நூல்: குன்றிலிருந்து கோட்டைக்கு... | ஆசிரியர் : எம். வாமதேவன்
வகை : சுயசரிதை | வெளியீடு : 2020 | பக்கங்கள்: 251
பதிப்பகம்: குமரன் பதிப்பகம்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்காக 2020/2021ல் நடத்திய போட்டியில் கட்டுரைப் பிரிவில் பரிசுபெற்றது இந்நூல். மலையகத்தில் பிறந்து அறிவாற்றல், இலக்கியம், சமூக ஈடுபாடு, அரச நிர்வாகம் என பல்வேறு துறைகளில் பல ஏற்றங்களையும் உச்சங்களையும் தொட்ட நூலாசிரியர் எம். வாமதேவன் எழுதியுள்ள நூலின் அனுபவப் பகிர்வு இது.
தம் துறையில் இமயம் தொட்ட பல பேரின மற்றும் வட-கிழக்கு மாந்தர்கள் இது போன்ற நூல்களை கடந்த காலங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டது நாம் அறிந்ததே. ஆனால் மலையகத்தில், ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில், பிறந்து தன் கடின உழைப்பாலும் கல்வித் தகமைகளாலும் படிப்படியாக முன்னேறி சாதனைகள் பல படைத்த ஒரு சாமானியனின் கதை நமக்கு புதிது! அந்த சாமானியன்தான் இந்நூலின் ஆசிரியரான திரு. எம். வாமதேவன். இவர் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் எதிர்நோக்கிய சவால்களையும் அதை அவர் எப்படி எதிர்கொண்டு வாழ்வின் ஏணிப்படிகளில் ஏறினார் என்பதை இந் நூலில் படம் பிடித்து காட்டுகிறார்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல சாதனையாளர்களின் சரிதைகளைப் படிக்கும் போது 'நான் வகுப்பில் என்றும் முதலாவதாகவே வருவேன்', ஓட்டப் போட்டியிலும் பின்னர் உயர்கல்வியிலும் பல தங்கம் பதக்கங்களைப் பெற்றேன்' என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். அப்போது 'வகுப்பில் இரண்டாவதாக வந்து வெண்கலப் பதக்கம் பெற்றவர்கள் எல்லாம் எங்கே?' என்ற கேள்விக்கு பதில் தருகிறார் வாமதேவன் எனும் தன்னடக்கச்சிற்பி. கடும் உழைப்பாலும் தன் காரியாலத்திற்கூடாக உயர்கல்வி மற்றும் சிறப்புப் பயிற்சிகளை பெற்றும் வாழ்வில் முன்னேற முடியும் என சான்று பகிர்கிறார். வாழ்வில் வெற்றித்தடம் பதிக்க வாயில் வெள்ளிக்கரண்டியுடன் உத்தரிக்கத் தேவையில்லை என்பதை சொல்லிப் போகிறது இந்நூல்!
'எங்கட காலத்தில.....' என பழங்கதை பேசி, திண்ணைப் பேச்சுக்கு தூண்டில் போடாமல் தான் வாழ்வில் உயர்ந்த கதை சொல்லி இளம் சமுதாயத்திற்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் துலங்குகிறார் ஆசிரியர்.
நூலின் சிறப்பிற்கு அகங்காரம் இல்லாத நடை, தன்னடக்கமான குதூகலிப்பு, ஆச்சரீயக்குறிகளை அள்ளித்தெளித்து ஆரவாரம் தேடாத உண்மைத்தனம் என அடுக்கிக்கொண்ட போகலாம்.
இந் நூலில் தோட்டத்து லயன் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்லாமல் 1950களில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியினரின் நாடற்றவர்கள் என்ற நிலை பற்றிய அரசியல் பின்னணிகளையும் தொட்டுச் செல்கிறார் ஆசிரியர். ஐக்கிய தொழிலாளர் காங்கிரசினதும் மற்ற மலையக தொழிற்சங்க தோற்றங்களையும் இலங்கை - இந்திய தொடர்புகளையும் விவரிக்கின்றன சில அத்தியாயங்கள்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் 1960 களில் பொருளியல் கற்கை நெறியில் பயின்று பின் 1964ம் ஆண்டு ஒரு தோட்டப் பாடசாலையில் ஆசிரியராக, ஒரு அரசு இயந்திரத்தின் சில்லாக மாறுகிறார். அன்று சுழலத்தொடங்கிய அச்சில்லு 2019ம் ஆண்டு இலங்கை ஐனாதிபதி மைத்திரிப்பால சிரிசேனவிடம் இருந்து "ஸ்ரீலங்கா திலக" எனும் தேசிய கெளரவ விருதினைப் பெறும் பரிமாணத்திற்கு வளர்ந்து இந்நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.
1972ம் ஆண்டு இலங்கை ஒரு குடியரசாக மாறியதும் அரச திணைக்கள வெற்றிடங்களுக்கு தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பில் இருந்து அரசியல் ரீதியிலான நியமனங்களுக்கு முன்னுரிமை அளிக்க ஆரம்பித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தும் 75 ஆண்டுகளாகியும் கூட இன்றும் 'சிவில் சேர்விஸ்' எனும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற கட்டமைப்பையே சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். பரிதாபம்.... இலங்கை அதே 'சிவில் ' நிர்வாகத்தை களைந்தெறிந்தது "throwing the baby out with the bathwater" எனும் முதுமொழிக்கு உதாரண புருஷனானார்கள்.
இலங்கையின் அரச சேவையின் கட்டமைப்புகளும் ஒருங்கு முறைகளும் சிக்கலான ஆனால் ஒரு பிரமாண்டமான ராட்சத அரச இயந்திரத்தின் தூண்கள். நாட்டின் திட்டமிடல், பொருளாதார மேம்பாடு, சட்டம், நீதி, சர்வதேச உறவு முறை போன்ற மிக முக்கிய அசையும் பிஸ்டன்களையும் சுழலும் சில்லுகளையும் தன்னகத்தே கொண்டு நாட்டை அதன் எதிர்காலத்தினுள் இழுத்துச் செல்லுகிறது இந்த இயங்திரம். இதன் சிக்கலான செயல்பாடுகள் பலவற்றை நாம் அறித்ததில்லை.
அரசு இயந்திரம் என்றதும் நமக்கு 50களில் வெளிவந்த "கட கட லொட லொட வண்டி, வண்டிக்காரனும் நொண்டி" என்ற சினிமாப் பாடல் ஏனோ நினைவிற்கு வருவதுண்டு. ஆனால் இந்நூல் அந்த எண்ணத்தை மாற்றிப்போட்டு பல தளங்களில் அரசு சார்ந்த நிறுவனங்களின் நுணுக்கமான அறிவு பூர்வமான வினைத்திறனுள்ள செயல்பாடுகளை இலகு தமிழில் வாசகனுக்கு எடுத்துரைக்கிறது. இது பல வாசகர்களுக்கு ஒரு புது அனுபவம். இதுவும் இந்நூலின் ஒரு சிறப்பம்சம் என்பேன்.
ஆசிரியர் UNIDO, UNDP, ESCAP போன்ற அமைப்புகளின் இலங்கை பிரதிநிதியாக பல வேறு நாடுகளுக்கு உத்தியேக பூர்வ விஜயம்களை மேற்கொண்ட போது நிகழ்ந்த சுவாரசியமான பல சம்பவங்கள் வாசிப்பனுபவத்தை மேலும் மெருகூட்டுகின்றன. ஆசிரியர் நொராட் ஆய்வுத் திட்டத்தில் கடமையாற்றிய போது 1989ல் வெளியிட்ட "தமிழ் நாட்டில் இலங்கை தாயகம் திரும்பியோர் புனர்வாழ்வும் ஒருங்கிணைப்பும்" (Sri Lankan Repatriates in Tamil Nadu - A Critical Appraisal) எனும் இவரது ஆங்கில கட்டுரைத் தொகுதி இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் முக்கியமானதோன்றாகும்.
டெல்லியில் மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடனான சந்திப்பு, ஜெனிவாவில் UNCTAD செயலாளர் நாயகம் கலாநிதி காமினி கொரியா சந்திப்பு, அமைச்சர் சிறில் மத்தியூவினுடனான முறுகல், அமைச்சர் செனட்டர் எம். திருச்செல்வம் சந்திப்பும் தமிழரசுக் கட்சியின் தயவு, தமிழ் துறை போரசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டல், தமிழ் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் நிதி உதவி என பல தலைப்புகளை நனவிடை தோய்கிறார் ஆசிரியர் . கொழும்பில் திட்டமிடல் துறையில் பணியாற்றி இமயம் தொட்ட இந்த அரச ஊழியரின் வாழ்க்கைப் பயணம் மிகச் சுவாரசியமானது. பிரட்மன் வீரக்கோன், தேவநேசன் நேசையா போன்ற அரசியல் பின்புலமற்ற கட்சி அரசியல் கடந்த கனவான்களின் பட்டியலில் வாமதேவனின் பெயரும் ஒரு நாள் ஒட்டிக்கொள்ளும் என்பது உண்மை.
1966 நவம்பரில் கொட்டகலையில் நிகழ்ந்த பெரும் மண்சரிவில் தமது மூன்று தங்கைகளையும் தந்தையையும் பறிகொடுத்த ஆசிரியர் 1983 இனக்கலவரத்தில் வத்தளையில் வசித்த வீட்டையும் சொத்துக்களையும் தீயில் இழந்தார். இச் சோகக் சம்பவங்களில் இருந்து மீண்டு தன் வாழ்வைக் கட்டியெழுப்பிய கதையை பல பக்கங்களில் விளக்குகிறார். ஆனால் அவை ஒரு ஒப்பாரியாக இல்லாமல் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவையின் சிலிர்ப்புடன் எதிர்காலத்தை ஒரு புது நம்பிக்கையுடன் நோக்கும் மானுடனை எமக்கு அறிமுகப்படுத்துகிறது.
ஆசிரியருக்கும் மலையக எழுத்துக ஆளுமைகளுடனான தொடர்பையும் தொட்டுச் செல்கிறது இந்நூல். 1964ம் ஆண்டு வீரகேசரி நடாத்திய மலையக சிச கதைப் போட்டியில் முதல் பரிசை தெளிவத்தை ஜோசப்பும் இரண்டாவது பரிசை நூல் ஆசிரியரும் பெற்றதாய் அறிகிறோம். தெளிவத்தை ஜோசப்பின் அறிமுகம் ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களான எஸ்.பொ, இளம்பிறை ரகுமான், கோகிலம் சுப்பையா (தூரத்துப் பச்சை) போன்றோருடனான உறவுக்கு வித்திட்டது என்கிறார்.
ஏன் இந்நூல் மாறுபட்டது?:
1. ஒரு மலையக இளைஞன் எதிர்நோக்கும் சவால்களும் இன்னல்களும் வடகிழக்கில் வாழும் சம வயது மனிதனை விட வேறுபட்டது. இந்நூல் இதை மிக துல்லியமாக எடுத்துக் கூறுவது மட்டுமல்லாமல் அச்சவால்களை எவ்வாறு அவன் எதிர்கொண்டு வெற்றிகொண்டான் என்றும் கூறுகிறது.
2. மலையக அரசியல் கட்டமைப்பையும் தொழில் சங்க பின்னணியில் தொழிலாளிகளின் வாழ்க்கை முறைகளையும் முரண்பாடுகளையும் 'வெளியாருக்கு' விளக்குகிறது இந்நூல். இது பல மட்டங்களில் அறியப்பாடத ஒன்று. "மலையகச் செய்திகள்" எனும் பக்கத்தை பத்திரிகைகளில் புரட்டி கடந்து போவோர் பலர். கடந்து போனதை கட்டுரையாக்கி தந்துள்ள இந்நூல் ஒரு மலையக சாமானியனின் கைநூல் எனலாம்.
3. அரசு சார்ந்த நிறுவனங்களின் structures மற்றும் அங்கு நிலவும் red tape போன்றவற்றையும் அவை எவ்வாறு ஒரு ஊழியனின் முன்னேற்றத்தில் தடைக்கற்களாக நிற்கின்றன என பல உதாரணங்களுடன் விளக்கிறார் ஆசிரியர். இந்த நிறுவனங்களுடன் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பும் எதிர்கால சமுதாயத்திற்கு ஒரு instruction manual ஆக உருவெடுக்கிறது இந்நூல்.
4. ஐ.நா சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றில் சந்தித்த சுவாரசியமான உயர அதிகாரிகள், அக்கூட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் பட்டியல் போடுகிறது இந் நூல். இந்நிறுவனங்களின் 'எஞ்சின் அறையின்' செயல்பாடு கட்டமைப்புக்களை நேரில் கண்ட ஒருவரின் வாக்குமூலம் என்றும் பயனுள்ளதே. எனவே சர்வதேச நிறுவனங்களில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் இளம் சமுதாயத்தினருக்கு இது ஒரு சிறந்த கைநூல் என்பேன்.
5. காப்பரேட் கம்பனிகள் மட்டுமே சுவாரசியமான வேலைத்தளங்கள் எனும் ஒரு தவறான நம்பிக்கையை தகர்க்கிறது இந்நூல். பட்டம் எந்தக் காற்றிலும் பறக்கும் என்பதற்கு இந்நூல் சான்று.
6. இந்நூலின் ஆசிரியர் ஒரு சாமானிய குடும்பத்தில் இருந்து கடும் ஊழப்பினாலும் ஒரு இலக்கை நோக்கிய பயணத்தாலும் வாழ்வில் முன்னேறியவர். ஆலோசனை என்ற பெயரில் வார்த்தை ஜோடனைகளில் பந்தி நகர்த்தாமல் " என் வாழ்வைப் பார்" என தன்னடக்கத்துடன் எழுதிச் செல்கிறார். இதுவும் இந்நூலின் வெற்றியும் சிறப்பம்சமும் என்பேன்.
மலையகத்தில் இருந்து விலங்குடைத்து இமயம் தொட்ட 'ஸ்பாட்டன்கள்' மிகச் சிலரே. இவர்களில் எத்தனை பேர் தம் தடங்களை நூல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார்கள் என்பது கேள்விக்குறி. அக்குறையை நிமிர்த்தி செய்கிறது இந்நூல்.
தற்கால இளம் சமுதாயம் role modelகளை கண்டுகொள்வதில்லை. காந்தியிலும் கறை காணும் சமூகம். எனவே இது போன்ற நூல்களில் உள்ள between the lines வாழ்க்கை அறிவுரைகள் அவர்களுக்கு ஈர்ப்புடையதாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. "தம்பி, இதைப் படித்துப் பார்" என நாம் இவர்களிடம் கூற இது போன்ற நூல்கள் நிச்சயம் மேலும் வர வேண்டும்......அவை ஆதரிக்கப்பட வேண்டும்!
இதுவே அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இந் நூலை கெளரவித்து கொண்டாட ஒரே காரணம் என்பேன்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.