- கவிஞர் ஷெல்லிதாசனை (பே.கனகரத்தினம்) முற்போக்குக் கவிஞர்களிலொருவராகவும், மெல்லிசைப் பாடலாசிரியர்களில் ஒருவராகவும் இனங்காண்பார் கலாநிதி செ.யோகராசா அவர்கள். இங்கு கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்கள் “அம்மாவுக்குப் பிடித்த கனி” கவிதைத்தொகுப்பின் மூலம் அவரை சிறந்த குழந்தைக்கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காண்கின்றார். - பதிவுகள் -
அகவுலகில் ஜனித்த கவிதையை புறஉலகில் எழுத்து வடிவம் பெற்ற ஒரு கவிதையாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மொழியின் மீது இயங்கும் செய்நேர்த்தி கவிஞனுக்குக் கைவரவேண்டும்.” என்பார் இந்திரன்.
சிறுவர் இலக்கியத்தின் மீதான ஈடுபாடு கடந்த சில வருடங்களில் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. சிறுவர் பாடல்கள், சிறுவர் கவிதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் கட்டுரைகள், மட்டுமன்றி சிறுவர் அரங்கச் செயற்பாடுகளும் காணொளி வடிவிலான கோப்புகளும் தற்காலத்தில் சிறுவர் இலக்கியத்தின் மீதான தேக்கத்தை உடைப்பனவாக அமைந்துள்ளன. இவை வரவேற்க வேண்டியவை ஆகும். அரச திணைக்களங்களும் சமூகநலத் தொண்டு நிறுவனங்களும் சிறுவர்களின் உடல் - உள ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சிறுவர்களுக்காகப் பெரியவர்கள் எழுதுகின்ற நிலைமையோடு சிறுவர்களே தங்கள் அனுபவங்களையும் வெளிப்பாடுகளையும் முன்வைப்பதற்குரிய களங்களும் வாய்ப்புக்களும் சமகாலத்தில் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் இலக்கிய முயற்சிகளில் சிறுவர் பாடல்களை முதன்மையாகக் குறிப்பிடலாம்.
சிறுவர் இலக்கியத்தில் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஷெல்லிதாசனின் புதிய தொகுப்பான “அம்மாவுக்குப் பிடித்த கனி” சிறுவர்களின் மனவுலகில் சஞ்சாரம் செய்யும் பாடல்களாக அமைந்துள்ளன. ஷெல்லிதாசன் ஏற்கெனவே கவிதை சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். சமூகத்தின் அக்கறைகள் குறித்து மிகுந்த கரிசனையுடன் தனது படைப்புக்களையும் தந்திருக்கிறார். இவ்வகையில், தொகுப்புக் குறித்து சில வார்த்தைகளைப் பதிவு செய்யலாம்.
“கவிதையானது கவிதை இன்பத்துடன் அதையும் கடந்து வாழ்க்கை மாறுதல்களையும் நமக்குத் தரவேண்டும். இவ்விரண்டு விளைவுகளை உண்டுபண்ணாத கவிதைகள் கவிதைகளே இல்லையென சுலபமாகச் சொல்லிவிடலாம்.” என்கிறார் டீ.எஸ் எலியட். இத்தொகுப்பிலுள்ள ஷெல்லிதாசனின் சிறுவர்களுக்கான இக்கவிதைகள் இசையுடன் பாடத்தக்கனவாக அமையும்போது இன்பமூட்டுவனவாகவும் அதற்கும் அப்பால் சிறுவர்களுக்கு மனத்தில் ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களைப் பிரதிபலிப்பனவாகவும் அமைந்துள்ளன.
சிறுவரின் மகிழ்ச்சி, விளையாட்டு, இயற்கை, ஒழுக்கம், உறவுகள் என்று இத்தொகுப்பின் பாடுபொருள்களை நோக்கலாம்.
சிறுவர்களின் மன ஆற்றலை மேம்படுத்தும் பாடல்கள் என்ற வகையில் நாளைய சந்ததி நாம், தம்பி போவதெங்கே, முன்னோக்கிப் பாயும் நதிகள், அப்பா தந்த அழகுப்பொம்மை, மலர்களின் மைந்தர் நாம், நாளைய உலகம் நமதாகும், மின்னி மின்னிப் பூச்சி அண்ணா, பச்சைக் கிளியாய் மாற ஆசை, நமது கையில் நம் வாழ்வு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
“தம்பி போவதெங்கே” என்ற கவிதையில்
“ புள்ளிப் புள்ளி மான்குட்டி- நீ
துள்ளித் துள்ளிப் போவதெங்கே
புல்லைத் தேடி உண்பதற்கே – நான்
புல்வெளி நோக்கிப் போகின்றேன்.”
என்ற வரிகளில் வரும் எளிமையும் காட்சிப்படிமமும் சிறுவர்களை இலகுவில் ஈர்க்கக்கூடியவை. இப்பாடல்களில் வரும் சொற்கள் பிள்ளைகளின் வாழ்நிலைச் சூழலுக்கு நெருக்கமாக அமைகின்றபோது அவர்களின் மனத்தில் படம்போல் பதிந்து விடுகின்றன. இன்றுங்கூட வேந்தனாரின் “காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா” போன்ற வரிகள் நிலைத்துவிட்டமைக்கு அப்பாடலின் சொற்களும் அந்நியமில்லாத காட்சிப் படிமமுமே காரணமாக அமைவதை நாங்கள் அறிவோம்.
இவ்வாறு, சிறுவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மேற்காட்டிய பாடல்களில் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்களையும் சொல்லுகின்றார். ஓடும் நதிபோல் முன்னோக்கி நீ ஓடிக்கொண்டேயிரு என்று சிறுவர்களை உற்சாகப்படுத்துகின்றார். அவர்களுக்கு இயல்பாகவே விருப்பமான; பொம்மைகள், மின்மினிப் பூச்சிகள், பச்சைக் கிளிகள், ரோஜாப் பூக்கள் பற்றியெல்லாம் அழகாகப் பாடியிருக்கிறார்.
“பச்சைக்கிளியாய் மாறவும் ஆசை
பறவைகள் போலப் பறக்கவும் ஆசை
கிக்கீ என்று கத்தவும் ஆசை
கிளைகளில் மரங்களில் வசிக்கவும் ஆசை”
என்று “பச்சைக்கிளியாய் மாற ஆசை” என்ற கவிதையில் சிறுவர்களின் இயல்பான ஆசைகளைப் பாடியிருக்கிறார்.
இயற்கை தொடர்பானவற்றைப் பாடல்களில் வெளிப்படுத்தும்போது காற்றில் ஆடும் றோசாப்பூ, உலகாளும் ஆதவன், மாரி மழை பொழியுது, உப்பாய்க் கரைகிறேன் நான், வான் நோக்கி வளரட்டும் வடலிகள், மரம் தந்த இயற்கை, ஆல விருட்சம் ஆகிய பாடல்களில் எம்மைச் சூழ நிறைந்திருக்கும் இயற்கையின் வெளிகளை அழகாகக் காட்டுகிறார்.
“காய்ந்து கிடந்த பூமியில்
கனத்த மழையும் பொழியுது
பாய்ந்து வெள்ளம் புரளுது
பசுமை எங்கும் தவளுது”
எனப் பாடுகிறார். மழை பெய்வதும் அதன் காரணமாகப் பசுமை தவழ்வதும் மட்டுமல்லாமல் பனையின் நன்மைகள், மரங்களைப் போற்றுதல், படைப்பாற்றலின் அதிசயம் ஆகியவற்றையும் பாடுகிறார்.
சிறுவர்கள் தம் உளவளர்ச்சிக்கு ஏற்ப அறிவியலையும் கற்றுக் கொள்கின்றனர். இதனை வெளிப்படுத்துமாற்போல் “உலகாளும் ஆதவன்” என்ற கவிதையில் சூரியனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றிய அறிவியற் தகவலையும் பொதித்து வைத்துள்ளார்.
“கடல்நீரைக் கருமுகிலாக்கி
மழையெனத் தருவது நீதானே
கனியொடு காயும் கதிர்மணி உணவும்
விளைவதும் உனது கதிராலே”
என்ற பாடலில் ‘கதிர்’ என்ற சொல்லை இருவேறு பொருள் தரக்கூடியதாக எடுத்தாண்டுள்ளார். இதனூடாக பிள்ளைகள் புதிய சொற்களை ஆக்கிக் கொள்ளவும் ஒரு சொல்லின் வேறுபட்ட பொருளை அறிந்து கற்றுக் கொள்ளவும் பழகுகின்றனர்.
- கவிஞர் ஷெல்லிதாசன் -
பிள்ளைகளின் ஆளுமையை வளர்ப்பதில் ஒழுக்கம் முக்கிய பங்காற்றுகிறது. நன்மைகளை அறிந்து அவற்றின் வழி ஒழுகவும் அல்லவற்றை விலக்கவும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறோம். அவ்வாறான நல்வழி காட்டும் பாடல்களையும் இத்தொகுப்பில் கவிஞர் எழுதியுள்ளார்.
உந்துருளி அண்ணா, எண்ணம் நல்லது வேண்டும், நல்லவை செய்து நாம் வாழ்வோம், அக்காவுக்கு ஓர் அறிவுரை, நல்லது வேண்டும். நல்லதொரு எதிர்காலம், ஒற்றுமைக்கு ஒரு பறவை, வெள்ளைப் பிரம்பை விழியாக்கு, வெற்றி நிச்சயம் முதலான பாடல்கள் இவ்வாறானவை.
நல்லவை செய்து நாம் வாழ்வோம் என்ற பாடலில்
“குற்றம் சொல்லி வாழாதே
குறைகள் சொல்லித் திரியாதே
நல்லவை செய்து நீ வாழ்ந்தால்
நாளைய உலகம் உனதாகும்”
என ஆத்திசூடி ஒளவையின் மொழிகள் போல் மிக எளிமையாகச் சொல்கிறார். துவிச்சக்கர வண்டி ஓட்டும்போது கவனித்து ஓடவேண்டும், காக்கையைப் போல ஒற்றுமையாக வாழவேண்டும், பார்வை இழந்தவர்களுக்கு பக்கத்துணையாக இருக்கவேண்டும். வெற்றி தோல்விகளுக்கான காரணத்தை அறிந்து செயற்படவேண்டும், பெரியோர் சொற்கேட்டு நல்லவர்களாக வாழவேண்டும் முதலானவற்றைக் கிளிப்பிள்ளை போல அழகாகச் சொல்கிறார்.
நல்லது வேண்டும் என்ற பாடலிலும்
“அன்புதான் வேண்டும் எங்களுக்கு – தம்பி
அடிதடி வேண்டாம் எங்களுக்கு.
பண்புதான் வேண்டும் எங்களுக்கு – தம்பி
பகைமைகள் வேண்டாம் எங்களுக்கு”
என்ற வரிகளின் ஊடாக, இன்று எம்மைச் சூழ இருக்கும் ஒருபாலார் நச்சு விதைகளை இளமையிலேயே பிள்ளைகளுக்கு விதைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் அழகான நற்கனிகளைத் தரக்கூடிய விதைகளை இப்பாடல்களில் கவிஞர் ஷெல்லிதாசன் விதைத்துச் செல்வது வரவேற்கத் தக்கதே.
உறவுகள் மற்றும் பெரியோர்கள் பற்றியும் பாடியிருக்கிறார். தெய்வம் எங்கள் பாட்டியம்மா, அம்மாவுக்குப் பிடித்த கனிகள், பாட்டனும் பேரனும், பாட்டா சொன்ன கதை, வாசிப்பால் வந்த வரம், தவளும் நிலவே வா முதலானவற்றில் நெருக்கமான உறவுகள் பற்றி பண்பாட்டுடன் கூடிய பாடல்களைத் தந்துள்ளார். அன்பு, பண்பு, மேன்மை முதலானவை அவற்றில் வெளிப்படுகின்றன.
“நாமுண்ட பின்னாலே தானுண்டு
நமக்காக வாழ்கின்ற பாட்டியம்மா
நோய்கண்டு பாயில் படுத்துவிட்டால்
நூறு நேர்த்தி வைத்துவிடும் பாட்டியம்மா”
என்று தெய்வம் எங்கள் பாட்டியம்மா பாடலிலும்
“குறும்புத் தனம் செய்ய மாட்டேன் அப்பப்பா
குறுக்கே நானும் ஓட மாட்டேன் அப்பப்பா
சின்னப் பிள்ளை என்று சொல்லி அப்பப்பா
சிறையில் பூட்டி வைக்கலாமோ அப்பப்பா”
என பாட்டனும் பேரனும் என்ற பாடலில் பாடுகிறார்.
“அம்மாவுக்குப் பிடித்த கனி” என்ற பாடலில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, அப்பா, மாமா, தாத்தா,பாட்டி ஆகியோருக்குப் பிடித்த கனிகள் பற்றி அன்பு ததும்ப வெளிப்படுத்துகிறார். அம்மாவுக்குப் பிடித்த கனிகள் அன்புச் செல்வங்களே எனும்போது தாயன்பின் உச்சம் வெளிப்படுகிறது.
“ வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
வித்தைகள் ஆயிரம் பயிலென்றார்
ஊருக் கெல்லாம் பொதுவென்றான்
உதய ஞாயிறு போலெழுந்தான்”
என நாம் போற்ற வேண்டிய பெரியோர்களில் ஒருவராக பாரதியை அறிமுகப்படுத்தும் அழகு தனியானது. இவை மாத்திரமன்றி பிள்ளைகள் தாம் வாழும் சமூகம் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக மதுபோதையால் குடும்பங்களுக்கு ஏற்படும் கெடுதிகளை பெருங்குடி மகனின் பிள்ளைகள் பாடலிலும் தெருவோரத் தின்பண்டங்களைச் சாப்பிடாதே என்றும், மருந்தே இல்லாத மரக்கறிகளுக்கு வீட்டுத்தோட்டம் செய்வோம் எனவும் பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பாக இருக்க வேண்டிய அக்கறையினையும் சுட்டிக் காட்டுகிறார்.
சிறுவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய பொழுதுபோக்குகளில் விளையாட்டு முதன்மையானது. அதனை பட்டம் பறக்குது என்ற பாடலில் மிகுந்த ஓசை ஒழுங்குடன் காட்டுகிறார்.
“ ஒற்றை நூலில் நின்று காற்றில் பட்டம் பறக்குது
உயர உயர விண்ணைத் தொட்டு பட்டம் பறக்குது”
என சிறுவர் மகிழ்ச்சிக்கும் அவர்களின் உடல்உள மேம்பாட்டுக்கும் வழிசமைக்கும் பாடலையும் தருகிறார்.
செம்மாதுளம்பூ (2010), நகர வீதிகளில் நதிப் பிரவாகம் (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் வண்ண வண்ணப் பூக்கள் (2015) என்ற சிறுவர் பாடல் தொகுப்பையும், எங்களில் ஒருத்தி (2017) என்ற சிறுகதைத் தொகுப்பையும் ஷெல்லிதாசன் வெளியிட்டிருக்கிறார். இலக்கியச் செயற்பாட்டுக்காக பல்வேறு பரிசுகள், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இச்சிறுவர் பாடல் தொகுப்பும் அவரின் தொடர்ச்சியான எழுத்து முயற்சிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
ஈழத்து சிறுவர் இலக்கியத்தில் இருக்கும் தேக்கத்தை உடைப்பதற்கு ஷெல்லிதாசன் போன்றோரின் இவ்வாறான தொகுப்புகள் தொடர்ந்து வெளிவரவேண்டும். சிறுவர்களின் வயது, உடல் – உள வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப எளிமையும் ஓசைஒழுங்கும் சொல்நேர்த்தியும் உள்ள பாடல்களை இத்தொகுப்பில் தந்துள்ளமை சிறுவர் பாடல்களை யாப்பதில் அவருக்குள்ள தேர்ச்சியைக் காட்டுகின்றது. பாடுபொருள்களிலும்கூட சிறுவர் மனவுலகத்திற்கு மிக அருகில் வரக்கூடிய பொருண்மைகளை எடுத்தாண்டிருப்பதும் இத்தொகுப்புக்கு வலிமை சேர்க்கிறது. சமூகஞ் சார்ந்த நேர்த்தியான தனது படைப்புக்களின் ஊடாக தொடர்ந்தும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஷெல்லிதாசனின் படைப்பு வல்லபம் தொடர்வதன் ஊடாக அவை ஈழப் படைப்புலகிற்கு வலிமை சேர்க்கும் என்று நம்பலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.