இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்!
என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிஞர்களில், எழுத்தாளர்களில் முதலிடத்திருப்பவர் மகாகவி பாரதியார். எப்பொழுதும் என் மேசையில் இவரது கவிதைகள் நூலிருக்கும். என் பால்யப்பருவத்திலேயே எனக்கு பாரதியார் அறிமுகமானதுக்குக் காரணம் என் தந்தையாரே. அப்பொழுதே பாரதியாரின் முழுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பினை வாங்கித்தந்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை பாரதியாரின் கவிதைகள் எனக்குப் பல் வகைகளிலும் துணையாக விளங்கி வருகின்றன.
பாரதியாரின் எழுத்திலுள்ள எளிமை, அதன் ஆழத்திலுள்ள சிந்தனைத்தெளிவு, சோர்ந்திருக்கும் உள்ளங்களுக்குத் துடிப்பினை, நம்பிக்கையினை ஏற்படுத்தும் நேர்மறைப்போக்கு, பல்வகைச் சமூக, அரசியல், பொருளியல் அநீதிகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் புரட்சிகரத்தன்மை, இருப்பு பற்றிய சிந்தனைகள் , காதல், அன்பு போன்ற மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
பாரதி எப்பொழுதும் என் வாழ்க்கையின் வழிகாட்டியாகவே இருந்து வருகின்றான். அவன் எழுத்துகளற்ற இருப்பினை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவனது எழுத்துகள் என் உணர்வில் பின்னிப் பிணைந்துள்ளன. எனக்குப் பிடித்த அவனது கவிதைகளில் இரண்டு:
இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடியின்புற் றிருந்து வாழ்வீர.
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
உலகத்தை நோக்கி வினவுதல்!
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.