கவிதை 1: கேலிப் பட்டாசும் கோவணக் கட்டியும்!
நான் ஓர் கனாக் கண்டேன்
தோழி...!
சிங்கத்தின் வாயிலே
மதுப் போத்தலும்
நீண்டு நிமிர்ந்த அதன் வாலில்
ஈராயிரம் ரூபா நோட்டும்
தூக்கிய கரத்தில்
தாக்குக் கம்புகளும்
இருப்பதாக
நான் ஓர் கனாக் கண்டேன் தோழி!
காலிக் கடலின் கரையைத் தாக்கிய
சிங்கக் கூலிகள்
உயரும் குரலின்
கூடாரங்களைத் தின்றொழிப்பதாயும்
காக்கிகளின் காவலோடும்
துப்பாக்கி அரணோடும்
மன்னரின் ஆசியோடும்
காட்டேரிகள்
கடலோரப் புயல்களை
அடித்தும் உதைத்தும் கொழுத்தியும்
முடிப்பதாயும்
எனினும், அது முடியாததாயும்
நான் ஓர் கனாக் கண்டேன் தோழி!
நீர்க்கரை ஒன்றில்
அக்கினி தேவன் தோன்றி
தீவினை எரிப்பதாயும்
அதன் துண்டுகளை
நாலுபுறக் கடலிலும் வீசி
தீயெழும் நாவினால்
எக்காளமிடுவதாயும்
அலையின் மடிப்புகளில் தீயெழுந்து
கடலின் மாளிகை ஒன்றை நோக்கி
அக்கினி நாவுகள் நீட்டுவதாயும்
நான் ஓர் கனாக் கண்டேன் தோழி!
வடபுலத்துக் கடலொன்றின் திடலில்
வானம் சிவக்கப் பிதிர்கள் எழுவதாயும்
அவர்கள் காலித் திடல் பார்த்து
கண்ணீர் மாலை வீசுவதாயும்
அது ஆவியாகி மேலெழுந்து
மேகமாகிக் கறுத்து
இடியோடு பொழிய
எல்லாமே மூழ்கியதாயும்
நான் ஓர் கனாக் கண்டேன் தோழி!
என்னை எழுப்பி
ஏன் இப்படிக் கூறினாய்?
'அரியணை ஏற்றிய
மகா ஜனங்கள்
கேலிப் பட்டாசு கொழுத்த,
நவ துட்டகைமுனு
கோவணத்தோடு
தன்னூருக்குத் திரும்புகிறானாம்.
கவிதை 2: நீல அல்லியும் செங்காந்தளும்!
மர அணிலும்
காட்டுக் கோழியுமான
நாமிருவரும்,
நீல அல்லிகள் பூக்கும்
கனவொன்றைத்தான்,
சூரியன் மறையும்
பின்மாலையொன்றில்,
காலிமுகக் கரையில் நாட்டினோம்!
முதுகில் மூன்று கோடும்,
அடர்வால் முடியும்,
கூர் நகமும், முன்பல்லும்,
வெளிர் நிறச் சாம்பலும் பூண்ட
மர அணில்களாகிய நாம்,
தீயில் வடித்த எழுத்துகளைக்
காற்றின் வாயிலே ஊட்டினோம்.
'பிழைபடும் மனுஷனின்
அதிகாரக் கால்கள் நொறுங்குவதாக,
பசித்திருப்போரின் நெருப்பு மூண்டெரிவதாக,
இன்னும்...
வயிறொட்டும் படியாக,
பிறர் உணவைத் தின்றோர் கூரைகள்
தீயின் வாய்க்கு இரைபடுவதாக'
எனும் சுவிஷேசத்தை,
காற்றுரைத்துச் சென்றாயிற்று.
செம்மஞ்சள் மேவு செவ்வுடலும்
அப்பிய ஊதாச் சிறகுகளும்
பொன்னிறக் கழுத்தும்
வெளிறிய செவ் முகமும்
உச்சிக் கொண்டையும் சூடிய
காட்டுக் கோழிகளாகிய நாம்
சூரியப் பிழம்பைப் புரட்சி மையாக்கி
அலைநுரையின் நாவில் பருக்கினோம்.
'சிங்கத்தின் வாலில் தொங்கும் மதுப் போத்தல்களாகி,
கூரிய அதன் பற்களிடை
பணத் தாள்களாகி,
கால்களில் கத்திகளும் கம்புகளுமாகி,
ஆசனத்தை இழந்தோன்,
நூறாயிர யோனியிலும் நாயாகவும்
இன்னும்...
நடுச்சமுத்திரத்திலும்
நக்குத் தண்ணிதானும் அவனுக்கெட்டாது'
எனும் சுவிஷேசத்தை
அலை உரைத்துச் சென்றாயிற்று.
எல்லாமே முடிந்தது!
ஆயினுமென்?
'ஆமென்' சொல வாய் திறந்தோம்.
அதற்குள்...
நாய்க் குடும்ப இனத்தோன்றியான
அனைத்துண்ணியும்,
நாய் தின்னாது விட்டதைத் தின்பதும்,
வாய்ப்பு வளைகளில் வசிப்பதால்
குழி நரியுமான குள்ள நரி,
தாமரை மொட்டேந்தி,
பச்சை யானையாகி,
கதிரைக் கால் பற்றி
'ஆதிமூலமே' என
ஊளையிட்டதாயின்...
இயற்கையின் கையிலும்
ஈர நிலத்திலும் பூப்பதும்,
ஒழுக்கத்தின் சிரிப்பும்,
சித்தார்த்தரின் பாத நற்குறியுமான
நீல அல்லியோடு...
கார்த்திகையில் முகிழ்ப்பதும்,
விரிவின் நிமிர்கையில் விரல் நீட்டுவதும்,
இதழ்களில் சுடர்வதும்,
மஞ்சளும் சிவப்புமான,
செங்காந்தள் ஒன்றையும்
சேர்ந்தே நாட்டுவோம்!
அப்போது,
காற்றின் தீப்பந்தாய்க் கனலும்
விடுதலைத் தீயில்,
காலிக் கடலின் கரையில்,
உனதும் எனதுமான
குருதியில்,
நீல அல்லியும்
செங்காந்தளும்
ஒன்றாய்ச் சிரிக்கட்டுமே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.