இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

அக் காலத்திய அரசியல் மேடைகள் இலக்கியமும் பேசின. பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், கம்பன் பற்றியேல்லாம் நான் மேடைகளில்தான் முதன்முதலாக அறிந்தேன். அவர்களது தமிழ்ப் பற்று என் நெஞ்சிலும் மூண்டெழுந்தது.

இளைஞனாக இருக்கும்போது சாவகச்சேரி சரஸ்வதி புத்தகசாலையில் நான் வாங்கிய புத்தகம் ‘பாரதியார் இன்கவித் திரட்டு’ என்கிற ராஜாஜி தொகுத்த புத்தகமாகும். அதில் எவ்வளவற்றைப் புரிந்துகொண்டேன் என்பதையெல்லாம் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் சுவையான விஷயம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தின் பெயரை ‘பாரதியாரின்’ ‘கவித்திரட்டு’ என்பதாகவே அப்போது நான் புரிந்துகொண்டிருந்தேன். பின்னால் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை நான் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தபோது,

அதை ‘பாரதியார்’ ‘இன்கவித்’ ‘திரட்டு’ என சரியாகப் பிரித்து பொருள்கொள்ளத் தெரிந்தேன்.

அப்போதே பாரதிதாசனின் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, சுத்தானந்த பாரதியாரின் ‘தமிழே தமிழே தமிழர்க்குயிரே’ போன்ற பாடல்களை பொருள் புரிந்து வாசிக்க முடிந்திருந்தது.

இவைபோலவேதான் திருக்குறளும், கம்பராமாயணமும் எனக்கு அறிமுகமானது மேடைகள் வழியாகத்தான்.

இந்தளவு பின்னணியோடு நான் க.பொ.த. உயர்தரம் புகுந்தபோது, தமிழ் பாடத் திட்டத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ‘இலக்கிய வழி’ நூலும் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே பாலபாடத்திலும், பாலபோதினியிலும், இலக்கிய மஞ்சரியிலும் என் இலக்கிய ரசனை வளர்ந்திருந்ததுபோல், ‘இலக்கிய வழி’ மூலமும் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தது.

அந்த நூல் வழிதான் எட்டுத் தொகைகளில் ஒன்றான கலித்தொகையில் என் பிடிப்பு இறுக்கமாக விழுந்தது.

நவீன இலக்கியத்தில் பிடிமானம் அதிகமாகயிருந்ததில் எஸ்.பொ.வும், மு.த.வும், இலங்கையர்கோனும், வ.அ.இராசரத்தினமும், டானியலும், டொமினிக் ஜீவாவும், நீர்வை பொன்னையனும் பிடித்திருந்த அளவுக்கு தமிழ் மரபிலக்கியவாதிகளான பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றோர் பிடித்திருக்கவில்லை. அந்த மனநிலையை அடியோடு மாற்றிய நூலாக ‘இலக்கிய வழி’ இருந்தது. அந்த நூலின் பதினெட்டாம் கட்டுரை அதைச் செய்தது.

கலித்தொகையை இன்றும் வேளையுள்ள வேளைகளிலெல்லாம் படிக்கிறேன் என்பதனாலும், அதில் நான் ரசிக்கும் பாடல்களுக்கு அறுபதுகளின் பிற்பகுதியில் செய்ததுபோல் இன்றும் எனது வலைப்பூவில் ரசனைக் குறிப்புகள் எழுதுகிறேன் என்பதாலும் என்னுள் ஆழமாக விழுந்துவிட்ட அந்தத் தொகைநூல்பற்றி, அதில் விழுந்த என் நாட்டத்தின் காரணம்பற்றி நான் சற்று விரிவாக எழுதத்தான் வேண்டும்.

பண்டிதமணியின் ‘இலக்கிய வழி’யில் வெளிவந்திருந்த பதினெட்டாம் பாட கட்டுரையின் பெயர் ‘நகைப் பூங்கொத்து’. அதில் ரசனை விளக்கம் பெற்றிருந்தது கலித்தொகையின் குறிஞ்சித் திணைப் பாடல்களில் பதினைந்தாவதாக வரும் ‘சுடர் தொடீஇ கேளாய்’ என்று தொடங்கும் பாடல்.

நான் கலித்தொகையை அறிந்ததும், படித்ததும் அந்த நூல்வழிதான்.

பாடத் திட்டத்திலுள்ள ஒரு நூலின் கட்டுரையானது அவ்வளவு கலாபூர்வமாக ஒருவரைப் பாதிக்க முடியுமென்பதை, அது எனக்கே சம்பவித்திருக்காவிட்டால் நான் நம்பியிருக்கவே மாட்டேன். தமிழாசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் பாடத்தை நடத்தியபோது, நான் கலித்தொகையுடன் கட்டுப்பட்டுப் போனேன் என்றுதான் இப்போது சொல்லத் தோன்றுகிறது. கூட, பண்டிதமணியின் எழுத்திலும். அது எஸ்.பொ. போன்றவர்களது எழுத்துப்போலில்லை. ஆனாலும் அதிலும் ஒரு மயக்கம் இருக்கவே செய்தது. அது பழந்தமிழ் இலக்கியத்துக்கான நடை.

குறிஞ்சிக் கலியின் அந்தப் பாடல் ஒரு சிறிய சிறுகதைபோன்றது. அந்தக் கதை இதுதான்:

ஊரிலுள்ள வாலிபனொருவன் ஒரு வீட்டிலே தாகத்துக்கு தண்ணீர் கேட்கிறான். தாய் மகளிடம் தண்ணீர் கொடுக்கச் சொல்கிறாள். மகள் தண்ணீரை பாத்திரத்திலெடுத்து அவனிடம் கொடுக்கச் செல்ல, வாலிபன் அவளது கையைப் பிடித்துக்கொள்கிறான். மகள், ‘அம்மா, இங்கே இவன் செய்வதைப் பார்’ என கத்துகிறாள். தாய் அவசரமாக அங்கே வர, ‘இவனுக்கு தண்ணீர் விக்கிவிட்டது’ என தாயிடம் பொய் சொல்கிறாள் மகள். தாய் அவனது முதுகை பரிவுடன் தடவிவிடுகிறாள். வாலிபனோ, மகளை கடைக் கண்ணால் கொல்வான்போல் பார்த்து நகைக்கூட்டம் செய்கிறான்.

கதை முடிகிறது; திரை விழுகிறது.

நான் படித்த முதல் கலித்தொகைப் பாடல் இதுதான். சொற்களின் வீச்சும், பாடலின் நாடகப் பாங்கும், கலிப்பாவின் இசைச் சிறப்பும் காரணங்களாய் பாடல் என்னை முற்றாகக் கவர்ந்துவிட்டது.

‘இலக்கிய வழி’ பாடப் புத்தகமாய் இருந்தவேளையில் பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளின் முதல் நாற்பது குறுவெண்பாக்களும் பாட நூலாக இருந்தன. தமிழிலக்கணத்துக்காய் ‘நன்னூ’லும் பாட நூலாக இருந்தது. இந்த முந்நூல்களின் பரிச்சயமும், முன்னர் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்க பள்ளியில் பாலபண்டிதர் பரீட்சைக்குப் படித்த கால பயிற்சியுமாகச் சேர்ந்து பாண் பாட்டுக்களை உரையுடன் வாசித்து புரிந்துகொள்ள முடியுமென்ற நம்பிக்கையைத் தந்தன.

நான் கலித்தொகையைத் தேடத் தொடங்கினேன். அது சுலபமாக அந்த வயதிலும், அந்தக் காலகட்டத்திலும் எனக்கு இருக்கவில்லை.

ஆனால் எதிர்பாராதவிதமாக கலித்தொகை நூலொன்றை யாழ்ப்பாணம் பெரியகடையிலுள்ள ஒரு புத்தகக் கடையில் இருக்கக் கண்டு, விலை சுமுகமாக இருந்தவகையில் வாங்கிக்கொண்டேன். அப்போது ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குழுவில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதனால் கலித்தொகையினுள்ளும் முழுமூச்சாக இறங்க முடியவில்லை என்னால். நேரம் கிடைக்கிறபோது கலித்தொகைப் பிரவேசம் இருந்தது. அக் காலகட்டத்தில்தான் கலித்தொகைக் காட்சிகள் என்ற தொடரை, எனக்குப் பிடித்திருந்த கலித்தொகைப் பாடல்களை முன்வைத்து ஈழநாடு வார இதழில் எழுதத் தொடங்கினேன்.

சுமார் பத்து தொடர்களை எழுதியிருப்பேன். அவற்றிலும் மூன்று நான்கு பகுதிகளே என் தொகுப்புக்கான தேடலில் கிடைத்தது.

ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு இந்த ஞாபகங்கள் மிக்க இனிமையாக இருக்கின்றன.

இதுதான் கலித்தொகை எனக்கு மிக நெருக்கமாக வந்த பாண்பாட்டுத் தொகை நூல் என்பதன் காரண விளக்கம்.

இனி கலித்தொகைபற்றி பொதுவான சில விஷயங்களைப் பார்க்கலாம்.

எட்டுத் தொகை நூல்களுள் 'கற்றறிந்தார் ஏற்றும் கலி'யென உரைக்கப்படுவது கலித்தொகை. 

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஒழுங்கில் சொல்லப்படும் மரபானது மீறப்பட்டு, பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என்ற திணை ஒழுங்கில் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. 

பாலைக் கலியை பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியை கபிலரும், மருதக் கலியை இளநாகனும், முல்லைக் கலியை நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினர் என்பது பொது வழக்கு. ஆனால் புலவர் நல்லந்துவனாரே இவ்வைந்து திணைகளையும் பாடினாரென்பார் கலித்தொகையை முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை (1887). இதை கே.என்.சிவராஜபிள்ளையும் எஸ்.வையாபுரிப் பிள்ளையும் ஆதரிப்பர். 

இது எப்படியாயினும், கலித்தொகையின் ஒவ்வொரு திணையையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புலவர்கள் பாடினர் என்பதே அதிக வழக்காறாய் உள்ளது. எனது வாசிப்பும், இவ்வைந்து திணைகளையும் ஐந்து புலவர்களே யாத்திருக்க முடியுமென்பதாகவே கணிக்க வைக்கிறது. நடை, சொல்லாட்சி, காட்சியை விரிக்கும் பாங்கு ஆகியவற்றிலிருந்து வந்த முடிவு.

இது, துறை வல்லுநர்களால் மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதென்பதே தமிழறிஞர் பலரது கருத்தாக இருக்கிறது. முடிவு எதுவாகயிருந்தாலும், இதன்மீதான எனது பற்றுமட்டும் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் புலவர்களை வைத்தல்ல, பாடல்களை வைத்தே என் கலித்தொகை விருப்பம் பிறந்தது என்பதனால் என்க.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்