- எழுத்தாளர் நடேசன் -
எழுத்தாளர் நடேசன் அவர்கள் தனது முகநூற் பதிவொன்றில் சிறுகதை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருக்கினறார்:
" தற்போது இலங்கை பத்திரிகைகளில் சிறுகதைகள் பக்கத்துக்கேற்ப குறைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறது . சிறு கதைகளில் பாத்திரம் , சம்பவம் முழுமையாக வரவேண்டும். சம்பவங்கள் சுரியலில் வருவதுபோல் இலக்கியத்தில் தற்செயலாக நடக்கமுடியாது . அதேபோல் பாத்திரத்தின் செயலுக்கு காரணம் தேவை . ஆனால் 800 வார்த்தைகளில் எழுதுவது அம்மாவின் சீலையில் பாவாடை தைப்பது போன்ற விடயமாகி விட்டது . கட்டுரை ,நாவல் வறண்டு போய் விட்ட நிலையில் சிறுகதைகளும் சிதைந்துவிடுமோ என்ற பயத்தில் எழுதுகிறேன்.' விக்கிபீடியாவின் சிறுகதை பற்றிய கருத்துகளையொட்டி அவர் கருத்துகளைக் கூறியுள்ளார்.
என்னைப்பொறுத்தவரையில் சிறுகதையொன்றுக்கு இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கூற முடியாது. ஒரு பிரதேசம் பற்றிய விபரிப்பு கூட சிறுகதையாக இருக்க முடியும். ஒரு சம்பவம் தாக்கிய உணர்வைக் கூட சிறுகதையொன்று விபரிக்கலாம். இந்த வரைவிலக்கணத்தின்படி பார்த்தால் புதுமைபித்தனின் மிகச்சிறந்த சிறுகதைகளிலொன்றாகக் கருதப்படும் 'பொன்னகரம்' ஒரு சிறுகதையேயல்ல. அது ஓர் இருபக்கச் சிறுகதை. மாநகரின் ஒரு பகுதி பற்றிய விவரணச் சித்திரம். அதில் பாத்திரங்கள் முழுமையாக வார்க்கப்படவில்லை. ஆனால் அப்பகுதி பற்றி, வாழ்க்கை முறைகளைப்பற்றி கடுமையாக விமர்சிக்கின்றது. 800 சொற்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் சொற்களைக் கொண்ட சிறுகதை 'பொன்னகரம்'
உலகின் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் நிச்சயம் நீங்கள் ஓரிரு பக்கச் சிறுகதைகளைக் காண முடியும். இச்சமயத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' நாவலுக்கான முடிவுரையில் நாவல், சிறுகதை பற்றிக் கூறிய கருத்துகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.
"இந்த இடத்தில் நாவலுக்கும் சிறு கதைக்கும் இருக்கும் வேற்றுமையைப் பற்றிச் சில வார்த்தைகள் நான் கூறவிருக்கிறேன். இந்த இரு இலக்கிய உருவங்களுக்கும் உள்ள வேற்றுமை கதை அமைப்பிலே மட்டுமல்ல, சொல்லும் முறையிலுமிருக்கிறது. சிறுகதை வேகமாக ஒரே மூச்சில் நிலத்தை நோக்கிக் குதிக்கும் நீர் வீழ்ச்சியைப் போன்றது. மின்னலின் வேகம் அதிலிருக்கும். ஆனால் நாவலோ ஓடுகிறதா, ஓடாமல் நிற்கிறதா என்று எடுத்த எடுப்பில் கூற முடியாத படி பெரு நதியின் மந்தமான அசைவில் செல்ல வேண்டும். கங்கை, கழனி, காவேரி போல் அசைய வேண்டும். குதிரை வண்டி போல் வேகமாகச் செல்லாது கோவிற்தண்டிகை போல் ஆடி அசைந்து வர வேண்டும்."