மானுட நேயப் போராளியாக, ஒரு காலகட்டத்தின் வரலாற்றுக் கடமையினைச் செய்யப் பலரும் அச்சமுற்றிந்ருந்த நிலையில் துணிந்து செயலாற்றி, அதற்காகத் தன்னுயிரை ஈந்த ராஜனி திரணகமவின் நினைவு தினம் செப்டெம்பர் 21. இலங்கைத் தமிழரின் ஆயுதப் போராட்டக் காலகத்தில் இலங்கை, இந்திய படைகளால், தமிழ் அமைப்புகளால் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல் கொடுத்ததுடன் அவற்றை ஆவணப்படுத்துவதில் சக பேராசிரியர்களான ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம் & கே.ஶ்ரீதரன் ஆகியோருடன் இனைந்து தன் பங்களிப்பை நல்கியவர். அந்த ஆவணமே 'முறிந்த பனை' - https://noolaham.net/project/11/1001/1001.pdf -. அவ்வகையில் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மானுடநேயப்போராளியாக , மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒருவராக , அதற்காகத் தன் வாழ்வைக்கொடுத்த ஒருவராக வரலாறு அவரை என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும்.
மண்ணோ யுத்த பூமியாக,
மரண பூமியாகக் கிடந்தது.
மண்ணின் அச்சூழல் உன்
மனத்தைத் தளரவிடவில்லை.
மக்கள்தம் உரிமைகளுக்காய்
முழங்குவதினின்றும் நீ
மறைந்தோடிடவில்லை.
மண்ணின் மைந்தனொருவானலுன்
முடிவுமிருக்குமென்று ஆரூடம் பகன்றாய்.
மனத்தால் நீ நேசித்த
மருத்துவபீடத்தின் முன்னால் உன்
மரணம் நிகழ்ந்தது தீராத்துயர்.
மண்ணில் குருதி வழிய , நீ
மடிந்து, குடங்கிக் கிடந்த காட்சி
மனத்தில் தோன்றுகையில்
மனது வலிக்கின்றது.
மண்ணின் மகள் நீ.
மண்ணில் வாழ்ந்து இம்
மண்ணுக்காய் மடிந்த!
மண்ணின் மகள் நீ.
மண்ணில் வாடா மலரென என்றும்
மணந்திருப்பாய். மக்கள்தம் மனங்களில்
மலர்ந்திருப்பாய்!