" எங்கும் கும்மிருட்டு..... நடுநிசி..... "கி....ரீ.... ரீ... ரீ...ச்" என எங்கோ யாரோ கூரிய நகங்களால் எதையோ பிறாண்டும் சத்தம்! அச்சத்தம் காதுகளில் புகுந்து முள்ளந்தண்டை சில்லிட்டது. படுக்கையில் இருந்து துள்ளி எழுந்து...... "என்ன, 'மர்மக்கதை மன்னன்' பி.டி.சாமியின் மர்ம நாவலில் இருந்து ஒரு பக்கத்தை படிக்கிறேன் என எண்ணினீர்களோ? “ அது தான் இல்லை! ஏப்ரல் 14, 1912 இல் தன் கன்னிப் பயணத்தில் RMS டைட்டானிக் எனும் பாரிய பயணிகள் கப்பல் பனிப்பாறையுடன் உரசிய வேளையில் எழுந்த மரண ஒலி அது! அது சரி, 109 வருடங்களுக்கு பின் இந்த நனவிடை தோய்தல் எதற்காம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதை பின்னர் சொல்லட்டுமா? சரி, கதைக்கு வருவோம்.
ஏப்ரல் 10, 1912 இல் இங்கிலாந்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள செளதாம்ப்டன் எனும் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடனும் 892 மாலுமிகளுடனும் தன் கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது 46,328 தொன் எடையுள்ள டைட்டானிக். அக்காலங்களில் இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பல் என பெயர் பெற்றது.
ஏப்ரல், மே மாதங்கள் கடல் பயணங்களுக்கு பிரபலம் அல்லாததால் கப்பலின் மொத்த 2,453 பயணச்சீட்டுக்களில் பாதியே விற்பனையாகிற்று. மேலும் அந்நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேசிய நிலக்கரி ஊழியர்களின் வேலை நிறுத்தமும் பயணிகளின் பயணத்தை பின்போட வைத்தது.
கப்பலின் முதலாம் வகுப்பில் பயணம் செய்த 325 பயணிகள் ஒருவருக்கு ஒரு வழிப் பயணத்திற்கு ( இரு படுக்கை அறை ) செலுத்திய தொகை $4,350. இது இன்றய மதிப்பீட்டில் $50,000 ஐ தாண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இவர்களுக்கென ஜிம், நீச்சல் தடாகம், வாசிகசாலை, உயர்தர உணவகங்கள் உட்பட பல சொகுசு வசதிகள் இருந்தன என்றால் சும்மாவா? ஆம், கோடீஸ்வரர்களின் சொர்க்கம்தான்!
மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் தமக்கென ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவுடன் ஆமேனியா, இத்தாலி, சீரியா, சுவீடன் போன்ற நாடுகளில் இருந்து வந்த சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களே நிரம்பியிருந்தனர். இவ்வகுப்புப் பயணிகளுக்கு ஆடம்பரமான வசதிகள் இல்லாவிட்டாலும் அக்காலகட்டத்தில் இருந்த மூன்றாம் வகுப்பு வசதிகளை விட டைட்டானிக் மேலாதானதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.