மாஸ்ட்ர் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் நேற்றுப் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் அவர், செல்லும் நிலையில்் நான் இல்லை , அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமை மிகுந்த வருத்தமே. பழுத்த ஓலைகள் விழுகின்றன, காலத்தின் நியதி அது.
மாஸ்டர் என்ற சொல் ஒருகாலத்தில் மட்டக்களப்பில் சிவலிங்கம் அவர்களையே குறிக்கும் சொல்லாக இருந்தது. இத்தனைக்கும் அவர் ஓர் பாடசாலை மாஸ்டர் அல்ல. பாடசாலையில் படிப்பிக்காத அவருக்கு பல்நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். மாஸட்ராக அல்ல மாமாவாக அவர் குழந்தைகளின் உளத்தில் கொலு வீற்றிருந்தார். அவரது மறைவு இயற்கையானது. அவர் தனது 89 ஆவது முது வயதில் காலமானார். இருந்திருந்தால் அடுத்த ஆண்டில் அவரது 90 வயதைக் கொண்டாடியிருப்போம்.
மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை அனைவரும் ஒரு கதைசொல்லியாக அதிலும் சிறுவர்களுக்கான கதைசொல்லியாக மாத்திரமே பார்க்கிறார்கள். முக நூலில் அப்படியொரு பிம்பமே உருவாகி இருந்தது. நான் அறிந்த மாஸ்டர் சிவலிங்கம் இன்னும் வித்தியாசமானவர். அவருடனான முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நான் வந்தாறுமூலை மத்தியகல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். காற் சட்டை போடும் . வயது 13. எட்டாம் வகுப்பு அன்று . பாடசாலை பாரதிவிழா கொண்டாடுகிறது. அத்ற்கு அவர்கள் அன்றைய மட்டக்களப்பின் பிரபல பேச்சாளர்களான பிரபலமான செ, இராசதுரை, கமலநாதன் ( அவர் வித்துவான் ஆகாதகாலம் அது) எஸ் பொன்னுதுரை ஆகியோரையும் அவர்களுடன் சிவலிங்கத்தையும் அழைத்திருந்தனர். , முன்னவர் இருவரும் தமிழரசுககட்சி மேடைகளில் விளாசித் தள்ளி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். எஸ் பொன்னுத்துரை இன்னொரு விதத்தில் பிரபலமானவர். அவர்கள் அனைவரும் சிவலிங்கத்திலும் வயது கூடியவர்கள். சிவலிங்கத்தை மட்டக்களப்பு அதிகம் அறியாத காலம் அது. சிவலிங்கம் அப்போதுதான் தமிழ்நாட்டு வாசம் முடித்து மட்டக்களப்பு திரும்பியிருந்தார். தமிழ்நாடு சென்று வருவது என்பது அன்று பெரிய விடயம். சிவலிங்கம் தனது பேச்சில் தனது தமிழ் நாட்டு அனுபவங்களைச் சுவையாக கூறினார். அவர் அப்போது ஒரு மிமிக்கிறிக் கலைஞராக வளர ஆரம்பித்த காலம் அது. அவர் அன்றைய முதலமைச்சர் காமராஜர்போல , திராவிடக் க்ழக தலைவர் ஈ வே ரா போல, திராவிட முன்னேற்ரக்கழக தலைவர் அண்ணாதுரைபோல , கருணாநிதிபோல. சினிமா நடிகர் என் எஸ் கிருஸ்ணன் போல , சிவாஜி கணேசன் போல தனது குரலை மாற்றி மாற்றி செய்து அவர்கள் பேசுவதுபோல பேசிக் காட்டினார். சிறுவர்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியம். குசி சந்தோசம் கைதட்டல் பெரு வியப்பு.
"பச்ச எடுத்து முஸ்துல அடிச்சன் ஜஸ்து புடிஸ்து" என்று மெட்ராஸ் தமிழை அப்படியே கூறி அதற்கான அர்த்தத்திதையும் விளக்கினார். பச்சத் தண்ணியை எடுத்து முகம் கழுவினேன் ஜலதோசம் பிடித்துகொண்டது என்றது அதன் அர்த்தம். பஸ்து என்றால் பச்சத்தண்ணி என்பது அர்த்தம், முஸ்து என்றால் முகத்தில் என்பது அர்த்தம், ஜஸ்து என்றால் ஜலதோசம் என்பது அர்த்தம், புடிஸ்து என்றால் பிடித்துகொண்டது என்பது அர்த்தம்.
என அவர் விளக்கியபோது எமக்குப் புதிய உலகங்கள் விரிந்தன. கிருஸ்ணா ஒயில் உங்களுக்குத் தெரியுமா? என சிறுவர்களான எங்களிட்ம் கேட்டார், தெரியாதே என்றோம். ஒயில் என்றால் எண்ணெய் என்பது தெரியும் . லாம்பெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் நாம் அறிந்த எண்ணைய்கள்- ஒயில்கள். இது என்ன கிருஸ்ணா ஒயில்? கிரெசன் ஒயிலை மெட்ராஸ்காரன் கிருஸ்ணா ஒயில் என்று அழைத்ததை "கிருஸ்ணா ஒயில் கிருஸ்ணாஒயில் வாங்கோ வாங்கோ" எனஅப்படியே கூவிக்காட்டினார். அவரது உடல் குரல் கண் அனைத்தும் பேசின. கிரசன் ஒயில் தான் நமது லாம்பெண்ணெய் அதாவது மண் எண்ணெய். மிகச்சிறந்த பேசாளர்களான செ, இராசதுரை கமலநாதன் எஸ் பொன்னுதுரை ஆகியோரின் பேச்சுகளை விட எம்மை அன்று மிகவும் கவர்ந்தது சிவலிங்கத்தாரின் பேச்சே.
இந்தச் சிவலிங்கம் இந்தியா சென்றிருக்கிறார். நாம் நூல்களில் படித்த ஈ வே ரா பெரியார். அண்ணதுரை கருணாநிதி போன்றோரைக் கண்டிருக்கிறார். அவர்களோடு பேசியிருக்கிறார். நாம் திரைப்படங்களில் கண்டு பிரமித்த என் எஸ் கிருஸ்ணன் சிவாஜி கணேசன் போன்ற சினிமா நடிகர்களைக் கண்டு உரையாடியுள்ளார் என்ற பிரமிப்பு. அப்பிரமிப்பு சிவலிங்கத்தார் மீதும் ஓர் பிரமிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பிரமிப்பு தொடர்ச்சியாக அவர் செயல்கள் மூலம் வளர்ந்து வந்தது. இது இன்னொரு அனுபவம்.
எனது 15 ஆவது வயதில் என நினைக்கிறேன் அப்போது அவருக்கு 25 வயது இரு.க்கும் சங்கிலியன் நாடகம் என நினைவு சிவலிங்கமும் அந்த நாடகத்தில் நடிக்கிறார். அதில் ஒரு காட்சியில் அவருக்கு அரசன் கோபத்தோடு ஏச சடாரென்று முகத்தை அவர் திருப்பி அஸ்டகோணலாக்கிய காட்சி அப்படியே ஞாபகம் வருகிறது. அது நடந்தது புதிதாகக் கட்டப்பட்ட மட்டக்களப்பு நகர மண்டபத்தில். என் அருகில் உட்கார்ந்திருக்கிறார் பாலு மாஸட்ர், அவர் ஒரு நாடக ஆசிரியர் அத்தோடு அவர் ஒரு பகுத்தறிவுவாதியும் கூட . . எல்லாவற்றையும் எல்லாரையும் கிண்டல் பண்ணும் இயல்பினர். அப்படியான அவரே சிவலிங்கத்தாரின் அந்தக் கண்நேர நடிப்பில் மயங்கிச் "சபாஸ் சிவலிங்கம்" என்று கூவி விட்டார். சபையிலிருந்து மாஸ்டர் சிவலிங்கத்திற்குக் கிடைத்த அந்தப் பாராட்டு. இப்போது ஞாபகம் வருகிறது. ஆம் மாஸட்ர் சிவலிங்க சிறந்தவோர் நடிகர் பின்னாளில் நகைச்சுவை நடிகர் இந்த நகைசுவையை அவர் வளர்த்தெடுத்து பின்னாளில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நகைசுவை மாமாவும் ஆனார்.
1950 கள் மட்டக்களப்பில் திராவிட திராவிட முனேற்றக் கருத்துகள் இளைஞரை தீவிரமாக வசீகரித்த காலங்களாகும். வெலிங்டன் புத்தகசாலை இந்நூல்களை விற்கும் மத்திய நிலையமாக இருந்த்து. இந்நுல்களும் பகுத்தறிவுக் கருத்துகளும் அன்றைய துடிப்பான இளைஞர்களைப் பற்றிகொண்டன. இவர்கள் தம்மை சுமரியாதைக்காரர் என அழைத்துகொண்டனர் மக்கள் அவர்களைச் சுனாமானா என அழைத்தனர்.
எஸ் டி சிவநாயகம்
பித்தன்.
செ, இராசச்துரை,
வித்வான் கமலநாதன்,
இரா, பத்மநாதன்
ஓவியர் குமார்
காசி ஆனந்தன்
தங்கவடிவேல்,
அற்புதராஜா குரூஸ்
சற்றடே கந்தசாமி,
முருகேசு
ஆரோக்கியம்
ம, த லோறன்ஸ்
ஆரையூர் அமரன்
நவம் என என் மனதில் அவர்கள் வரிசையாக ஞாபகம் வருகின்றனர். இவர்கள் கோவில் போராட்டங்கள் நடத்தினர். கோவில்களில் பலிகொடுப்பதை எதிர்த்துப்போராடி அடி வாங்கினர். , மூடநம்பிகைகளிச் சாடிப் பேசினர். நாடகம் போட்டனர். நாடகம் எழுதினர். உரையாடினர். சமரிமைப்போராட்டம் நடத்தினர். ஒரு காலகட்ட மட்டக்கள[ப்பின் தலைமுறை அது. தூரக் கிராமமான ம்ண்டூரில் திராவிட முனேற்றக் கழகமே இருந்ததாம். அன்றைய அந்த இளைஞர்களுள் ஒருவரே நமது மாஸட்ர் சிவலிங்கம் என்பது பலரும் அறியாத ஒன்று, ஆம் அவர் ஆரம்பத்தில் ஓர் சூனாமானா பகுத்தறிவு வாதி அன்றே தமிழ் நாடு சென்று சிலகாலம் அங்கு கல்வி பயின்ற அவர் திராவிட முன்னேற்றக் கழக கருத்துக்காளால் ஈர்க்கப்பட்ட ஒரு சூனாமானாக் காரராக இருந்திருக்கிறார். அனைவரையும் சமமாக மதிக்கும் உயரிய பண்பு அவரிடம் மேலும் வளர இப்ப்குத்தறிவுச் சிந்தனைகள் மேலும் உதவின.
இன்னொரு அனுபவம்.
1956 1959 1960 களில் மட்டக்கள[ப்பில் தமிழர்சுக்க்டசியின் முக்கிய செயற்பாட்டாளர்களுள் ஓருவராக அவர் செயற்பட்டார். ஊர்வலங்களில் மூவர்ணக் கொடி தாங்கி வந்த அவர் கோலம் ஞாபகம் வருகிறது. மட்டக்களப்புக் கச்சேரியை இயங்க விடாமல் பல மாதங்களாக நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட் டத்தில் ஒரு போராளியுமானார், ஒரு மாத காலம் அப்போராட்டம் நடந்த்து கச்சேரியை இயங்க அதனை முற்றுகையிட்டிருந்த சத்தியாக் கிரகப் போராளிகள் விடவில்லை . அவர்களுள் ஒருவராக மாஸ்டர் சிவலிங்கம். 1960 களில் ஒரு இரவு நேரம் மட்டக்களப்புக் கோட்டையை வளைத்து அதனை இயங்கவிடாமல் இரவு பகல் படுத்துகிடந்த சத்தியாகிரகிகளுள் ஒருவராகக் கிடக்கிறார் நமது மாஸடர் சிவலிங்கம். இராணுவம் திடீரெனப் புகுந்து அங்கிருந்த அனைவரையும் அடித்து விரட்டுகிறது. சத்தியாக்கிரகிகள் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை அனைவருக்கும் அடி விழுகிறது . அப்போது அந்த ஆமியால் அடிவாங்கியவர்களுள் ஒருவர் நமது சிவலிங்கம் . அந்த அனுபவத்தைக்கூட ஒரு கூட்டத்தில் அவர் நகைசுவையாக இவ்விதம் பேசினார்
நடு இரவு ஆமி வந்தது தெரிந்து விட்டது நித்திரை கொள்வதுப்போல பாசாங்கு செய்தவாறு படுத்துக் கிடந்தேன் அருகில் வந்த ஆமியில் ஒருவன் துவக்கு முனையால் குத்தி எலும்புடா எலும்புடா என்று கூ.றினான் . எனது எலும்புடல் இவனுக்கு எப்படித் தெர்ந்த்து? உடலப்பார்த்து இது மனிதர் அல்ல எலும்பு எலும்பு எனப் பகிடி பண்னுகிறானோ என எண்ணினேன். வாயைச் சும்மா வைத்திராமல் எலும்புதான் ஐயா என்றேன். பளாரென எனக்கு ஓர் அறை கிடைத்த்து. வாயை மூடிக்கொண்டேன் என்று நகைச்சுவையாக கூட்டத்தில் விபரிப்பார் மாஸட்ர். எழும்புடா எனும் தமிழ்ச் சசொல்லை தமிழ் தெரியாத ஒரு ஆமிக்காரன் எலும்பு என உச்சரித்த கதையை அவர் கூறிய முறை இது.
இன்னொரு அனுபவம்
வில்லுப்பாட்டுக்கலைஞராக அவர் முகிழ்த்த்து இன்னொரு கதை. அவர் குழுவில் முழக்கம் முருகப்பா மால ராமசந்திரன் செ, குணரட்ணம் ஆகிய இளைஞர்கள் இருந்த்தாக ஞாபகம், மாஸட்ர் சிவலிங்கத்தின் வில்லுபாட்டு நடைபெறாத கோவில்களே இல்லை எனும் அளவிற்கு அன்றைய நிலை இருந்த்து. தந்தனத்தோம் என்றுசொல்லியே வில்லினில் பாட வில்லினில் பாட என அவர் வில்லுப்பாட்டை ஆரம்பிக்கும் அழகே ஒரு தனி அழகு மட்டக்களப்பில் வில்லுப்பாட்டை அறிமுகம் செய்த முதல் ஆள் அவர் என நினைக்கிறேன். அவர் வானொலி மாமா ஆகியமை இன்னொரு கதை . சிந்தாமணியில் சிறுவர் கதைகள் எழுதியமை இன்னொரு கதை. நல்ல கருத்துகளைக்கூற நகைச்சுவையை நாடகத்தை வில்லுப்பாட்டை ஊடகமாக் கொண்ட அவர் இந்த கருத்துகளை சிறுவர்களுக்கு விதைப்பதே தனது தலையாய பணியாக கண்டிருக்க வேண்டும். அதன் விளைவே அவர் கதை சொல்லும் மாமாவான கதை . தனது நாடக நடிப்பு . குரல் வளம் உடல் அசைவு கற்பனை அனைத்தும் இணைத்து அவர் குழந்தைகளுக்கு கதைசொல்வார்.
அவருக்கு ஒரு புத்தகம் மாத்திரம் போதும் அதில் விரல்களால் தட்டி குதிரை ஓட்டத்தைக் காட்டுவார். அவரது சொல்லும் ஒலியும் இணைந்து கதைக்கு ஓர் அழகுகொடுக்கும்., குரலைபப்யன் படுத்திக் குயிலாகக் கூவுவார். நாயாகக் குரைப்பார் . மாடாகக் கத்துவார். குழ்ந்தைகள் மெய் மறந்து அவர் கதைகேட்பர். எனது மனைவி சித்திரலேகா குழந்தையாக அவரிடம் தான் கதைகேட்ட காலத்தை என்னிடம் கூறியிருக்கிறார்.
அவர்களது வீட்டுக்கே வந்து அவர் கதைகூறியிருக்கிறார்.
எனது மனைவியார் தனது அனுபவத்தை என்னிடம் இவ்வாறு கூறினார்: “சிவலிங்கம் மாமா வருகிறார் என்றால் எங்களுக்கு ஆனந்தம். அவரது வரவுக்காகக் காத்திருப்போம். எமது வீட்டிலிருந்த மரக்கதிரையின் கைப்பிடியினைத் தளமாகக் கொண்டு குதிரைகளின் விரைவான குளம்பொலியினை ஒலியெழுப்பும் அவரது விரல்கள் எமக்கு அம்புலிமாமா சஞ்சிகையின் கதைகளில் விரைந்தோடுகின்ற குதிரை வீரர்களையும் அக்குதிரை களின் குளம்பொலியையும் ஞாபகப்படுத்தும்”-
பின்னாளில் மாநகரசபை அவரை தன் கீழிருந்த நூல் நிலையம் தோறும் சென்று குழந்தைகளுக்கு கதைசொல்லும் மாமாவாக அமர்த்திகொண்டது. பின்னாளில் அவர் சமய பக்தரானார். சமயசொற்பொழிவுகளுமாற்றினார். சினிமா உலகில் வடிவேலுவைக் கண்டாலே ஒரு கல கலப்பு கேட்பதுபோல மட்டக்களப்புப் பாடசாலை களில் மாஸட்ர் சிவலிங்கம் சென்றாலே ஒரு கலகலப்பு உருவாகிவிடும். மாமா என் மாணவர் அவரை வாய் நிறைய அழைக்கவுமாயினர்.
1960 களின் நடுப்பகுதியில் திரவியம் இராமச்சந்திரன் நான் மாஸட்ர் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து வின்சன்ட் மகளிர் கல்லூரியில் சில கூத்துகள் பழக்கியுமுள்ளோம். கூத்து ஆடல் பாடல்க;ளைசிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்த ஓர் கூத்துக்கலைஞரும் அவர். 950 களில் தமிழ் நாடு சென்ற அவர் கார்ட்டூன் சித்திரம் வரையும் அக்கலையைச் சாமா எனும் ் காட்டூனிஸ்ட் இடம் பயின்றார் என அறிகிறோம். அக்கால ஆனந்த விகடனை சாமாவின் நகைச்சுவைக் கார்ர்ட்டூன்கள் நிறைத்து கொண்டிருக்கும்.
இவ்வண்ணம் மிமிக்கிறி கலைஞனாக, நகைச்சுவைப்பேச்சாளனாக பகுத்தறிவு வாதியாக, அரசியல் செயற்பாட்டாளனாக, சத்தியாக்கிரகியாக, நாடக நடிகனாக, ’கூத்துக்கலைஞனாக , வில்லுப்ப்பாட்டுக் கலைஞனாக, சிறுவர்கட்கான எழுத்தாளனாக, கதைசொல்லியாக, கார்ட்டூனிஸ்டாகப் பன்முகம் காட்டியவர் மாஸ்டர் சிவலிங்கம் . அவரது இழப்பு துயரத்திற்குரியதன்று. அவர் வாழ்வு கொண்டாட்டத்திற்குரியது. அவர் வாழ்வைக் கொண்டாடுவோம். அக்கொண்டாட்டம் பல மட்டங்களில் நிகழட்டும்.
நன்றி: https://www.facebook.com/maunaguru.sinniah/posts/5026624147385066