நேர்காணல் பகுதி இரண்டு: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?
பதில்: நிறமும், கருவும் தான்.
கேள்வி: நிறத்தை பற்றி விளக்குவீர்களா?
பதில்: அவரது நிறங்கள் ஆழமானவை. எண்ணற்றவை. நிறங்களை அவர் தேர்வு - தெரிவு செய்வது வித்தியாசமானது. உதாரணமாக வானத்துக்கான அவரது நிறத்தின் தேர்வு படத்துக்கு படம் வேறுபடும். அதுபோலவே மரங்கள், மேகங்கள், பூக்கள், நீர் - இவை அனைத்துமே - தான் கூற வரும் பொருளுக்கேற்ப அவரது கரங்களில் - வித்தியாசப்பட்டு நிற்கும். நிறங்களை அவரே ஆக்கி கொள்வதாகவும் ஒரு கதை உண்டு. பொதுவில் இது ஓவியர்களுக்கு நடக்கும் ஒன்றே. தங்களுக்கு தேவையான நிறங்களை அவர்களே ஆக்கி கொள்வார்கள். அது, உண்மையாக இருக்கலாம் - இவர் ஆக்கியுள்ள நிறங்களை பார்க்கும் போது – கபில வானம், நீல வானம், செம்மஞ்சள் வானம், எத்தனை வானங்கள். அத்தனையும் வித்தியாச வித்தியாசமான அதிர்வுகளை ஏற்படுத்துபவை.
கேள்வி: கவிஞர் ஜெயபாலன் அவர்கள், வான்கோவின், தூரிகையின் அசைவு குறித்து பேசும் பொழுது, தீப்பற்றியெறியும் காட்சியை போல அவரது தூரிகையின் வீச்சு அவ்வப்போது இடம்பெற்றுள்ளது என குறித்தார். அவரது தூரிகை வீச்சைப் பற்றி (Brush strokes) என்ன கூறுவீர்கள்?
பதில்: அவரது Brush strokes பற்றி என்னால் கூறவே முடியாது. என்னால் மாத்திரம் அல்ல. யாராலும்தான் என்றே கூறுவேன். ஏனென்றால் அப்படி அவை இயங்குபவை. தான் எடுக்கும் பொருளுக்கேற்ப, வண்ணங்களை மாத்திரமல்ல தனது தூரிகையையும் வித்தியாச வித்தியாசமாக பாவித்த மகா கலைஞன் அவன். உதாரணமாக ஒரு மூன்றாம் பரிணாமத்தை பெற்றுக் கொள்ள அவர் சமயங்களில் Pallet Knife பாவித்துள்ளதாகவே படுகின்றது. அதாவது, தான் கூறவரும் பாவத்திற்கு, ஓவியத்தின் செய்திக்கு – தூரிகை அவருக்கு போதாமல் போகின்றது.