அதிபர் பொ.கனகசபாபதியின் பிறந்ததினம் செப்டெம்பர் 4, 2022!
அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை குருவீதியை வதிவிடமாகவும் கொண்டவர். 1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விலங்கியலுக்கான தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட பட்டதாரியான இவர் மகாஜனாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு விலங்கியல் ஆசிரியராகவும், அதன் பின் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் கல்லூரி அதிபராகவும் இணைந்து கடமையாற்றினார். இவரது காலத்தில் கல்வியில் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் கல்லூரி புகழ் பெற்றிருந்தது. இதைவிட ஏழாலை மத்திய மகாவித்தியாலயத்திலும், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியிருந்தார். அதன் பின் சிறிது காலம் நைஜீரியாவில் கடமையாற்றினார். அங்கிருந்து 1987 ஆம் ஆண்டு கனடா வந்தார். 1991 ஆம் ஆண்டு தமிழ் மொழியை ஒரு பாடமாகக் ஒன்ராறியோ கல்விச் சபைகளில் கற்பிப்பதற்கு முன்னின்று பாடுபட்டார்.
இவர் பல நூல்களை வெளியிட்டு இருந்தாலும், கடைசியாக இவர் ஆக்கியளித்த ‘எம்மை வாழ வைத்தவர்கள், ‘மரம் மாந்தர் மிருகம்’ என்ற நூல்கள் பலராலும் இன்றும் பேசப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழாவின் போது, ‘ஒரு அதிபரின் கூரிய பார்வை’ என்ற நூலும், 1998 இல் ‘பெற்றோர் பிள்ளைகள் உளவியல்’இ 2000 ஆண்டு மாறன் மணிக் கதைகள், 2008 ஆம் ஆண்டு மாறன் மணிக்கதைகள்-2, மனம் எங்கே போகிறது, திறவு கோல், ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன. ரொறன்ரோ கல்விச் சபையின் பல்கலாச்சார ஆலோசகராகவும், புலம் பெயர்ந்த சமூகத்திற்கு முக்;கியமான ஆலோசகராக இருந்து நல்வழிப்படுத்திய அவர், கனடா பழைய மாணவர்சங்கத்தின் ஆரம்பகால அங்கத்தவராய், தலைவராய், ஆலோசகராய் இருந்து வழிநடத்தினார். மகாஜனக்கல்லூரியின் மிகப் பெறுமதி மிக்க 100 ஆண்டு சிறப்புமலர் வெளியிடுவதில் சர்வதேச இணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயற்பட்டார்.
24-12-2014 ஆம் ஆண்டு எம்மைவிட்டுப் பிரிந்த அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் நினைவாக கனடாவில் ரொறன்ரோ மல்வேன் பூங்காவில் ‘நினைவுமரம்’ ஒன்று அவரது மாணவர்களாலும், நண்பர்களாலும் நடப்பட்டிருக்கின்றது. அவரிடம் கல்விகற்ற மாணவர்களும், நண்பர்களும் ஒவ்வொருவருடமும் இந்த நினைவு மரத்தடியில் அவரது பிறந்த தினமான செப்ரெம்பர் 4 ஆம் திகதி ஒன்றுகூடிக் கலந்துரையாடி நினைவுகூருவார்கள். அந்தவகையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 4-9-2022 அன்று மாணவர்கள், மன்றக் காப்பாளர்கள், நிர்வாகசபை உறுப்பினர்கள், குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள் ஒன்றுகூடினார்கள்.
அந்த நிகழ்வில் பல கல்விமான்களையும், வைத்தியக் கலாநிதிகளையும் எங்கள் சமூகத்துக்கு உருவாக்கித் தந்த பெருமை அதிபர் பொ. கனகசபாபதி அவர்களைச் சாரும் என்று பழைய மாணவர் சங்கத் தலைவர் சி. புவனச்சந்திரா தனது உரையில் குறிப்பிட்டார். திரு. குமார் புனிதவேல், எழுத்தாளர் குரு அரவிந்தன், காப்பாளர்களான நா.சாந்திநாதன், க.ஜெயேந்திரன், செ.சுப்ரமணியம் மற்றும் அதிபரின் மகள் மணிமொழி ஆகியோரும் உரையாற்றினார்கள். சங்கச் செயலாளர் ந. தனபால் நன்றியுரை வழங்கினார். குளிரையும் பொருட்படுத்தாது வருகை தந்த எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அதிபர் பொ.கனகசபாபதி அவர்களின் பெயரில் உள்ள நம்பிக்கைநிதியில் இருந்து விலங்கியலில் அதிக புள்ளிகள் எடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த, நிதிதேவைப்படும் தமிழ் மொழி மாணவர்களுக்கும், மகாஜனக்கல்லூரி மாணவருக்கும் நிதி உதவி செய்யவும் முன்மொழியப்பட்டது. இது பற்றி நிர்வாகசபையினர் அதிபரின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுத்தபின் விபரங்களை அறியத்தருவார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.