கொடு… கொண்டாடு… பகிர்ந்து கொள்… அனைவருடனும்… அதுதான் வாழ்க்கை… நான் சந்தோசமாகவே இருக்கப் பிரியப்படுகிறேன். – உண்மை – மனிதர்கள் அப்படி வாழக்கூடாதா, என்ன? வாழலாம். அப்படி வாழலாம்… என்னால் முடியும்…”
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்துப் பொங்கி கன்னங்களின் இருபுறமும் வழிய அவள் குமுறி குமுறி கூறுவாள் இதை கிளிம்மிடம். தான் தன்னைவிடவும் ஒரு வகையில் தன் வாழ்வை விடவும் மேலாக நினைக்கும் ஓர் புனிதப் பொருள் தீண்டப்பட்டுவிட்டதை எண்ணி அவள் பதறுகிறாள் போலும். ஆனால் கிளிம்முக்கோ, இதனை மேலும் சகிக்க முடியாமல் போகின்றது. கோபத்துடன் கூறுவான்: “நிப்பாட்டு… போதும்… நிறுத்து… உன் பிதற்றலை…”
இப்போது, கிளிம்மினுள், வன்மம் கொண்ட ஒரு வகை பாலியல் உணர்வு, மெது மெதுவாக முளைவிடத் தொடங்குகிறது. அவளை உடல் ரீதியாக, பிடித்திழுத்து, வளைத்து நைத்து விட வேண்டும் என்ற அவா, அவனில் பரவி விரவத் தொடங்குகின்றது. ஆனால் அவளோ, அவன் கைக்கு எட்டாத வண்ணம், ஒரு மேசையின் பின்னால் ஓடி நின்றுக் கொண்டு கூவுவாள் அவள்: “ஆ.. உன் கண்ணைப்பார்… அம்மா… எவ்வளவு வெறுப்பும் கோபமும் வன்மமுமாய்… ஐயோ கடவுளே…ஏன் இப்படி…”
இறுதியில், இருவரும், அன்புடன் பிரிகின்றனர் - ஒருவரை ஒருவர் இனியும் காண முடியாதவாறு. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அவள் பொறுத்து வேறொரு பாத்திரம் கிளிம்மிடம் கூறி இருக்கும்: “பாடல் என்பது ஒன்று… பாடுவது என்பது மற்றொன்று” என.
[தொடரும்]